சாய்வான கோபுர மாயை
சாய்ந்த கோபுர கண்மாயை (leaning tower illusion) என்பது பைசாவின் சாய்ந்த கோபுரத்தின் ஒற்றைப் படத்தின் இரு பிரதிகளில் காணப்பட்ட ஓர் கண்மாயையாகும். படங்கள் பிரதிகளாக இருந்தாலும், வலதுபுறத்தில் உள்ள கோபுரம் வேறு கோணத்தில் இருந்து புகைப்படம் எடுத்தது போல, மேலும் சற்று சாய்ந்தாற்போல தோற்றமளிக்கிறது. இந்த மாயையை ஃபிரடெரிக் கிங்டம், அலி யூனேசி, எலேனா கியெர்குயூ ஆகியோரால் மெக்கில் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 2007 ஆம் ஆண்டின் சிறந்த ஒளியியற் கண்மாயம் போட்டியில் சிறந்த மாயைக்கான முதல் பரிசைப் பெற்றது.[1] சில ஆசிரியர்கள், கட்புல அமைப்பானது தோற்றத்தை எடுத்துக்கொள்ளும் விதத்தினால் இந்த மாயை ஏற்படுகிறது என்கின்றனர்[2][3]
ஒரே மாதிரியான இணையாக உயரும் இரண்டு கோபுரங்களைக் கீழே இருந்து பார்க்கும் போது, அவற்றின் தொடர்புடைய வெளிப்புறங்கள் காட்சிகோணத்தினால் விழித்திரை படலத்தில் ஒன்றிணைகின்றன. கட்புல அமைப்பு தோற்றச் சிதைவை சரிசெய்து இரு படங்களையும் சரியாகப் பார்க்கும்படிச் செய்யும், அதாவது இரண்டும் இணையாக உயருவது போலக் காணச் செய்யும். ஆயினும் பைசா கோபுரத்தின் இரண்டு முற்றொத்த படங்களில் அவற்றின் வெளிப்புற வரிவடிவங்கள் ஒருங்கிணையாமல், இணையாகச் செல்வதால், கோபுரங்கள் இரண்டும் இணையாக இல்லாது வேறுபட்டவைபோலக் காணப்படுகின்றன. கட்புல அமைப்பானது இரு பிம்பங்களையும் ஒரே காட்சியின் பகுதிகளாகக் கருதுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது "பிசாவின் இரட்டை கோபுரங்களாக" காணச் செய்கிறது.