சாரா கார்னெசன்

தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடியவர்களுள் ஒருவர்

சாரா கார்னெசன் (Sarah Carneson) (17 சூன் 1916 – 30 அக்டோபர் 2015) என்பவர் தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக்கு எதிராகப் போராடியவர்களுள் ஒருவராவார். அங்குள்ள தொழிலாளர்களை அமைப்பு ரீதியாக ஒருங்கிணைப்பதில் பெரும் பங்கு வகித்தவர். இரண்டாம் உலக யுத்தத்திற்கு எதிராகவும், எதேச்சதிகார, பாசிச அரசை எதிர்த்து போராடியவர். தன் வாழ்நாள் முழுவதும் தொழிலாளர் நலனுக்காகவே வாழ்ந்தவர்தான் சாரா கார்னெசன் (Sarah Carneson) ஆவார். அவர் இறக்கும் வரை ஒரு சமூக போராளியாக வாழ்ந்து, மறைந்தார். [1]

பிறப்பு

தொகு

பிறப்பு சாராவின் பெற்றோர்கள் இருவரும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து தென்னாப்பிரிக்காவில் குடியேறியவர்கள் ஆவார். இவரது தந்தை ஸெலிக் ரூபின் (Zelic Rubin) ஒரு தையல்காரர் மற்றும் லிதுவேனியாவைச் சேர்ந்தவர். தாயார் அன்னா ரூபின். இவர் ரஷ்யாவை சேர்ந்த இவர்கள் இருவரும் தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியை (SACP) நிறுவியவர்களில் மிக முக்கியமானவர்கள் இந்த பெற்றோருக்கு மகளாக சாரா 1916 ஆம் ஆண்டில் ஜொகனெஸ்பர்க் என்னும் நகரில் பிறந்தார்.

தொழில்

தொகு

சாரா தனது 15 ஆவது வயதிலேயே இளம் கம்யூனிஸ்ட் லீக்கில் உறுப்பினர் ஆனார். பின்னர் தனது 18 ஆவது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக சேர்ந்தார். கட்சி அலுவலகத்தில் எழுதப் படிக்கத் தெரியாத தொழிலாளர்களுக்கு இரவு பள்ளி மூலம் எழுதப் படிக்க கற்றுத் தந்தார். ஒரு இளம் பெண்ணாக பாசிசம் மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு எதிராக முழு நேரமும் போராடினார். அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராகவும் செயல்பட்டார். மேலும் கட்சியின் புத்தகக் கடையிலும் பணியாற்றினார். தொழிற்சங்கப் பணிகளிலும் சாரா தன்னை இணைத்துக் கொண்டார். அவர் 1936 முதல் 1940 வரை டர்பன் நகரில் புகையிலைத் தொழிலாளர்கள் மற்றும் இந்திய சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளராக இருந்து, அவர்களின் நலனுக்காகப் பாடுப்பட்டார். பின்னர் தென்னாப்பிரிக்க ரயில்வே மற்றும் துறைமுக தொழிலாளர்கள் சங்கங்களின் பொதுச் செயலாளராகவும் பணிபுரிந்தார். இவர் ஒரு சிறந்த தொழிற்சங்கவாதியாக விளங்கினார்

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சாரா 1943 ஆம் ஆண்டில் ஃப்ரெட் கார்னெசன் (Fred Carneson) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவரும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தார். இவர்கள் 1945 ஆம் ஆண்டில் கேப் டவுன் நகரில் குடியேறினர். கேப் டவுனில் தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக ஃபிரெட் செயல்பட்டார். மேலும் இவர் 1946 ஆம் ஆண்டில் கேப் மாகாண சபைக்கான தேசிய பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதியதாக ஆட்சிக்கு வந்த தேசிய கட்சி (National Party) அரசாங்கம் 1950 இல் கம்யூனிஸ்ட் கட்சியினரை அடக்குவதற்காக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அதனடிப்படையில் சாரா மற்றும் கார்னெசன் ஆகிய இருவருக்கும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. கம்யூனிஸ்ட் கட்சியும் கலைக்கப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகள் தலைமறைவாக இயக்கப்பணி செய்தனர். ஃபிரெட் கார்னெசன் மிக முக்கியமான நபராக இருந்தார். 1956 ஆம் ஆண்டில் மம்மத் (Mammoth) தேச துரோக வழக்கு விசாரணையில் கார்னெசன் கைது செய்யப்பட்டார். அவருடன் 156 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறை வாழ்க்கை

