சாமியாட்டம்

சாமியாடுதல் என்பது கிராமங்களில் காணப்படும் ஒருவித வழிபாட்டு முறையாகும். குறிப்பிட்ட சிறுதெய்வம் மற்றும் பெருந்தெய்வம் ஒன்றின் சக்தி ஒருவர் மீது ஆட்கொள்ளப்படுவதாக நம்பப்படுகிறது. அவ்வாறு சக்தியேறப் பெற்றவர் அருளாடி, மருளாடி மற்றும் சாமியாடி என்று அழைக்கப்படுவார். தெய்வத்திற்குச் செய்யும் அலங்காரம் மற்றும் அர்ச்சனைகளை சாமியாடிக்கும் செய்வர்.

அருள் நிலையில் சாமியாட்டம்

கேள்வி கேட்டல் அல்லது குறைகளைக் கூறுதல்

தொகு

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு வேண்டி அருளாடியிடம் குறைகளைக் கூறுவார்கள். தன்வயம் இழந்த ஆவேச நிலையில் அவர் அக்குறைகளுக்குத் தீர்வோ பரிகாரமோ சொல்லுவார். பெரும்பாலும் சாமியாடுபவர்கள் கேட்பவர்களின் உளக்குறிப்புணர்ந்து அவர்களுடைய குறைகளைச் சொல்லி விடுவார்கள். அது விநோதமான சங்கேத முறையிலான சொற்களால் அமைந்திருக்கும்.

 
அரிவாள் மீது நின்று சாமியாடுதல்

சாமியாடும் முறை

தொகு

சாமியாடுபவர்கள் நீண்ட சடைமுடி வளர்த்திருப்பார்கள். காதில் வளையம் அணிந்திருப்பார்கள். வாழ்க்கை முழுவதும் புலால், மது போன்றவற்றைத் தவிர்ப்பார்கள். இதில் புலாலுக்கு விதிவிலக்கு உண்டு. வழிபடும் தெய்வங்களுக்கு ஏற்ப அது மாறுபடும். விழாக்காலங்களில் தெய்வத்தைப் போலவே மலர் மாலைகளாலும் வண்ண ஆடைகளாலும் அலங்கரிப்பர். சாமியாடுபவர் அரிவாள், கத்தி, குறுவாள், சாட்டை, தண்டம், வேல் போன்ற கருவிகளைக் கையில் வைத்திருப்பார். இடுப்பிலும் மார்பிலும் சலங்கைகளும் மணிகளும் தொங்கவிடப்பட்டிருக்கும். அவை அந்தத் தெய்வத்தின் சாட்சியாக விளங்கும். சாமியாடி சாம்பிராணி, ஊதுவத்தி முதலிய நறுமணப் புகையை முகந்தோ, விளக்கொளியை உற்றுப் பார்த்தோ தன்மீது சக்தியை இறக்குவார். அவருடைய குரல் அப்பொழுதில் சற்று அச்சமூட்டுவதாகவும் இருக்கும்.

ஆட்ட நிலை

தொகு

உச்சநிலையில் தாளவாத்தியக்காரர்கள் சூழ நின்று இசைக்க சாமியாடி அதற்கேற்ப நாட்டியம் ஆடுவார். அது சாமியாட்டம் என்றே அழைக்கப்படும். கால்களை மாற்றி கைகளை உயர்த்தி கருவிகளை ஆட்டிக் கொண்டு சுழன்று சுழன்று ஆடுவார். சிலர் அரிவாள் மீதும், ஆணிச்செருப்புகளின் மீதும் நின்றபடி ஆடுவர். அப்போது பெண்கள் குலவையிடுவதும் உண்டு.

வழங்கல்

தொகு

சாமியாடுபவரிடமிருந்து திருநீறு பெறுவது முக்கிய நிகழ்வாகும். அனைவரும் அவருடைய காலில் விழுந்து வணங்குவர். சில சாமியாடிகள் திருநீற்றோடு எலுமிச்சம்பழமும் தருவர். அவர் தரும் எலுமிச்சம்பழம் மிகுந்த சக்தியுடையதாக நம்பப்படுகிறது.

 
அருள்நிலையில் சாமியாடி

மலையேறுதல்

தொகு

சக்தி நிலை நீங்கப் பெறுவதை மலையேறுதல் என்று குறிப்பிடுவர். உடலை முறுக்கிக் கொண்டு உரத்த குரலில் ஓங்கரித்துப் பின்னர் மெல்ல மெல்ல மயக்க நிலைக்குச் செல்வதே மலையேறுதல் ஆகும். சிறிது நேர மயக்கத்திற்குப் பின்னர் சாமியாடி இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமியாட்டம்&oldid=3900255" இலிருந்து மீள்விக்கப்பட்டது