சின்னவெண்மணி பீமேசுவரர் கோயில்

சின்னவெண்மணி பீமேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

தொகு

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் வட்டத்தில் ஜமீன் எண்டத்தூர் அருகில் சின்னவெண்மணி என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

தொகு

இக்கோயிலின் மூலவர் பீமேசுவரர் உள்ளார். இறைவி ஆனந்தவல்லி ஆவார். வில்வம் இக்கோயிலின் தல தரமாக உள்ளது. பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் இக்கோயில் மூலவரை வணங்கியுள்ளார்.இங்குள்ள குபேர லிங்கத்தில் மாமுனிவர் முக்தியடைந்ததாகக் கூறுவர்.[1]

அமைப்பு

தொகு

மூலவ்ர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார்.அவர் மீது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புரட்டாசி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் இரண்டு நாளும் பின் இரண்டு நாளும் காலையில் சூரிய ஒளி விழுகிறது. அவ்வாறே பங்குனி உத்திரத்திற்கு முன் இரண்டு நாளும் பின் இரண்டு நாளும் விழுகிறது. கோயிலின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. அருகே குபேரலிங்கம் உள்ளது. இங்குள்ள நவக்கிரகங்கள் பிற கோயில்களிலிருந்து சற்றே வேறுபட்ட நிலையில், மேற்கு நோக்கிய நிலையில் சூரியன் அமைந்துள்ள வகையில், காணப்படுகிறது. அம்மனுக்கு வெளிச்சத்தைத் தருவதற்காக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். குருவும் ராகுவும் தெற்கிலும், சூரியனும் புதனும் மேற்கிலும், சந்திரன் கிழக்கிலும், அங்காரகனும், கேதுவும் வடக்கிலும், சனீசுவரர் கிழக்கிலும் அமைந்துள்ளனர். இந்த சன்னதிகளின் கீழே ஆறு ஓடுவதாகக் கூறுகின்றனர். திருச்சுற்றில் விநாயகர், அய்யப்பன், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி ஆகீயோர் உள்ளனர்.அருகே சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது. நுழைவாயில் மண்டபத்திலும், அம்மன் சன்னதியிலும் நிலாவும், பாம்பும் காணப்படுகின்றன. அம்மனின் பார்வையில் கோயில் குளம் காணப்படுகிறது.[1]

அருகிலுள்ள கோயில்கள்

தொகு

இக்கோயிலின் நான்கு புறங்களிலும் கோயில்கள் அமைந்துள்ளன. வடக்கில் தர்மாபுரத்தில் குந்தியால் வணங்கப்பட்ட குந்தீசுவரர் கோயில், வட கிழக்கில் திருவாதூரில் தருமரால் வணங்கப்பட்ட தர்மேசுவரர் கோயில், தெற்கில் பெரிய வெண்மணியில் விஜயேவரர் கோயில், நாகமலையில் நகுலனால் வணங்கப்பட்ட நகுலேசுவரர் கோயில், தேவனூரில் சகாதேவனால் பூசிக்கப்பட்ட சகாதேவீசுவரர் கோயில்கள் உள்ளன.

திருவிழாக்கள்

தொகு

பிரதோஷம், பௌர்ணமி, கார்த்திகை, சிவராத்திரி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்

தொகு