தொகு

சாரா தனது 3 குழந்தைகளுடன் சேர்ந்து 156 குடும்பங்களுக்காக நிதி சேகரித்து வழங்கினார். 1960 ஆம் ஆண்டில் அவசரகாலச் சட்டம் (Emergency) கொண்டு வரப்பட்டது. சாரா கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். கார்னெசனும் சிறையில் இருந்தார். 3 குழந்தைகளும் மிகவும் சிரமப்பட்டன. பின்னர் கைதுக்கு எதிராக தடை உத்தரவு பெற்றார். இருப்பினும் வாரம் ஒருமுறை உள்ளூர் காவல் நிலையத்தில் ஆஜர் ஆக வேண்டி இருந்தது. ஃபிரெட் கார்னெசன் 1965 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு ஆளானார். 13 மாதங்கள் தனிமை படுத்தப்பட்டார். சாரா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். வெளியே எங்கும் செல்ல முடியாமல் தவித்தார். பொருளாதார பிரச்சனையும் ஏற்பட்டது. கார்னெசன் 5 ஆண்டு 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சந்திக்க சாராவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. போலீஸ் அத்துமீறி வீட்டில் பரிசோதனை செய்ததை தட்டிக் கேட்டபோது, துப்பாக்கி சூடு நடத்தினர். குண்டு அவரது மகனின் தலைக்கு அருகில் சென்றது.

சாரா மீண்டும் 1967 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. தண்டனையை ரத்து செய்ய போராடினார். பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். 1968 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். அங்கு மார்னிங் ஸ்டார் (Morning Star) என்னும் செய்தித் தாளில் பணிபுரிந்தார். மேலும் இங்கிலாந்து நாட்டு தொழிற்சங்கத்தில் இணைந்து தொழிலாளர்களுக்காக உழைத்தார். ஃபிரெட் கார்னெசன் 60 தடவை கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 1972 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் லண்டன் சென்று குடும்பத்துடன் சேர்ந்தார். தென்னாப்பிரிக்காவில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக விதித்த உத்தரவு நீக்கப்பட்டது. அதன் பின்னர் 1991 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு திரும்பி வந்து கேப்டவுனில் குடியேறினார். தென்னாப்பிரிக்காவில் 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றது. அத்தேர்தலில் கேப் டவுன் பெருநகர மற்றும் கேப் பிராந்திய கவுன்சிலுக்கான பிரதிநிதியாக ஃபிரெட் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2000 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் 103 ஆவது ஆண்டு விழா 2014 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. அப்போது தனது வாழ்நாள் முழுவதும் இனவெறிக்கு எதிராகப் போராடியவர் சாரா எனப் புகழப்பட்டார்.

சுயசரிதை

தொகு

சாரா தனது 99 வது வயதில் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 30 அன்று இயற்கை எய்தினார். அன்று தேசிய நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மற்றும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சாராவிற்கு அஞ்சலி செலுத்தினர். ஏற்கெனவே 2011 ஆம் ஆண்டில் சாராவின் சுயசரிதையை அவரது மகள் லின் (Lynn) எழுதி வெளியிட்டிருந்தார். வானவில்லின் சிகப்பு (Red in the rainbow) என்ற தலைப்பில் சாரா மற்றும் ஃபிரெட் கார்னெசனின் வாழ்க்கை வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க வரலாற்றில் சாராவின் பங்கு மகத்தானது. அவர் தென்னாப்பிரிக்காவில் தோன்றும் வானவில்லின் சிகப்பு நிறமாகவே ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Sarah Carneson" South African History Online (2011).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_கார்னெசன்&oldid=2826331" இலிருந்து மீள்விக்கப்பட்டது