சீத்தலைச்சாத்தனார் (சங்ககாலம்)
சீத்தலைச்சாத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். 'மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்' என்று இவர் குறிப்பிடப்படுகிறார். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 10 உள்ளன. அவற்றில் ஒன்று மட்டும் புறத்திணைப் பாடல். ஏனையவை அகத்திணைப் பாடல்கள்.
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் எனப் புறநானூற்றுத் தொகுப்பாசிரியர் குறிப்பிடும் வேந்தன் வாழ்ந்த காலத்தில் அவனை நேரில் கண்டு அவனது போராற்றலையும், வள்ளண்மையையும் போற்றி இவர் பாடியுள்ளார்.[1] இந்த நன்மாறனை, இவர் “தகைமாண் வழுதி” என விளிக்கிறார்.[2][3]
அகத்திணைப் பாடல்கள்
தொகு- அன்னைக்குத் தெரிந்துவிட்டது; நாளை அருவி ஆடச் செல்வோம் என மறைந்திருக்கும் தலைவனுக்குக் கேட்குமாறு தலைவியும் தோழியும் பேசிக்கொள்கின்றனர்.[4]
- நாளை கானலில் பாவை விளையாடச் செல்வோம் எனப் பேசிக்கொள்கின்றனர்; அங்கு வரலாமே என்பது தலைவனுக்குத் தரும் குறிப்பு.[5]
- வண்டல் பாவை சிதையத் தேரில் வந்து தழுவியபோது சூள் (சத்தியம்) செய்ததைத் தலைவன் மறந்துவிட்டானோ எனத் தலைவி மனம் நோகிறாள்.[6]
உள்ளுறை
தொகு- தலைவன் நாட்டில் புலி, பெண்யானையைப் புண்ணாக்கிவிட்டு, ஆண்யானையைக் கொல்லப் பாயுமாம். இந்த உள்ளுறை உவமத்தால் ஊரார் அலர் தூற்ற விட்டுவிட்டு, தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளாமல் கொல்கிறானாம்.[7]
- குருகு பொய்கைக் கரையில் பூத்த ஈங்கைப் பூவோடு உறங்கி இன்பம் கண்டபின், வயலில் பூத்த கரும்பில் அமர்ந்துகொண்டு வெயில் காயுமாம். இந்த உள்ளுறையால் பரத்தையிடம் இன்பம் கண்ட தலைவன், தலைவியிடம் குளிர் காய வருகிறான் என்பதைப் பெறவைக்கிறார்.[8]
உவமை
தொகு- பாம்புத்தோல் நிமிர்ந்து நிற்பது போன்று, மூங்கிலின் மேல் பருந்து அமர்ந்துள்ளதாம்.[9]
நயம்
தொகு- "நல்கூர்க் குறுமகள்
- நோய்மலிந்து உகுத்த நொசிவரல் சின்னீர்
- பல்லிதழ் மழைக்கண் பாவை மாய்ப்ப"
- தலைவனை நினைத்துத் தலைவி உகுத்த கண்ணீர் அவளது கண் பார்வைப் பாவையையே செயலிழக்கச் செய்துவிட்டதாம்.[10]
- "மணிமருள் பூவை அணிமலர் இடையிடை
- செம்புற மூதாய் பரத்தலின் நன்பல ...
- வல்லோன் செய்கை அன்ன புறவு"
- நீல நிறப் பட்டுநூல் போன்ற காயா என்னும் பூவைப் பூக்களிடையே செம்பட்டு போன்ற மூதாய் என்னும் தம்பலப் பூச்சிகள் மேயும் முல்லை நிலம், வல்லோன் தீட்டிய ஓவியம் போன்று காணப்பட்டது.[11]
- ”உள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை” – வல் எயிற்றுச் செந்நாய் இப்படித் தோற்றமளித்தது.[12]
இப்படிப்பட்ட பாடல் பாங்குகள் மணிமேகலை நூலில் இல்லை. எனவே காப்பியம் பாடிய சீத்தலைச்சாத்தனார் வேறு.
அடிக்குறிப்பு
தொகு- ↑ புறநானூறு 59
- ↑ இது பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி என்பவனாகலாம்
- ↑ மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் கண்டது மதுரையில் பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனைக் கொன்றதற்காக உயிர் துறந்த காட்சி.
- ↑ குறிஞ்சித்திணை, நற்றிணை 339
- ↑ நெய்தல் திணை, நற்றிணை 127
- ↑ நெய்தல் திணை, அகசானூறு 320
- ↑ குறிஞ்சித்திணை, நற்றிணை 36
- ↑ மருதத்திணை, அகநானூறு 306
- ↑ பாலைத்திணை, குறுந்தொகை 154
- ↑ பாலை, அகம் 229
- ↑ முல்லை, அகம் 134
- ↑ பாலை, அகம் 53