செம்பனை

ஒரு வகை பனை மரம்

செம்பனை (Oil Palm) என்பது ஒரு வகை பனை மரம் ஆகும். தென்னையைப் போன்ற இந்த மரம், பாமாயில் பனை என்று அழைக்கப்படுகிறது. மலேசியாவில் செம்பனை என்றும் கெலாப்பா சாவிட் என்றும் அழைக்கிறார்கள்.[2]

செம்பனை
ஆப்பிரிக்க செம்பனை
(Elaeis guineensis)
உயிரியல் வகைப்பாடு e
இனங்கள்
  • எலியிஸ் குயினென்சிஸ்
    (Elaeis guineensis)
  • எலியிஸ் ஒலிபெரா
    (Elaesis oleifera)
வேறு பெயர்கள் [1]
  • Corozo
  • Alfonsia

இரு வகையான செம்பனை மரங்கள் உள்ளன. ஆப்பிரிக்காவின் செம்பனை எலியிஸ் குயினென்சிஸ் (Elaeis quineensis) என்கிற இனத்தைச் சேர்ந்தது. மற்றொன்று அமெரிக்க செம்பனை. இந்த இனம் எலியிஸ் ஒலிபெரா (Elaesis oleifera) என்கிற இனத்தைச் சேர்ந்தது.[3]

இவற்றைத் தவிர அத்லியா மாரிபா (Attalea maripa) என்கிற செம்பனை வகையும் உள்ளது. இந்த வகை செம்பனை மலேசியாவில் அதிகமாகப் பயிரிடப் படுகிறது. மாரிபா பனை மரம் சிவந்த நிறத்தைக் கொண்ட பனை பழங்களை உருவாக்குகிறது.

இனங்கள்

தொகு
படம் பெயர் பொது பெயர் பரவல்
  எலியிஸ் குயினென்சிஸ் ஆப்பிரிக்க எண்ணெய் பனை அல்லது மக்கா-கொழுப்பு மேற்கு - தென்மேற்கு ஆப்பிரிக்கா; குறிப்பாக அங்கோலா மற்றும் காம்பியா இடையே உள்ள பகுதி
  எலியிஸ் ஒலிபெரா அமெரிக்க எண்ணெய் பனை தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா ஹோண்டுராஸ் முதல் வடக்கு பிரேசில் வரை

மாரிபா பனை மரங்கள் இந்தோனேசியா, மலேசியா, நைசீரியா முதலிய நாடுகளில் பெருமளவு பயிர்செய்யப் படுகிறது. இதனால் மக்களுக்கு பெரும் அளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும்; இவை பயிரிடப்படும் நாடுகளில் காடழிப்பிற்கு ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது எனவும் கூறப்படுகிறது.

புதிய கலப்பினங்கள்

தொகு

எலியிஸ் குயினென்சிஸ் என்கிற செம்பனையின் தாயகம் மேற்கு ஆப்பிரிக்கா ஆகும். இருப்பினும் தற்போது இந்தோனேசியா, மலேசியா, கென்யா, நைஜீரியா, தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

எலியிஸ் ஒலிபெரா என்கிற செம்பனை இனத்தின் தாயகம் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவாகும். மேலும் இது ஹோண்டுராஸ் முதல் வடக்கு பிரேசில் வரை பரவியுள்ளது. இந்த இனங்கள் அரிகேசி (Arecaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த இரண்டு இனங்களையும் இணைத்து புதிய கலப்பினங்களையும் உருவாக்கியுள்ளனர்.

ஆப்பிரிக்க செம்பனை

தொகு

ஆப்பிரிக்க செம்பனை மரமானது 20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. ஓலைகள் எனப்படும் இலைகள் 3 – 6 மீட்டர் நீளம் வரை இருக்கும். இளம் மரம் வருடத்திற்கு 18 – 30 இலைகளை உருவாக்கும். ஏறத்தாழ 4 ஆண்டுகளுக்குப் பிறகு பனை ஓலைகள் பழுத்து உதிர்ந்து விடும். இது பசுமை மாறா மரம். கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களில் வளரும்.

