ஆத்மானந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: ஆத்மானந்தா திருவனந்தபுரத்தில் வாழ்ந்து மறைந்த வேதாந்தி மற...
(வேறுபாடு ஏதுமில்லை)

10:14, 18 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

ஆத்மானந்தா திருவனந்தபுரத்தில் வாழ்ந்து மறைந்த வேதாந்தி மற்றும் யோகி. இவரது வீட்டில் நிகழும் வேதாந்த வகுப்புகள் சர்வதேசப்புகழ்பெற்றவை. ஆல்டஸ் ஹக்ஸ்லி, ஜூலியன் ஹக்ஸ்லி, பால் பிரண்டன் போன்ற பலர் இவரது மாணவர்கள். இவரை கார் குஸ்தாவ் யுங் வந்து சந்தித்திருக்கிறார்.

வாழ்க்கை

இயற்பெயர் கிருஷ்ண மேனன் கேரளத்தில் திருவல்லா பகுதியில் பெரிங்ஙரா என்ற சிற்றூரில் 1883 டிசம்பர் 8ல் பிறந்தார். நாயர் நிலப்பிரபுக்குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை பெயர் மூவிடத்து மடம் கோவிந்தன் நம்பூதிரி

இளமையில் சம்ஸ்கிருதக்கல்வி பெற்றார். கிருஷ்ண மேனன் 12 வயதில் உயர்நிலைப்பள்ளியை அடைந்தார். இளம் வயதிலேயே மலையாளத்தில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இளமையில் நோயுற்றிருந்தார். ஒரு துறவி அவரது அன்னைக்கு வெண்ணையில் ஏதோ மருந்து வைத்து கொடுத்ததாகவும் அதை உண்டபின் அபாரமான பசி கொண்டவராகவும் விளைவாக மிகச்சிறந்த உடல்வலிமை கொண்டவராகவும் ஆனார் என்கிறார்கள்

1896ல் கொல்லம் அருகே வேம்பநாட்டுக்காயலில் ஒருபடகு விபத்து நிகழ்ந்தது. அப்போது கடுமையான புயலடித்து காயல் கொந்தளித்துக்கொண்டிருந்தது.நடுக்காயலில் மூழ்கிய படகில் இருந்த அத்தனைபேரும் இறந்தார்கள். காயலில் இருளில் எட்டு கிலோமீட்டர் தூரம் நீந்தி கிருஷ்ண மேனன் மட்டும் உயிர்தப்பினார்

கிருஷ்ண மேனன் 1897ல் நடந்த சென்னைப்பல்கலைக்கழகம் நடத்திய மெட்ரிக்குலேஷன் பொதுத்தேர்வில் மலையாளத்தில் வெறும் 9 மதிப்பெண் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார். மலையாளத்தில் அவரது கவிதைகள் புகழ்பெற்ற இலக்கிய இதழ்களில் வெளிவந்துகொண்டிருந்த காலம் அது. ஒருமாதம் கழித்து சென்னைப் பல்கலைக் கழகம் தற்செயலாக நிகழ்த்திய மறுகூட்டலில் அவர் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 90 மதிப்பெண்ணில் சுழியம் விடுபட்டிருந்தது.

வறுமையான பின்புலம் கொண்டிருந்தமையால் கிருஷ்ணமேனன் தனியார்பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றி பணம் மிச்சம் செய்து சென்னைபல்கலையில் சேர்ந்து இளங்கலை பட்டம் பெற்றார். இளங்கலைபட்டம் பெற்ற பின் திருவனந்தபுரம் உயர்நீதிமன்றத்தில் உதவியாளராக வேலைபார்த்தார். இக்காலகட்டத்தில் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம்பயின்றார்.

பட்டப்படிப்பு முடிவதற்கு முன்னரே 1910 ல் தன் 27 வயதில் அவர் பாறுக்குட்டி அம்மாவை மணம்செய்தார்.

கிருஷ்ண மேனன் நீதிமன்றத்தில் வேலைசெய்யும்போது அந்த வளாகத்தில் வெள்ளைய அதிகாரிகள் குதிரைப்பயிற்சி செய்வதுண்டு. அன்றைய திருவிதாங்கூரின் காவல் ஆணையராக இருந்தவரின் குதிரையை கிருஷ்ணமேனன் வெறும் கையால் பிடித்து அடக்கியதைக் கண்ட அவர் கிருஷ்ண மேனனை காவல் மேலாய்வாளராக நியமித்தார். கிருஷ்ணமேனன் குதிரை ஏற்றத்தில் தனித்தேர்ச்சிகொண்டவராகவும் மிகச்சிறந்த துப்பாக்கிசுடுபவராகவும் புகழ்பெற்றிருந்தார்

சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றதும் குற்றவியல் ஆய்வாளாராக பதவி உயர்வு கிடைத்தது. அந்த பதவியுடன் அவர் அக்காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் இரண்டாம் தலைநகரமாக இருந்த பத்மநாப புரத்துக்கு வந்தார். கோட்டைக்குள் தெற்குத்தெருவில் குடிபுகுந்தார். இக்காலகட்டத்தில்தான் அவருக்கு அவரது குருவின் சந்திப்பு கிடைத்தது.

