செம்பூ மரம்

வேறு பெயர்கள் மயில்பூ, மயில்ரோஜா, புனித ஆவிமரம் என்பன. ஈஸ்டர் பண்டிகைக்கு 50 நாளுக்குப் பின் பெந்தோகோஸ்த் விருந்தின்போது இம்மரம் மிகுதியான பூக்களைத் தோற்றுவிப்பதால் புனித ஆவிமரம் என்பர். இம்மரத்தின் தாவரப் பெயர் டெலானிக்ஸ் ரீஜியா (Delonix regia) என்பதாகும். இதற்குப் பயின்சியானா ரீஜியா (Painciana regia) என்ற இணை தாவரப் பெயரும் உண்டு.

டெலானிக்ஸ் ரீஜியா

குடும்பம் தொகு

லெகுமினேசி குடும்பத்தைச் சேர்ந்தது. தாயகம் மடகாஸ்கர் ஆகும். இம்மரம் மிதமாகவே வளர்ச்சியுறும் தன்மை கொண்டது. சமவெளிகளிலும், மலைப்பகுதிகளிலும் பொதுவாக 750-1200 மீ வரை வளரக்கூடியது. வாதநாராயணன் பேரினத்தைச் சேர்ந்தது அதனைப் போல் நன்கு கிளைப்பது இல்லை; மிகு வளர்ச்சியைத் தருவதும் இல்லை; அடிமரம் வாதநாராயணன் மரத்தைவிடச் சிறியதாக இருக்கும்.

மரம் தொகு

முள் இல்லாத இம்மரத்தில் இலைகள் இரட்டைச்சிறகுக் கூட்டிலை அமைப்பில் இருக்கும். இளையடிச்செதில்கள் சிறியவை. சிற்றிலைகள் இளம் பச்சை நிறத்தில் சிறியவையாக இருக்கும். ஒவ்வொரு கூட்டிலையும் 50 செ.மீ நீளத்தில் இருக்கும். ஒவ்வொரு இலையிலும் 10-20 சிற்றிலைகள் காணப்படும். ஒவ்வொரு சிற்றிலையும் 6 மி.மீ நீளமானது. பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இலைகள் உதிர்கின்றன. மரத்தில் உள்ள இலைகள் முழுதும் உதிர்த்த பிறகே பூக்கத் தொடங்கும். பூவடிச்செதில்கள் உதிரும் தன்மை கொண்டவை.

அல்லிகள் தொகு

அல்லிகள் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் கலந்த நிறங்களில் ஒளிரும். அல்லி இதழ்கள் தேக்கரண்டியின் வடிவத்தில் அழகான நெளிவுடைய விளிம்புகளைக் கொண்டுள்ளன. மேற்பகுதியில் உள்ள அல்லி மட்டும் வெள்ளையாகவும், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கோடுகளுடன் காணப்படும். மகரந்தப் பைகள் சீராக இருக்கும். சூல்பையில் சூல்கள் பல உள்ளன.

வளர்ப்பு முறை தொகு

விதை மூலம் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. நெற்றுகளை வெயிலில் உலர்த்திக் குச்சியால் அடித்து விதைகளைத் தனித்தெடுக்கலாம். விதைகளை வெந்நீரில் 70-80٥ C ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து விதைக்க வேண்டும். ஏறக்குறைய 10-12 மாத வயதுடைய கன்றுகளை ஊன்றிக் கால்நடைகள் மேயாமல் பாதுகாத்து வளர்க்க வேண்டும். இவ்வாறு விதைத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் மரத்திலிருந்து பூக்கள் உண்டாகும். பதியன் முறையில் நட்டும் இனப்பெருக்கம் செய்யலாம்.

பயன்கள் தொகு

பூக்கள் நேராகவும், கண்ணைக்கவரும் தோற்றத்திலும் உள்ளமையால் சாலை ஓரங்களில் நடுவதற்கும், பூங்காக்களில் வளர்ப்பதற்கும் ஏற்றதாகும். மரக்கட்டை வெள்ளையாகவும், எடை குறைந்தும் இருக்கும். மரத்தின் கிளைகளை வெட்டி இழைத்து அரிவாள், களைக் கொத்துகளுக்குக் கைப்பிடி செய்யலாம். பொருள்களை அனுப்பும் பெட்டிகளை செய்யலாம். ஓரளவே நிழல் தரும். தழைகளை வெட்டி நெல் வயலுக்குப் பசுந்தழை உரமாக இடலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பூ_மரம்&oldid=3462762" இலிருந்து மீள்விக்கப்பட்டது