சடங்கு (புதினம்)

சடங்கு

தொகு

செ. கணேசலிங்கனின் 1966 ல் வெளிவந்த இரண்டாவது புதினம் சடங்கு ஆகும். இப்புதினம் யாழ்ப்பாண வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட புதினமாகும். அதனால் தான் க. கைலாசபதி அவர்கள் யாழ்ப்பாணத்தையும், பிரபுத்துவத்தையும் சித்தரிக்கும் மூன்று புதினங்களில் ஒன்றாக இதனைக்குறிப்பிடுகிறார். மற்ற இரண்டு புதினங்கள் முதலாவதாக வந்த நீண்ட பயணமும் மூன்றாவதாக வந்த செவ்வானமும் ஆவன. இம்மூன்று நாவல்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கார்த்திகேசு சிவதம்பி[1] குறிப்பிடுகிறார். பொதுவாக யாழ்ப்பாண மக்கள், குறிப்பாக நாவல்கள்உம்யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த வெள்ளாளர்கள் இருபதாம் நூற்றாண்டின் இடைக் காலங்களில் சடங்குகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை இப்புதினம் விளக்குகிறது. சம்பிரதாயத்தை ஒட்டிய சடங்குகளுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு வாழ்வில் முக்கியமாக இருக்க வேண்டிய உள்ள ஒற்றுமை, மகிழ்வு ஆகியவை கவலைபடாமல் புறம் தள்ளப்படும் நிலையை இப்புதினம் கோடிட்டுக் காட்டுகிறது. யாழ்ப்பாணத்தைக் கதைக்களமாகக் கொண்டிருந்தாலும் தலை நகரான கொழும்பில் நிலவிய அரசியல் சூழலையும் இப்புதினம் சித்தரிக்கிறது.

திருமணமும் பிரபுத்துவ அமைப்பும்

தொகு

யாழ்ப்பாணத்தில் 20 ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் சீரும் சிறப்புடனும் இருந்தவை வெள்ளாளர்களின் கூட்டுக் குடும்பங்களே. இவை சாதிய வெறி உள்ளனவாகவும் பெண்களை அடிமைகளாகக் கொண்டனவாகவும் இயங்கி வந்தன. யாழ்ப்பாண வெள்ளாளர் குடும்பங்களை இணைப்பதற்கே திருமணங்கள் பயன்படுத்தப்பட்டன. மணம் செய்துகொள்ளுகிற ஆண் அல்லது பெண்ணின் ஆசை, எதிர்பார்ப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. குடும்ப நலனைக் கருத்தில் கொண்டே திருமணங்கள் முடிவு செய்யப்படுகின்றன. நடக்கவுள்ள திருமணத்தால் குடும்பங்களுக்கு ஏற்படும் நன்மையே கருத்தில் கொள்ளப்பட்டது. இந்நிலை மிகவும் பின்தங்கிய நிலை என்றும் முதலாளித்துவ அமைப்பில் மணவாழ்வை ஏற்கிற ஆண் அல்லது பெண்ணின் விருப்பம் அல்லது வெறுப்பு கருத்தில் கொள்ளப்பட்டே திருமணம் முடிவு செய்யப்படுகிற நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் கா. சிவத்தம்பி இந்நூலுக்கு எழுதிய முன்னுரையில்[2] குறிப்பிடுகிறார். இப்புதினத்தில் மணவாழ்வில் ஈடுபடவுள்ள இளைஞர்களின் ஆசாபாசங்கள் உதாசீனம் செய்யப்படுவதால் அவர்களின் மணவாழ்வு துயரம் மிகுந்து முறிவதோடு மட்டுமல்லாமல் எந்த குடும்ப நனலனுக்காக அவர்கள் திருமணத்தால் இணைக்கப்பட்டார்களோ அந்த குடும்பங்களையும் சிதைக்கின்றன.இக்கருத்தை நாவலாசிரியரான கணேசலிங்கன் நூலைப்பற்றிய சில குறிப்புகள் என்ற தலைப்பில் குறிப்பிடுவது [3]

கதையமைப்பு

தொகு

ஓய்வு பெற்ற ஆசிரியர் பொன்னம்பலத்தாருக்கும் செல்லத்தாச்சிக்கும் ஐந்து பிள்ளைகள். மூத்த பிள்ளை பத்மா என்கிற பெண். வயது 30 க்கு மேல் ஆகிவிட்டது. இரண்டாவது பிள்ளை பரந்தாமன் என்கிற பையன். அவன் கொழும்பில் கிளர்க்காக வேலை பார்த்து வந்தான். அதற்கு அடுத்து இரண்டு மகள்கள். ஒருவர் பெயர் தவ மலர் மற்றவர் பெயர் தவராணி. கடைசிக்குழந்தை பையன். அவன் பெயர் கந்தசாமி. பரந்தாமன் அப்பாசொல் தட்டாத பிள்ளை. ஆனால் கந்தசாமியோ முற்றிலும் மாறுபட்ட சீர்திருத்த கருத்துக்கொண்ட தொழிற்சங்கவாதி. இவர்கள் யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள ஆலையூர் என்ற ஊரில் வாழ்ந்து வந்தனர்.

