சரியை சைவ நாற்பாதங்களில் முதலாவது படியாகக் கூறப்படுவதாகும். அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும். இலகுவில் செய்யக்கூடிய ஆரம்ப முயற்சியான இதற்குத் தூய தெய்வ பக்தியில் இறையம்சமும் துணை நிற்கவேண்டும். இந்நெறியில் நிற்போர் சிவனை ஆண்டானாகவும் தம்மை அடிமையாகவும் கொள்ளும் தாச மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாவர். தாச மார்க்கம் பற்றித் திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.

எளிய நல் தீபம் இடல் மலர் கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ்சனம் ஆதி
தளி தொழில் செய்வது தான் தாச மார்க்கமே.(திருமந்திரம்)

இந்நெறி நிற்போர் சாலோக முத்தியையும், சிவனின் உலகை அடைதலாகிய சிவலோகத்தையும் பெறுவர்.

சரியைத் தொண்டுகள்

தொகு

ஆலயங்களில் இறைவனை வழிபடல், வழிபாட்டின் பொருட்டுத் திருக்கோயிலைக் கூட்டுதல், மெழுகுதல், கழுவுதல், திருவிளக்கு ஏற்றல், திருநந்தவனம் அமைத்தல், பூ எடுத்தல், பூமாலை தொடுத்தல், பூசைத் திரவியம் கொடுத்தல், பூசைக்குரிய பொருட்களைத் துலக்கிச்சுத்தம் செய்தல், தீவர்த்தி, குடை, கொடி, ஆலவட்டம் பிடித்தல், வாகனம் துடைத்தல், கழுவுதல், இறைவன் புகழ் பாடுதல், சிவனடியார்களைக் கண்டால் அவர்களை வணங்கி அவர்களுக்குச் சேவை செய்தல், உழவாரப்பணி செய்தல், பழங்கோயில்களை வேண்டும் அளவில் புதுப்பித்தல், புராணபடனம் செய்தல், கேட்டல், புராணக் கதை படித்தல், யாத்திரை செய்தல் ஆகியவை சரியைத் தொண்டுகளாகும்.

சரியையின் வகைகள்

தொகு
  • சரியையிற் சரியை - சரியை நெறியில் திருக்கோயிலில் திருவிளக்கிடுதல் முதலான தொண்டுகள்.
  • சரியையிற் கிரியை - ஒருமூர்த்தியை வழிபடல்.
  • சரியையில் ஞானம் - சரியை வழிபாட்டால் அனுபவம் வாய்க்கப் பெறுவது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரியை&oldid=3296158" இலிருந்து மீள்விக்கப்பட்டது