சாலமரத்துப்பட்டி சென்றாய சுவாமி கோயில்
சாலமரத்துப்பட்டி சென்றாய சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், சாலமரத்துப்பட்டி என்ற சிற்றூரில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயிலாகும்.[1]
சாலமரத்துப்பட்டி சென்றாய சுவாமி கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கிருஷ்ணகிரி |
அமைவிடம்: | சாலமரத்துப்பட்டி |
சட்டமன்றத் தொகுதி: | ஊத்தங்கரை |
மக்களவைத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
கோயில் தகவல் | |
மூலவர்: | சென்றாயர் |
உற்சவர்: | சென்றாய சுவாமி |
உற்சவர் தாயார்: | பாமா, ருக்மணி |
கோயில் பற்றி நிலவும் கதை
தொகுஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகத்தைச் சேர்ந்த பல்லாரி யாதவ இனத்தில் துர்கம்மா என்ற அழகுள்ள பெண் இருந்தாள். அப்பகுதியை ஆண்ட முசுலீம் நவாப் அப்பெண்ணை தனக்கு திருவமணம் செய்து தருமாறு கேட்டார். அவருக்கு அஞ்சிய யாதவர்கள் பெண்தர ஒப்புக் கொண்டனர், பின்னர் இரவோடு இரவாக அப்பெண்ணை அழைத்துக்கொண்டு ஊரைவிட்டே வெளியேறினர். அவ்வாறு அவர்கள் செல்லும்போது நவாப் தங்களைப் பின்தொடர்வதை அறிந்தனர். இதனால் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள குறுக்கே ஓடிய ஆற்றில் அப்பெண்ணை தள்ளிவிட்டு தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். அவ்வாறு செல்லும்போது அந்தக் குடும்பத்தில் உள்ள ஒரு மூதாட்டியின் தலையில் இருந்த கூடையின் சுமை கூடியதை உணர்ந்து, அந்தக்கூடையில் பார்த்தபோது, அதில் உருளைவடிவக் கல் ஒன்று இருப்பதைப் பார்த்தனர். அந்தக் கல்லைத் தூக்கி எறிந்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தபோது அந்தக் கல் கூடையில் தாவி ஏறிக்கொண்டது. வழியில் பலமுறை அந்தக் கல்லை எறிந்தபோதும் அது மீண்டும் மீண்டும் கூடையில் ஏறியபடியே இருந்தது. யாதவர்கள் இந்த சென்றாய மலையின் பக்கம் வந்தபோது அந்தக்கல்லை இந்த மலைமீது எறிந்தபோது அந்தக் கல் மறைந்துவட்டது. அதனால் பெருமாளே தங்களைப் பின்தொடர்ந்து வந்ததாக கருதி, இப்பகுதியில் கல் மறைந்ததால் இதுவே தாங்கள் வாழ ஏற்ற இடமாக கருதி அங்கேயே வாழத் துவங்கினர். பல ஆண்டுகள் கழித்து ஒரு இருளன் கிழங்கு அகழ சூலத்தால் மண்ணை அகழ்ந்தான். அப்போது ஒரு கல்லில் சூலம் பட்டு அதில் இரத்தம் கசிவதைக் கண்டு மயங்கி இறந்தான். சூலத்தால் காயம்பட்ட அந்தக் கல்லே பெருமாளாக இன்றும் வழிபடப்படுகிறது.
200 ஆண்டுகளுக்கு முன்பு பாரூரில் இருந்த சிவபக்தரான ஒரு மணியக்கார் ஆண் குழந்தை வேண்டி, இந்த மலைக்கு வந்து இறைவனை வழிபட்டார். கோயில் முழுவதும் சிவச்சின்னங்கள் இருக்கும் நிலையில் இறைவனுக்கு நாமம் சாத்தப்பட்டிருப்பதைக் கண்டு, இறைவனுக்கு திருநீறு பூசுமாறு பூசாரியான தாசரிடம் கூறினார். ஆனால் அவர் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இறுதியில் அங்குள்ள தண்ணீர் கிணற்றை குதிரையால் தாண்டுவது என்றும், தாண்டினால் நாமத்தை இடுவது என்றும், தாண்டாவிட்டால் திருநீறு பூசுவது என்றும் முடிவு செய்தனர். குதிரை கிணற்றைத் தாண்டியதால் திருநாமத்தைப் பூசி வழிபட்டனர்.
கோயில் அமைப்பு
தொகுகோயிலானது ஒரு மலை உச்சியில் உள்ளது. கோயிலுக்குச் செல்ல படிக்கட்டுகள் உள்ளன. கோயிலானது சோழர் பாணியிலான கருங்கல் மதில்களுடன் கிழக்கு வாயிலுடன் உள்ளது. கோயிலில் கொடிமரம் இல்லை. ஆனால் அதற்குபதில் 10 அடி உயர விளக்குக் கம்பமானது மேடைமீது உள்ளது. இதனையடுத்து நந்தியும், பலிபீடமும் உள்ளன. நந்திக்கு முன்பாக கருடாழ்வார் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளார். கோயிலானது மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற கட்டட அமைப்புகளோடு உள்ளது. கருவறையில் உள்ள மூலவர் உருளை வடிவில் சுயம்புவாக உள்ளார். இதனால் மூலவர் சிவலிங்கம் என்றும் பெருமாள் என்றும் இருவேறு கருத்துகள் இன்றுவரை உள்ளன. கோயில் பிரகாரத்தில் விநாயகர், முருகர், கிருஷ்ணர், வீராஞ்சநேயர் ஆகியோருக்கு தனிச் சந்நதிகள் உள்ளன. [2]
விழாக்கள்
தொகுஒவ்வோராண்டும் மாசிமாதம் மகா சிவராத்திரியன்று தேர்த் திருவிழா நடக்கிறது. தேரானது மலையைச் சுற்றி வலம்வருகிறது. சிவராத்திரியன்று பெருமாள் கோயிலில் திருவிழா நடப்பது எங்கும் இல்லாத சிறப்பு ஆகும்.
அமைவிடம்
தொகுஊத்தங்கரையில் இருந்து தருமபுரி செல்லும் சாலையில் 10 வது கி.மீ தொலைவில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "கோவிலில் உடைந்த குளியல் அறை கதவுகளை சரி செய்ய வேண்டும்". செய்தி. தினமலர். 5 திசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2018.
- ↑ திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. pp. 78–81.
{{cite book}}
: Check date values in:|year=
(help)