பத்மாவும் வேறு சாதியைச் சேர்ந்த ராசரத்தினமும் காதலர்கள். சாதி வெறியும் வேதாந்த பற்றும் மிகுந்த பொன்னம்பலத்தார்அவர் காதலை எதிர்த்தார். கண்ணுக்கு அழகான இராசரத்தினத்தை பத்மா மணப்பதை செல்லத்தாச்சி ஆதரித்தாள். அதன் விளைவு பத்மாவின் சுதந்திரம் பறிபோகியது. கந்தையா என்ற உறவினர் உதவியுடன் பத்மாவை கோண்டாவென்னும் ஊரில் உள்ள புகையிலை வியாபாரி இராச துரை, அழகம்மா ஆகியோரின் வீட்டில் பொன்னம்பலத்தார் பெண் கொடுத்து பெண் எடுக்க முடிவு செய்கின்றார். பத்மா மாப்பிள்ளையை விட இரண்டு வயது கூட இருந்ததால் அவள் அவலட்சணமான சிவஞானத்தை மணக்க நேர்ந்தது. அவள் தம்பி பரந்தாமனும் தனது அக்காள் பத்மாவின் திருமணம் எப்படியாவது நடக்க வேண்டும் என்ற உறுதியுடன் அழகு குன்றிய ஈஸ்வரியை மணந்து இன்பம் இன்றி வாழ்வை கடமையாக ஆற்றுகின்றான். இவர்களின் திருமணத்துக்குப்பின்னர் செல்லாச்சி சொல்லுவது “என்ற பிளைகளுக்கு கடைசியாய் இப்படிப் பிடிக்காத கல்யாணத்தையா கட்டி வைக்க வேணும்?” என்ற கூற்று நடந்துமுடிந்துவிட்ட திருமணங்களின் ஒவ்வாமையைக் காட்டுகிறது.

இராசரத்தினம் குறைந்த ஊதியத்துடன் வாழ்வை தொடங்க திணறும் பரந்தாமனுக்கு கொழும்பில் வீடு கொடுத்து உதவுகிறான். பின்னர் ஈசுவரி வந்ததும் அவளின் மரியாதையையும் பரிவையும் பெருகிறான். சாதி கலவரச்சமயத்தில் குழந்தை பேற்றை எதிர் நோக்கி இருக்கும் ஈசுவரியை கோண்டாவில் உள்ள அவள் வீட்டுக்கு கொண்டுவந்து விடுகிறான். கோண்டாவில் உள்ள ஈசுவரியின் பெற்றோர்களும் ராசரத்தினத்தை மதிக்கிறார்கள். ஆசிரியர் தொழிலில் உள்ள சிவஞானம் மாற்றப்படுகிறான். அவன் அருகிலுள்ள ஊருக்கு மாற்றம் பெற இராசரத்தினம் அவனது செல்வாக்கப் பயன்படுத்தி எம் பி ஒருவரிடம் உதவி பெற்று உதவுகிறான். பத்மாவின் கணவன் மாற்றம் பெற உதவி கேட்க இருமுறை பத்மா ராசரத்தினத்துடன் செல்ல நேர்ந்தது. முதல் முறை பத்மா, ஈசுவரி இருவரும் இராசரத்தினத்துடன் யாழ்ப்பாணத்துக்குச் சென்றனர். ஆனால் எம். பி வீட்டில் இல்லாத்தால் அடுத்த நாள் அவர்கள் போக திட்டமிட்டனர். அன்று பத்மாவுடன் வர இருந்த ஈசுவரி தனது இரண்டாவது குழந்தையின் பிரசவத்துக்காக கோண்டாவில் இருந்தவள் நோய் வாய்ப்படவே பத்மா இராசரத்தினத்துடன் தனியே யாழ்ப்பணத்துக்குப் போக நேர்ந்தது. அப்போது இராசரத்தினத்துடன் தனியே பத்மா கார் பின் சீட்டில் டிரைவரைக்காணாததால் பேச நேர்ந்தது. மாற்றல் பெற்ற சிவஞானம் காதலர்கள் தனியே பேசிகொண்ட செய்திகேட்டு பத்மாவை ஒரு நாள் இழிவாகப்பேசுகிறான். அவமானம் தாங்காத பத்மா தற்கொலை செய்துகொண்டு இறக்கிறாள்.