பயிரிட்ட நான்கு ஆண்டுகளில் பூக்கத் தொடங்குகிறது. ஒரே மரத்தில் ஆண், பெண் பூக்கள் தனித்தனி பாளையில் காணப்படும். ஒரு சில மரங்களில் மட்டும் ஆண், பெண் பூக்கள் ஒரே பாளையில் தோன்றுவதும் உண்டு. ஒரு பாளையில் அல்லது மஞ்சரியில் பல நூறு பூக்கள் மலரும்.

முதிர்ச்சி பனை

தொகு

செம்பனைக் காய்கள் 5 – 6 மாதங்களில் முதிர்ச்சி அடையும். காய்கள் நெருக்கமாக ஒரு கொத்தாகக் காணப்படும். ஒரு குலையில் 150 முதல் 200 வரை காய்கள் இருக்கும். பழங்கள் சிவப்பு நிறம் கொண்டவை. ஆகவேதான் இதை செம்பனை என்கின்றனர்.

தென்னை மரத்தைப் போன்று ஆண்டு முழுவதும் பலன் தரும். சுமார் 80 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக வளர்ந்து பலன் தரும். முதல் 25 ஆண்டுகள் அதிக பழங்களைக் கொடுக்கும். பழங்கள் உருண்டையாக இருக்கும். கொட்டைகள் கருநிறத்தில் இருக்கும். மலேசியாவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மறுநடவு செய்வது வழக்கம்.

உற்பத்தி

தொகு

ஒரு எக்டேரில் ஓர் ஆண்டிற்கு 4 முதல் 6 டன்கள் வரை எண்ணெய் கிடைக்கும். மற்ற எண்ணெய் தரும் தாவரங்களை விட செம்பனை பல மடங்கு எண்ணெய் கூடுதலாகத் தருகிறது.

ஒரு எக்டேரில் பயிரிடப்படும் நிலக்கடலையில் இருந்து 375 கிலோ எண்ணெய் கிடைக்கிறது. கடுகு தனியத்தில் இருந்து 560 கிலோவும்; சூரிய காந்தியில் இருந்து 545 கிலோவும்; எள்ளில் இருந்து 100 கிலோவும்; தேங்காயில் இருந்து 970 கிலோ என்கிற அளவுகளில் எண்ணெய் கிடைக்கிறது. ஆனால் செம்பனையில் இருந்து 4000 முதல் 6000 கிலோ வரை எண்ணெய் கிடைக்கிறது.

பயன்பாடு

தொகு

2016-ஆம் ஆண்டில் செம்பனை உற்பத்தி என்பது உலகளவில் 62.6 மில்லியன் டன்களாகும். இந்தோனேசியா உலகளவில் அதிக எண்ணெயை உற்பத்தி செய்கிறது. அடுத்த நிலையில் மலேசியா, தாய்லாந்து, கொலம்பியா போன்ற னாடுகள் உள்ளன.

2015-ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி ஒரு தனிநபர் ஓர் ஆண்டிற்கு 7.7 கிலோ செம்பனை எண்ணெயைப் பயன்படுத்துகிறார் எனத் தெரிய வருகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Royal Botanic Gardens, Kew. "World Checklist of Selected Plant Families". Archived from the original on 2022-01-05. பார்க்கப்பட்ட நாள் 2024-02-02.
  2. Singh, R.; Ong-Abdullah, M.; Low, E.-T.L.; Manaf, M.A.A.; Rosli, R.; Nookiah, R.; Ooi, L.C.-L.; Ooi, S.-E. et al. (2013). "Oil palm genome sequence reveals divergence of interfertile species in Old and New worlds". Nature 500 (7462): 335–339. doi:10.1038/nature12309. பப்மெட்:23883927. 
  3. Gledhill, David (2008). The Name of Plants (4 ed.). Cambridge: Cambridge University Press (CUP). p. 279.

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பனை&oldid=4108477" இலிருந்து மீள்விக்கப்பட்டது