செல்லியம்மன் (இறைவி)

செல்லியம்மன் என்பது திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை அருகில் உள்ள பெருமாள்பட்டு எனும் ஊரில் கோயில் கொண்டுள்ள நாட்டார் தெய்வம் ஆகும்.

செல்லியம்மனின் கணவன் இடிமன்னத் தேவன் என்று சொல்லப்படுகிறது. இருவருக்கும் 16 குழந்தைகள் பிறந்தன. இவர்களின் வாழ்க்கையில் வறுமை தாண்டவம் ஆடியது. மழைக்காலம், வறுமை அதிகரித்தது. உணவில்லை, உடையில்லை. மழையும் ஓய்ந்தபாடில்லை. கணவனுக்கும் மனைவிக்கும் வயதாகிப் போனதால் மழையில் சென்று உணவு தேட முடியவில்லை. பெற்றவர்களுடன் குழந்தைகளும் சேர்ந்து பட்டினியால் தவித்தன. தாய் தந்தையர்க்கோ என்ன செய்வதென்று விளங்கவில்லை. செல்லியம்மன் தன் குழந்தைகளை அழைத்து, திசைக்கொருவராகச் சென்று சாப்பிடுவதற்கு எது கிடைக்கிறதோ அதைக் கொண்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தாள். பிள்ளைகளும் கொட்டும் மழையிலும் உணவு தேடிப் புறப்பட்டனர்.

கொட்டும் மழையிலும் குழந்தைகள் உணவுக்காகச் சென்றுள்ளதை நினைத்துக் கவலை கொண்ட செல்லியம்மா, வீட்டில் அடுக்குப் பானையின் அடியில் கிடந்த கொஞ்சம் கேழ்வரகு மாவை எடுத்து அவித்துப் புட்டு செய்தாள். நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகள் வரவில்லை. கடும் மழை காரணமாக ஒரு வழிப்போக்கன் வந்து வீட்டின் திண்ணையோரம் ஒண்டிக் கொள்கிறான். அவன் பசியோடு குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட செல்லியம்மன், தான் அவித்து வைத்திருந்த புட்டிலிருந்து ஒரு பிடி எடுத்து வழிப்போக்கனுக்குக் கொடுத்தாள். அவனும் அதைத் தின்றுவிட்டு மழை விட்டதும் போகலாமென்று அமர்ந்திருந்தான்.

பசியால் வாடியிருக்கும் அவனைக் கண்ட இடிமன்னன் தன் மனைவிக்குத் தெரியாமல் தானும் ஒரு பிடி புட்டை எடுத்து வந்து அவனுக்குக் கொடுக்கிறான். அதைப் பார்த்துவிட்ட செல்லியம்மன், 'தனக்குத் தெரியாமல் ஏன் கொடுக்க வேண்டும்?' என்று தன் கணவன் மீது கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பி விடுகிறாள். இடிமன்னன் எவ்வளவு சொல்லித் தடுத்துப் பார்த்தும் செல்லியம்மன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. உணவு தேடிச் சென்ற தன் குழந்தைகள் பதினாறு பேரும் எங்கெங்கு இருக்கிறார்களோ அந்தந்த இடங்களிலேயே கல்லாகிப் போகட்டும் என்று சொல்லிவிட்டு அந்த ஊரில் உள்ள சிவன் கோயிலுக்கு முன்பாகச் சென்று தானும் கல்லாகிப் போனாள்.

பெருமாள்பட்டில் உள்ள அந்த சிவன் கோயிலைச் சுற்றிலும் வெவ்வேறு இடங்களில் சிலைகள் காணப்படுகின்றன. அந்த சிலைகள் உணவு தேடிப் புறப்பட்ட செல்லியம்மனின் பிள்ளைகள் என்று சொல்லப்படுகின்றன. கோயிலுக்கு முன் உள்ள பெரிய பெண் சிலை செல்லியம்மனுடைய சிலை என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டின் ஆடி மாதத்திலும் கூழ் ஊற்றி இந்த அம்மனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்லியம்மன்_(இறைவி)&oldid=3593000" இலிருந்து மீள்விக்கப்பட்டது