ஆத்மானந்தர் அவரது 60 வயது வரை காவல்துறை உயரதிகாரியாகவே செயல்பட்டு 1943ல் ஓய்வுபெற்றார் என்பதே. இக்காலகட்டத்தில் மிகச்சிறந்த புலனாய்வு அதிகாரியாக கருதப்பட்ட அவர் பல முக்கியமான வழக்குகளை தெளியச் செய்திருக்கிறார்.

ஆன்மீகம்

கல்விக்காலத்தில் கிருஷ்ண மேனன் பிரிட்டிஷ் நாத்திக வாதத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டிருந்தார். குறிப்பாக ஃபாயர்பாக் மீது பெரும் பற்று இருந்தது. பிரிட்டிஷ் பொருள்முதல்வாத தத்துவம் குறித்து விரிவான உரைகள் நிகழ்த்துபவராக அவர் அறியப்பட்டிருந்தார்.

பத்மநாபபுரத்தில் இருக்கும்போது ஆங்கில இலக்கியத்தில் தீவிரமான ருசி இருந்தது. 1919ல் யோகானந்தர் என்ற துறவியைச் சந்தித்தார். அவர் கல்கத்தாவில் இருந்து வந்திருந்தார்.யோகானந்தர் மேல்நாட்டு தத்துவங்களையும் ஆழமாக கற்றவராக இருந்தார். அவரை தன் குருவாக ஏற்றுக்கொண்டு ஆன்மீகத்திற்கு திரும்பினார்.குருவின் ஆணைப்படி தன் பெயரை ஆத்மானந்தா என்று மாற்றிக்கொண்டார்.

யோகானந்தர் ராஜபுதனத்து அரசகுடும்பத்தைச் சேர்ந்தவரான யோகானந்தர் பன்னிரு வயதில் துறவு பூண்டு கல்கத்தாவுக்கு வந்து நான்கு சீடர்களுடன் ஒரு சிறு ஆசிரமத்தில் வசித்தார். அவரது மாணவர்களில் கடைசியானவர் கிருஷ்ண மேனன். ஒரே இல்லறச் சீடரும் அவரே.

யோகானந்தர் காட்டியவழியில் கிருஷ்ணமேனன் ஞானத்தேடலை ஆரம்பித்தார். பலவருடங்கள் வேதாந்த மூலநூல்களில் ஆழ்ந்திருந்தார். கிருஷ்ணமேனன் ஞானத்தேடலில் தன் எல்லையைக் கண்டடைந்ததும் தீவிரமான உணர்ச்சிகர பக்திபாவத்தை நோக்கி திரும்பினார் கிருஷ்ணனின் வடிவில் பிரம்மத்தை உணர்ந்து ராதையாக தன்னை நிறுத்திச் செய்யும் ராதாமாதவஃபாவனா என்ற ’ராகயோக’ முறையை மேற்கொண்டார். இக்காலகட்டத்தில் 48 பாடல்கள் கொண்ட ராதாமாதவம் என்ற மலையாள இசைப்பாடல்நுலை எழுதியிருக்கிறார்.இன்றும் அப்பாடல்கள் எழுதியவர் பெயர் தெரியாமல் மக்களிடையே பிரபலமாக உள்ளன.

அதை தொடர்ந்து சில குறிப்பிட்ட யோகப்பயிற்சிகளில் ஈடுபட்ட கிருஷ்ணமேனன் நரம்புகள் பாதிக்கப்பட்டு பக்கவாதநோய்க்கு ஆளாகி படுக்கையில் விழுந்தார். திருவனந்தபுரத்தின் முக்கியமான மருத்துவர்கள் அவரது நோய்க்குச் சிகிழ்ச்சை அளித்து பயன் ஏற்படவில்லை. அப்போது திருவனந்தபுரத்தில் இருந்த ஞானியான சட்டம்பி சுவாமி [இவர் நாராயணகுருவின் நண்பர்] யிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து பார்த்துவிட்டு நேரடியான குரு உதவி இன்றி மூர்க்கமாகச் செய்யப்பட்ட யோகப்பயிற்சியால் நிகழ்ந்தது அது என்று சொன்னார். சட்டம்பி சுவாமி அளித்த ஆழ்ந்த தூக்கத்தை விளைவிக்கும் ஒரு மூலிகையால் தொடர்ச்சியாக தூங்கவைக்கப்பட்ட கிருஷ்ண மேனன் நோயில் இருந்து மீண்டெழுந்தார்.