சடங்குகள்

தொகு

யாழ்ப்பாணத்திலே பெரும் செல்வாக்குடன் வாழ்ந்து வந்த வெள்ளாளர்கள் இலலத்தில் நிகழும் பல்வகையான சடங்குகளின் குறிப்புகள் இப்புதினத்திலே காணப்படுகின்றன. வாழ்விலும், சாவிலும் சடங்குகள் பெறும் முக்கியத்துவத்தை இப்புதினம் விளக்குகிறது. எடுத்துக்காட்டாக ஆலையூர் பொன்னம்பலத்தார் வீட்டிலும் கோண்டாவில் இராசதுரை வீட்டிலும் நடக்கும் நாளுக்குப் பந்தக்கால் நடும் சடங்கும், நாளுக்குப் பொன் உருக்கும் சடங்கும், திருமணத்தன்று காலை பத்து மணிக்கு நடக்கும் சாமர்த்தியச் சடங்கும், இரவு பத்து மணிக்கு நடக்கும் தாலி கட்டு சடங்கும், இன்ன பிற சடங்குகளும் பெரிதும் பேசப்படுகின்றன.

சடங்குகளும் கரணங்களும்

தொகு

கார்த்திகேசு சிவதம்பி, தமிழ்த்துறை, வித்தியோதயப்பல்கலைக்கழகம் இலங்கை, இந்நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் [4] யாழ்ப்பாண நிலப்பிரபுத்துவம் [5] எப்படி ஐரோப்பிய பிரபுத்துவத்தில் இருந்தும், இந்தியப் பிரபுத்துவத்தில் இருந்தும், மட்டக்களப்பு பிரபுத்துவத்தில்[6] இருந்தும் மாறுபட்டது என்பதை விளக்கிக் கூறுகிறார். யாழ்ப்பாணத்தின் பிரபுத்துவ சமுதாயத்தில் கூட்டுக்குடும்பம் முக்கிய இடத்தைப் பெருகிறது என்பதை சுட்டிக்காட்டி இப்புதினத்தில் இரண்டு கூட்டுக்குடும்பங்களின் நலன் கருதி நடைபெறும் திருமணங்கள் எப்படி சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு வாழ்வில் வெற்றியடைய தவறுகின்றன என்பதைச்சுட்டிக்காட்டுகிறார். இவர் அன்றாட வாழ்வின் நடைமுறைகளை கரணங்கள் (Rituals) என்று குறிப்பிடுகிறார். கரணங்களின் தொகுதியே சடங்குகள்(Ceremonies) என்றும் குறிப்பிடுகிறார். சடங்குகளின் தன்மையை கரணங்களின் மூலம் அறியலாம் என்றும் கூறுகிறார். மனிதவாழ்வை பெரிதும் பாதிப்பது திருமணச்சடங்கே. எனவே யாழ்ப்பாண பேச்சு வழக்கில் சடங்கு என்னும் சொல் திருமணத்தை குறிக்கும் நிலையைக்கருத்தில் கொண்டு இப்புதினத்தில் நிகழும் இரு திருமணங்களைக் கருப்பொருளாக அமைக்கப்பட்டுள்ளதால் இப்புதினத்திற்கு சடங்கு என்று பெயர் கொடுத்திருப்பது பொருத்தமானதாகும்.

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. செ. கணேசலிங்கனின் படைப்புலகம் (2008) என்ற நூலில் தமிழ் நாவலின் யதார்த்த மரபின் வளர்ச்சியில் செ. கணேசலிங்கன் பெறும் இடம் பற்றிய குறிப்பு என்ற கட்டுரையில்
  2. சமுதாயம், சடங்கு, எழுத்து என்ற தலைப்பைக் கொண்ட 09-12- 1966 என்ற தேதியிட்ட முன்னுரையில்
  3. பக்கம் 3 நூலின் முதற்பதிப்பு (1966) வாழப்போகும் இருவரது அக உணர்வுகள் அங்கு புறக்கணிக்கப்பட்டு புறச்சடங்குகள் மட்டுமே உயர்வாக நடாத்தப்படுகின்றன. இப்போக்கினைத் திருமணச்சடங்கின் போது மட்டுமல்ல மரணச்சடங்கின் போதும் காணலாம்
  4. பக்கங்கள் 5-14
  5. இது முழுக்க முழுக்க வெள்ளாளர்களைக் கொண்டது
  6. இதில் வெள்ளாளர்களை போலவே முஸ்லீம்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சடங்கு_(புதினம்)&oldid=2754167" இலிருந்து மீள்விக்கப்பட்டது