சீவலமாறன் கதை

சீவலமாறன் கதை என்னும் நூல் [1] 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிதம்பரநாத கவி என்பவரால் இயற்றப்பட்ட இரண்டு நூல்களில் ஒன்று. சங்கரவிலாசம் என்பது இவரின் மற்றொரு நூல். சீவலமாறன் என்னும் பெயர் அரசனாகவும், புலவராகவும் 14 ஆம் நூற்றாண்டில் விளங்கிய அதிவீரராம பாண்டியனைக் குறிக்கும். இந்த நூலின் ஓலைச்சுவடி பிற்காலத்து ஒருவரால் படி-எழுதப்பட்ட காலம் 1743 [2]

நூலின் அமைப்பு தொகு

  • நகரப்படலம், ஆற்றுப்படலம், நாட்டுப்படலம் என்னும் முறையில் நூல் விரிவிறது.
  • செப்பேடு காண் படலம், நடன தரிசனை, திருக்கயிலாயப் படலம் போன்றவை வரலாற்றோடும் புராணத்தோடும் தொடர்புடையவை.

நூல் சொல்லும் கதை தொகு

அரசன் பராந்தக மாறன் நெல்லையில் இருந்துகொண்டு அரசாண்டுவந்தான். இவனது மனைவி பெயர் பாடகவல்லி. குழந்தைப் பேற்றுக்காக இருவரும் தவம் செய்தனர். திருமால் வரம் தந்தார். கருத்தரித்ததும் தந்தை இறப்பான் என்பதும், குழந்தை பிறந்ததும் தாய் இறப்பாள் என்பதும் வரம். அவ்வாறே நிகழ்கிறது. குழந்தை பெயர் சீவலமாறன். அமைச்சர் குழந்தையை வளர்க்கிறார். முடி சூட்டுகிறார். அரசன் சீவலமாறன் தன் பெற்றோருக்குக் கங்கைக் கரையில் கடன் செய்யப் புறப்படுகிறான்.

  • வழியில் கருநாடக மன்னன் ‘வினோதன்’ போரில் தோற்றுத் திறை தருகிறான்.
  • துலுக்க நாட்டுப் போரில் மலுக்கன், முகம்மது, பீரு, மாயினா, காளன் ஆகியோர் மடிகின்றனர்.
  • கங்கை வடகரை விந்தை நாட்டு அரசி ‘பெதும்பை’ என்பவள் திறை தரவில்லை. அவள் பெண் என்பதால் பாராட்டி வரிசை பலவும் நல்கிச் செல்கிறான்.
  • ஆசிரமத்தில் தங்கிப் ‘பகீரதன்’ வரலாறு அறிகிறான்.
  • கங்கையில் மூழ்கியபோது ஐந்து தலைநாகம் நல்கிய சிலைக்குக் கடன் செய்கிறான்.
  • சிலை அருச்சுனனுடையது என அறிந்து அவனை எண்ணித் தவம் செய்கிறான்.

உடனே நாடு திரும்பாவிட்டால் ஆளாக்கிய அமைச்சர் உயிர் துறக்கப்போவதாக ஓலை வருகிறது. சீவலமாறன் நாடு திரும்புகிறான். வழியில் கேதாரம், சோமநாதம், காளத்தி, தில்லை முதலான ஊர்களை வழிபட்டுக்கொண்டே வந்தான்.

  • கொண்டுவந்த கங்கை நீரைத் தெளித்து சிவனுக்கும் பெருமாளுக்கும் கோயில்கள் எடுத்தான்.
  • வடநாட்டிலிருந்து அழைத்துவந்த அந்தணர்களைக் கொண்டு வழிபாட்டு முறைகளைத் தோற்றுவித்தான்.

இறுதியில் இந்திர விமானத்தில் சுவர்க்கம் செல்கிறான்.

பாடல் தொகு

இந்த நூலிலுள்ள பாடல் ஒன்று எடுத்துக்காட்டுக்காகத் தரப்படுகிறது.

அரி அயன் காணா வண்ணம் அழல் உரு ஆனாய் போற்றி
விரிதிரை உந்தி ஈன்ற விடம் அமுது உண்டாய் போற்றி
பரிவொடு பாலன் வேண்டப் பாற்கடல் அளித்தாய் போற்றி
திரிபுரம் எரித்தாய் போற்றி திகழ் சிற்றம்பலத்தாய் போற்றி.

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் ஒன்று, பதிப்பு 2005

அடிக்குறிப்பு தொகு

  1. திருவான்மியூர் டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையத்தில் உள்ள சுவடி
  2. கொல்லம் 918.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீவலமாறன்_கதை&oldid=3931873" இலிருந்து மீள்விக்கப்பட்டது