சங்க கால இலக்கிய நெறி

சங்க கால இலக்கியம் என்பது வாழ்ந்த வாழ்க்கையைப் பொருளாய்க் கொண்டதாகும். எனவே இக்காலம் இயற்கை நெறிக்காலம் எனப்படுகிறது.சங்க கால மக்களின் வாழ்க்கையில் காணப்பட்ட போர் ஒழுக்கங்களும், காதல் ஒழுக்கங்களும் சங்க இலக்கியங்களில் பெயர்த்து வைக்கப்பட்டுள்ளன.

சங்க காலத்தில் வாழ்ந்த தமிழக மக்களின் வாழ்க்கையை நோக்கும்போது அவர்கள் நாகரீகத்தின் ஆரம்பப்படியில் நின்றனர் என்றே கொள்ள வேண்டும் என்பர் சமூகவியல் அறிஞர்கள். சங்க காலம் காட்டிய ஐவகை நிலப்பிரிவுகளும்,அந்நிலங்களின் வாழ்க்கை முறைகளும் இதனை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றன என்பது அறிஞர்களின் கருத்தாகும்.

குறிஞ்சி முதல் நெய்தல் ஈறாகவுள்ள நிலங்களின் வாழ்க்கை முறையை நோக்கும்போது அவை மனித நாகரீக வளர்ச்சியின் வெவ்வேறு படிமுறைகளைக் காட்டுவதாகவே அமைகின்றன. சங்க இலக்கியங்களைக் கொண்டு பார்க்கும்போது இக்கூற்று பொருந்துகின்றது.

சங்க இலக்கியங்களும் சங்க இலக்கியத்தின் இலக்கண நூலாகிய தொல்காப்பியமும் காட்டும் வாழ்க்கை நெறி 2 வகையாகக் காட்டப்படுகிறது.

  • 1. அகத்திணை வாழ்க்கை
  • 2. புறத்திணை வாழ்க்கை

மனிதனின் இன்ப வாழ்க்கையை உணர்த்தி நின்ற இலக்கியங்கள் அகத்திணை இலக்கியங்கள் என்றும், தனிமனிதன் சமூகத்தோடு தொடர்புகொண்டு வாழ முயன்ற வாழ்க்கையைக் காட்டுவது புறத்திணை இலக்கியங்கள் என்றும் கூறுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்க_கால_இலக்கிய_நெறி&oldid=918066" இலிருந்து மீள்விக்கப்பட்டது