சல்பைட்டு எசுத்தர்
சல்பைட்டு எசுத்தர் (sulfite ester) என்பது (RO)(R'O)SO என்ற கட்டமைப்பில் அமைந்த ஒரு வேதி வினைக்குழுவாகும். கந்தக அணுவின் மீது தனி இணை எலக்ட்ரான்கள் இருக்கின்ற காரணத்தால் இக்குழுவில் உள்ள சேர்மங்கள் முக்கோணக் கூர்நுனி மூலக்கூற்று வடிவத்தை ஏற்கின்றன. R மற்றும் R' பதிலீடுகள் வேறுபட்டு நாற்தொகுதி கந்தக மையத்தை உருவாக்கி சேர்மம் படியா மூலக்கூற்று சீர்மை கொண்டதாக உருவாகிறது. ஒருவேளை R குழுக்கள் ஒன்றாக இருக்குமேயானால் சேர்மம் நல்லியல் Cs மூலக்கூற்று சீர்மை கொண்டதாக உருவாகிறது. அவை பொதுவாக தயோனைல் குளோரைடுடன் ஆல்ககால்களை வினைப்படுத்தி தயாரிக்கப்படுகின்றன [1]. இவ்வினை குறிப்பாக அறை வெப்பநிலையில் நிகழ்த்தப்படுகிறது. இதனால் ஆல்ககால் குளோரோ ஆல்க்கீனாக மாற்றப்படுவது தடுக்கப்படுகிறது. பிரிடின் போன்ற காரங்களும் இவ்வினையை நிகழ்த்த பயன்படுத்தப்படுகின்றன.
- 2 ROH + SOCl2 → (RO)2SO + 2 HCl
எண்டோசல்பான் என்ற பூச்சிக்கொல்லி ஒரு சல்பைட்டு எசுத்தராகும். எத்திலீன் சல்பைட்டு, டைமெத்தில் சல்பைட்டு, டைபீனைல் சல்பைட்டு போன்ற சேர்மங்கள் எளிய உதாரணங்களாகும். பல சல்பைட்டு எசுத்தர் மாதிரிகள் சர்க்கரை போன்ற டையால்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. சல்பைட்டு எசுத்தர்கள் வலிமையான ஆல்க்கைலேற்றும் மற்றும் ஐதராக்சி ஆல்க்கைலேற்றும் முகவர்களாக செயல்பட இயன்றவையாகும் [2].
மேற்கோள்கள்
தொகு- ↑ McCormack, W. B.; Lawes, B. C. "Sulfuric and sulfurous esters" Kirk-Othmer Encycl. Chem. Technol., 3rd Ed. (1983), 22, 233-54.எஆசு:10.1002/0471238961.1921120613030315.a01
- ↑ van Woerden, H. F.. "Organic Sulfites.". Chemical Reviews 63 (6): 557–571. doi:10.1021/cr60226a001.