சென்னேயின் பெரிய மசூதி
சென்னேயின் பெரிய மசூதி (Great Mosque of Djenné) (பிரெஞ்சு மொழி: Grande mosquée de Djenné, அரபு மொழி: الجامع الكبير في جينيه) என்பது சுடாத மண்கல்லால் கட்டப்பட்ட பெரிய மசூதிக் கட்டிடம் ஆகும். இது சுடனோ-சகேலியக் கட்டிடக்கலைப் பாணியில் அமைக்கப்பட்ட முக்கியமான கட்டிடங்களில் ஒன்று. மாலியின் சென்னே நகரில் உள்ள இந்த மசூதி பானி ஆற்றின் வெள்ளச் சமவெளிப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் இருந்த முதல் மசூதி 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போதுள்ள கட்டிடம் 1907 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. இது சென்னே சமூகத்தின் மையமாக இருக்கும் அதேவேளை, இது ஆப்பிரிக்காவின் மிக முக்கியத்துவம் பெற்ற ஒரு கட்டிடமாகவும் உள்ளது. 1988 இல் சென்னேயின் பழைய நகரத்துடன் சேர்த்து இந்த மசூதியையும் யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்தது.
வரலாறு
தொகுஇங்கிருந்த முதல் மசூதி கட்டப்பட்ட காலம் தெரியவில்லை. ஆனால், இது கட்டப்பட்டதாக முன்வைக்கப்படும் மிக முந்திய காலம் 1200 ஆகவும் மிகப் பிந்திய காலம் 1330 ஆகவும் உள்ளது.[1] அப்த் அல்-சாதி எழுதிய சூடானின் வரலாறு (Tarikh al-Sudan) என்னும் நூலே இந்த மசூதி பற்றிக் குறிப்பிடும் மிகப் பழைய ஆவணம். தொடக்ககால வரலாறு பற்றிக் கூறும் இந்த நூலை, 17 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் வழக்கில் இருந்த வாய்வழித் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இதன் ஆசிரியர் எழுதியிருக்கக்கூடும். இந்த நூலின்படி, சுல்தான் குன்புரு இசுலாம் மதத்தைத் தழுவிய பின்னர் தனது மாளிகையை இடித்துவிட்டு அவ்விடத்தில் ஒரு மசூதியைக் கட்டினார். அவர் தனக்காக இன்னொரு மாளிகையை மசூதிக்குப் பக்கத்தில் அதன் கிழக்குத் திசையில் கட்டிக்கொண்டார்.[2] இவருக்கு அடுத்து வந்த சுல்தான் மசூதிக்கு மினார்களைக் கட்டிக் கொடுத்தார். அதன் பின் வந்தவர் சுற்று மதிலைக் கட்டினார்.[3]
1828 ஆம் ஆண்டில் பிரான்சுக்காரரான நாடுகாண் பயணி ரேனே கைலே என்பவர் சென்னேக்கு வரும்வரை இந்த மசூதியைப் பற்றி வேறெந்தத் எழுத்து மூலத் தகவலும் இல்லை. இது பற்றி எழுதிய ரேனே, இந்த மசூதி மண்ணால் கட்டப்பட்டது என்றும், அது இரண்டு பெரிய ஆனால் உயரம் குறைந்த மினார்களைக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இம்மசூதி பெரிதாக இருந்தபோதும், செப்பமற்ற வகையில் கட்டப்பட்டிருந்தது என அவரது குறிப்புக்கள் சொல்கின்றன. கைவிடப்பட்டிருந்த கட்டிடத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் கூடுகட்டியிருந்தன என்றும் அதனால், ஏற்பட்ட கெட்ட நாற்றத்தில் இருந்து தப்புவதற்காகத் தொழுகைகள் கட்டிடத்தின் வெளிப்புற முற்றத்தில் இடம்பெறுவது வழக்கமாக இருந்ததாகவும் ரேனே குறிப்பிட்டுள்ளார்.[4]
ரேனே இந்நகருக்கு வருவதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன் புலானிகளின் தலைவனான சேகு அமாது புனிதப் போர் ஒன்றைத் தொடங்கி நகரத்தைக் கைப்பற்றினார். சேகு அமாது அப்போதிருந்த மசூதியை விரும்பவில்லை. அதனால் அதை அவர் அழிந்துபோக விட்டுவிட்டார். இவ்வாறு பழுதான கட்டிடத்தையே ரேனே பார்த்ததாகத் தெரிகின்றது. சேகு அமாது நகரில் இருந்த பல சிறிய மசூதிகளையும் மூடிவிட்டார்.[5] 1834க்கும் 1836க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த மசூதிக்கு கிழக்குப் பக்கத்தில் பழைய மாளிகை இருந்த இடத்தில் புதிய மசூதி ஒன்றைக் கட்டினார். புதிய மசூதி பெரியது. ஆனாலும், இது உயரம் குறைந்ததாகவும், மினார்களையோ அலங்காரங்களையோ கொண்டிராததாகவும் இருந்தது.[6]
1893 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டுப் படைகள் சென்னேயைக் கைப்பற்றின. அக்காலத்தில் சென்னேக்கு வந்த பிரெஞ்சுப் பத்திரிகையாளரான அலெக்சு துபோயிசு அழிந்துபோன பழைய மசூதியைப்பற்றிய தகவல்களைத் தந்துள்ளார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Bourgeois 1987
- ↑ Hunwick 1999, ப. 18
- ↑ Hunwick 1999, ப. 20
- ↑ Caillié 1830, ப. 460, Vol. 1
- ↑ Bourgeois 1987, ப. 55.
- ↑ Engraving from photo in (Dubois 1896, p. 164)
- ↑ Dubois 1896, ப. 154.