சாக்குருவி ஆந்தை

பறவை துணை இனம்

சாக்குருவி ஆந்தை (indian barn owl, உயிரியல் பெயர்: Tyto alba stertens) என்பது கூகை ஆந்தையின் துணை இனம் ஆகும்.

விளக்கம் தொகு

சாக்குருவி ஆந்தை காக்கையைவிட அளவில் சற்று சிறியதாக சுமார் 36 செ. மீ. நீளம் இருக்கும். இதன் அலகு இளஞ்சிவப்புத் தோய்ந்த வெண்மையாக இருக்கும். விழிப்படலம் ஆழ்ந்த பழுப்பாக இருக்கும். கால்கள் பழுப்பு கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். இதன் முகம் பெரிய வடிவில் இருக்கும். இதய வடிவமான வெண்மையான இதன் முகம் குரங்கு போன்ற தோற்றம் கொண்டது. முகத்தைச் சுற்றி பலவித நிறத்திலுள்ள தூவிகள் விரைப்பாக நிற்கும். உடலின் மேற்பகுதி பொன்னிறமான வெளிர் மஞ்சளாக சாம்பல் நிறம் தோய்ந்து இருக்கும், அதில் கறுப்பு, வெள்ளைப் புள்ளிகளால் ஆன கோடுகள் இருக்கும். இப்பறவையின் தோள்பட்டையும், இறகுகளும் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். உடலின் அடிப்பகுதி வெண்மையான வெளிர் மஞ்சள் தோய்ந்து காணப்படும், அதில் ஆழ்ந்த பழுப்புப் புள்ளிகளும் இருக்கும். ஆண் பெண் பறவைகளுக்கு இடையில் பெரியதாக வேறுபாடு ஏதும் இல்லை.[1]

பரவலும் வாழிடமும் தொகு

சாக்குருவி ஆந்தையாவானது தென்னிந்தியா முழுவதும் காணப்படுகிறது. இவை விளை நிலங்களையும், மக்கள் வாழ்விடங்களையும் அடுத்துள்ள பகுதிகளிலும் உள்ள பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகள், பயன்படுத்தப்பட்டாத கிணறு குளங்கள்கள் ஆகிய இடங்களில் பகலில் தங்கி இருக்கும். மலைகளில் சுமார் 1000 மீட்டர் உயரம் வரை ஆங்காங்கு காண இயலும்.[1]

நடத்தை தொகு

சாக்குருவி ஆந்தைகள் தாங்கள் தங்கியுள்ள இடங்களில் இருந்து காலை, மாலை அந்திவேளைகளில் வெளிப்படும். காகம் உள்ளிட்ட பறவைகளுக்கு அஞ்சி இது பகலில் வெளிவருவது இல்லை. சூரிய வெளிச்சம், பளபளப்பான ஒளியைத் தாங்கும் ஆற்றல் இவற்றின் கண்களுக்கு இல்லை. ஆனால் பகலில் இதற்கு முழுமையாக கண் தெரியாது என்பதற்கில்லை. இவை சிட்டுக்குருவி, வௌவால், எலி, சுண்டெலி ஆகியவற்றை உணவாக கொள்ளும். பலவகை கிறீச் குரலில் இவை அலறும். மேல் அலகையும் கீழ் அலகையும் ஒன்ற்றாக தட்டி தன் கோபத்தை வெளிப்படுத்தும்.[1]

இனப்பெருக்கம் தொகு

இவை ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யக்கூடியன. மரப் பொந்துகளிலும், பாழடைந்த கட்டடங்களில் காணப்படும் புழைகளில் கூடமைக்கும். இவை நான்கு முதல் ஏழு வரையிலான வெண்மையான வழவழப்பான முட்டைகளை 48 மணிநேர இடைவெளியில் ஒவ்வெரு முட்டையாக இடும். பெண் பறவை சுமார் 32 முதல் 34 நாட்கள் வரை அடைகாக்கும்.[1]

பண்பாட்டில் தொகு

இந்த ஆந்தை அலறுவது ஒரு தீநிமித்தம் என்ற நம்பிக்கை தமிழ்ச் சமூகத்தில் உள்ளது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 255-257. 
  2. சாக்குருவி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்குருவி_ஆந்தை&oldid=3782549" இலிருந்து மீள்விக்கப்பட்டது