யோகசாதனைகள் போதிய பலன் தராத நிலையில் 1922ல் கிருஷ்ணமேனன் துறவுபூண்டு கல்கத்தா செல்ல திட்டமிட்டு வேலையை விடுவதற்கு விண்ணப்பித்தார். மனைவியிடம் எதையும் சொல்லவில்லை. ஆனால் அவரது கனவில் குரு வந்து தன்னிடம் வரவேண்டாம் என்றும், இலக்கு தொட்டுவிடும் தொலைவே என்றும் சொன்னதாக ஆத்மானந்தர் சொல்லியிருக்கிறார். சில நாட்களில் 1922 ஜூன் 9 அன்று யோகானந்தர் இறந்துவிட்ட செய்தி கிடைத்தது. அதன்பின்னர் தன் வாழ்நாள்முழுக்க இல்லறத்தாராகவே ஆத்மானந்தா இருந்தார்

ஆத்மானந்தா தன் மனைவி பாறுக்குட்டியைப்பற்றி பெரிதும் பாராட்டி சொல்லியிருக்கிறார். அவரது அனைத்து யோகசாதனைகளுக்கும் உறுதுணையாக இருந்த பாறுக்குட்டியம்மா அவர் பக்கவாதம் வந்து கிடந்த நாட்களில் குழந்தைபோல அவரைக் கவனித்துக்கொண்டார். சுயநலமில்லாத பேரன்பு எப்போதும் எந்தபாதைக்கும் உறுதுணையாகவே அமையும், தடையாக ஆகாது என்பதற்கான உதாரணமாக ஆத்மானந்தர் தன் மனைவியை குறிப்பிடுவதுண்டு. தன் மனைவியை தன் முதல் மாணவியாக ஏற்றுக்கொண்ட ஆத்மானந்தா அவருக்கு துறவு அளித்தார். ஸ்வரூபானந்தமயி என்று அவரால் பெயர் மாற்றம் பெற்றார் பாறுக்குட்டியம்மா. ஆத்மானந்தரின் மகனும் அவரிடம் தீட்சை பெற்று துறவியாக இருந்தார்.

த இல்லத்தில் காலையில் அவர் வேதாந்த உரைகள் நிகழ்த்துவார். திருவிதாங்கூர் மகாராஜாவே அவரது உரைகேட்கவரும் பக்தராக இருந்தும் திருவிதாங்கூர் அரசின் ஊழியராக இருந்தார். முற்றிலும் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமலேயே வாழ்ந்து மறைந்தார்.

1951ல் அவர் தன் ஐரோப்பிய மாணவர்களின் அழைப்பின்பேரில் பிரான்ஸ், இங்கிலாந்து,சுவிட்சர்லாந்து ,ஜெர்மனி போன்ற நாடுகளுக்குச் சென்றார். வெளிப்படுத்தப்படாத காரணங்களுக்காக தன் மாணவர்களுடன் அர்ஜெண்டினாவுக்கும் எகிப்துக்கும் சென்றிருக்கிறார். பணி ஓய்வுபெற்றபின் திருவனந்தபுரத்தில் இருந்து செங்ஙன்னூர் அருகே மாலக்கரை என்ற சிறு கிராமத்தில் வீடுகட்டிக்கொண்டு அங்கே சென்று வாழ்ந்தார். 1959 மே 14 அன்று சமாதியானார். அவரது சமாதியிடம் அந்த கிராமத்தில் உள்ளது.

கிருஷ்ணமேனனின் பேச்சு உரையாடல் போன்றது. அன்று ஐரோப்பாவில் உருவாகி வந்த உளவியலின் பல வினாக்களை கிருஷ்ண மேனன் மிக ஆழமாகச் சென்று தொட்டிருக்கிறார் என்று சி.ஜி.யுங் கூறியிருக்கிறார். குறிப்பாக சுயம் [Self ] , தன்னிலை [subjectivity] , இருப்பு [Exisitance], தன்முனைப்பு [Ego] ஆகிய கருதுகோள்களைப்பற்றிய அவரது நுண்ணிய அவதானிப்புகள் இன்றும் யுங்கியர்களால் பேசப்படுகின்றன.

ஆனால் அவர் சொன்னவை அனைத்துமே பல நூற்றாண்டுக்காலமாக பேசப்பட்ட தூய அத்வைதக் கருத்துக்கள் மட்டுமே. கிருஷ்ணமேனன் அவற்றுக்கு நவீன மேலைநாட்டு மனம் புரிந்துகொள்ளும் சொல்லாட்சிகளை அளித்தார். அந்த காலகட்டத்தில் அத்வைதத்தை சமகாலச் சொல்லாடலுக்குள் கொண்டுவரவேண்டிய தேவை இருந்தது, அந்த தேவையை அவர் நிறைவேற்றினார்

இணைப்பு

ஆத்மானந்தா பற்றி ஜெயமோகன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்மானந்தர்&oldid=669661" இலிருந்து மீள்விக்கப்பட்டது