சாக்கிய நாயனார்

சைவ சமய 63 நாயன்மார்களில், 'வேளாளர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மார்.

சாக்கிய நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் திருச்சங்கமங்கையில் வேளாளர் குடியில் தோன்றினார்.[1][2] எவ்வுயிர்க்கும் அருளுடையாராய்ப் பிறவாநிலை பெற விரும்பிக் காஞ்சிநகரத்தை அடைந்து புத்தசமயத்தை மேற்கொண்டிருந்தார். இறைவன் திருவருள் கூடுதலாற் புத்தம் முதலியன புறச்சமயச் சார்புகள் அல்ல என்றும், ஈறில் சிவநன்நெறியே பொருளாவதென்றும் துணியும் நல்லுணர்வு கைவரப்பெற்றார். “செய்யப்படும் வினையும், அவ்வினையைச் செய்கின்ற உயிரும், அவ்வினையின் பயனும், அப்பயனைச் செய்த உயிர்க்கே சேர்ப்பிக்கும் இறைவனும் எனச் சைவசமயத்தில் கூறப்பட்ட பொருள் நான்காகும். இப்பொருட்பாகுபாடு சிவநெறியல்லாத பிறசமயத்தில் இல்லை” எனத்தெளிந்து கொண்டார். உயிர்களை உய்விக்கும் மெய்ப்பொருள் சிவமே, எந்த நிலையில் நின்றாலும் எக்கோலங்கொண்டாலும் சிவனடியினை மறவாது போற்றுதலே உறுதிப்பொருளாகும்” என்று ஆராய்ந்து துணிந்து தாம் கொண்ட புத்தசமய வேடத்துடனேயே சிவபெருமானை மறவாது போற்றுவராயினர்.

சாக்கிய நாயனார்
பெயர்:சாக்கிய நாயனார்
குலம்:வேளாளர்
பூசை நாள்:மார்கழி பூராடம்
அவதாரத் தலம்:திருச்சங்கமங்கை
முக்தித் தலம்:திருச்சங்கமங்கை
வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் – திருத்தொண்டத் தொகை

அருவமாகியும், உருவமாகியும் உள்ள எல்லாப் பொருள்களுக்கும் காரணமாய் இறைவனுக்குத் திருமேனியாகிய சிவலிங்கத்தின் பெருமையுணர்ந்து நாள்தோறும் அதனை வழிபட்ட பின்னரே உண்ணுதல் வேண்டும் என விரும்பினார். தாம் இருக்கும் இடத்திற்கு அண்மையில் வெட்ட வெளியிலே அமைந்துள்ள சிவலிங்கத்தினைச் சென்று கண்டு பெருமகிழ்ச்சி கொண்டவராய், அம்மகிழ்ச்சியின் விளைவாய் ஒன்றுந் தோன்றாது அருகிற்கிடந்த செங்கற்சல்லியை எடுத்து அதன்மேல் எறிந்தார். இளம்புதல்வர் இகழ்வனவே செய்தாலும் அச்செயல் தந்தையார்க்கு உவப்பனாற்போன்று, சாக்கியர் செய்த இதுவும் சிவபெருமானுக்கு உவப்பாயிற்று. இறைவன் அவர் அன்பினால் எறிந்த கற்களை நறுமலர்களாகவே ஏற்றுக்கொண்டார். சாக்கியர் அன்றுபோய் மறுநாள் அங்கு வந்தபொழுது முதல்நாள் தாம் சிவலிங்கத் திருமேனியின் மேல் செங்கல் எறிந்த குறிப்பினை எண்ணி, ‘நேற்று இந்த எண்ணம் நிகழ்ந்தது இறைவன் திருவருளே’ என்று துணிந்து அதனையே தாம் செய்யும் வழிபாடாகக் கருதி எப்பொழுதும் அப்படியே செய்து வந்தார்.

ஒருநாள் சாக்கியர் அச்செயலை மறந்து உணவு உண்ண ஆயத்தமான போது ‘இன்று எம் பெருமானைக் கல்லால் எறிய மறந்துவிட்டேன்’ என்று விரைந்தோடிச் சிவலிங்கத்தின் முன்சென்று ஆராத வேட்கையால் ஒரு கல்லை எடுத்து அதன்மேல் எறிந்தார். அவரது அன்பிற்கு உவந்த சிவபெருமான் விடைமீது உமையம்மையாருடன் தோன்றி அருளினார். அத்தெய்வக்காட்சியைக் கண்ட சாக்கிய நாயனார், தலைமேல் இருகைகளையும் குவித்து நிலமிசை வீழ்ந்திறைஞ்சினார். சிவபெருமான் சிவலோகத்தில் தம்பக்கத்தேயிருக்கும் பெருஞ்சிறப்பினை அவர்க்கு அருளினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 63 நாயன்மார்கள், ed. (20 ஜனவரி 2011). சாக்கிய நாயனார். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: numeric names: editors list (link)
  2. மகான்கள், ed. (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)
  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்கிய_நாயனார்&oldid=3959893" இலிருந்து மீள்விக்கப்பட்டது