செயிற்றியம்
செயிற்றியம் என்னும் நாடகத்தமிழ் இலக்கண நூல் இன்று பெயரளவில் மட்டும் உள்ளது.
செயிற்றியம் இருந்தது என்பது அடியார்க்கு நல்லாரும், அரும்பத உரையாசிரியரும், இளம்பூரண அடிகளும், பேராசிரியரும், யாப்பருங்கலவிருத்தியுரைகாரரும் தம் உரைகளில் குறிப்பிட்டதனால் தெரிகிறது.[1]
அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது குறிப்பிடும் நூல்களில் இது ஒன்று.
இளம்பூரணரின் தொல்காப்பிய உரையில் செயிற்றியம்
தொகுஇளம்பூரணர் தம் தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் உரையில் குறிப்பிடும் செயிற்றிய நூற்பாக்கள் சில:[2][3]
"மத்திமம் என்பது மாசறற் தெரியிற்
சொல்லப் பட்ட எல்லாச் சுவையொடு
புல்லாதாகிய பொலிவிற் றென்ப ."
" நயனுடை மரபின் இதன்பயம் யாதெனிற்
சேர்த்தி யோர்க்குஞ் சார்ந்துபடு வோர்க்கும்
ஒப்ப நிற்கும் நிலையிற் றென்ப . "
" உய்ப்போ ரிதனை யாரெனின் மிக்கது
பயக்குந் தாபதர் சாரணர் சமணர்
கயக்கறு முனிவர் அறிவரொடு பிறருங்
காமம் வெகுளி மயக்கம் நீங்கிய
வாய்மை யாளர் வகுத்தனர் பிறரும்
அச்சுவை யெட்டும் அவர்க்கில ஆதலின்
அச்சுவை ஒருதலை ஆதலின் அதனை
மெய்த்தலைப் படுக்க இதன் மிகவறிந் தோரே ."
என்பது செயிற்றியச் சூத்திரம் . இதனானே இது வழக்கிலக்கணம் அன்று என உணர்க.
" உடனிவை தோன்றும் இடமியா தெனினே
முடவர் செல்லுஞ் செலவின் கண்ணும்
மடவோர் சொல்லுஞ் சொல்லின் கண்ணும்
கவற்சி பெரிதுற் றுரைப்போர்க் கண்ணும்
பிதற்றிக் கூறும் பித்தர் கண்ணுஞ்
சுற்றத் தோரை இகழ்ச்சிக் கண்ணும்
மற்று மொருவர்கட் பட்டோர்க் கண்ணுங்
குழவி கூறு மழலைக் கண்ணும்
மெலியோன் கூறும் வலியின் கண்ணும்
வலியோன் கூறும் மெலிவின் கண்ணும்
ஒல்லார் மதிக்கும் வனப்பின் கண்ணுங்
கல்லார் கூறுங் கல்விக் கண்ணும்
பெண்பிரி தன்மை யலியின் கண்ணும்
ஆண்பிரி பெண்மைப் பேடிக் கண்ணும்
களியின் கண்ணுங் காவாலி கண்ணும்
தெளிவிலார் ஒழுகும் கடவுளார் கண்ணும்
ஆரியர் கூறுந் தமிழின் கண்ணும்
காரிகை யறியாக் காமுகர் கண்ணும்
கூனர் கண்ணும் குறளர் கண்ணும்
ஊமர் கண்ணும் செவிடர் கண்ணும்
ஆன்ற மரபின் இன்னுழி எல்லாந்
தோன்றும் என்ப துணிந்திசி னோரே."
என இவ்வகையெல்லாம் உளவெனச் ( செயிற்றியனார் ) ஓதுதலின் . அவை நான்காகியவாறு என்னையெனின் . முடவர் செல்லுஞ் செலவு எள்ளுதற் பொருண்மை யாயிற்று ; மடவோர் சொல்லுஞ் சொல் மடமைப் பொருண்மை யாயிற்று ( கவற்சி பெரிதுற்றுரைப்போர் கூற்றுப் பேதைமையாயிற்று ; குழவிகூறு மழலை இளமைப் பொருளாயிற்று ; ஏனைய வெல்லாம் இவற்றின்பாற் படுதல் காண்க . புணர்ச்சி நிமித்தமாகக் கூற்று நிகழ்ந்துழி வரும் நகை இளமை என்பதனாற் கொள்க . இப் பொருண்மை செயிற்றியத்தில் ' வலியோன் கூறும் மெலிவு ' என்பதனாற் கொள்க .
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
- ↑ ":: TVU ::". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.
- ↑ "தமிழ் இணையக் கல்விக்கழகம் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.
- ↑ "தமிழ் இணையக் கல்விக்கழகம் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.