செவ்வானம் (புதினம்)

செவ்வானம் தொகு

இருபதாம் நூற்றாண்டு ஈழத்து நாவலாசிரியருள் தலை சிறந்த இடத்தைப்பெற்றுள்ள கணேசலிங்கனின் முன்றாவது புதினமே செவ்வானமாகும். இது 1967 ம் ஆண்டு வெளியிடப்பட்டது.இப்புதினம் மூன்று நாவல் குழுவின் (Trilogy) ஒன்றாகும் என்று க.கைலாசபதி கூறுகிறார் [1].இதுவரை வெளிவந்துள்ள ஈழத்து தமிழ் நாவல்களின் பட்டியலில் புதிய பயணமும், செவ்வானமும் தலையாய இடத்தைப் பெறவல்லன என்று நா.சுப்பிரமணியன் [2] குறிப்பிட்டுள்ளார். இந்நூலைப்பற்றியும், நூலாசிரியரின் திறன் போற்றியும் இந்நூலின் முகவுரையில் க. கைலாசபதி [3] கீழ்க்குறிப்பில் கண்டுள்ளவாறு பாராட்டிச்சிறப்பிக்கிறார்..

செவ்வானத்தின் கருப்பொருள் தொகு

மென்மையானது என்று கருதப்படும் காதலையும் ‘குரூரமானது, இழிந்தது என எண்ணப்படும் அரசியல் இரண்டையும் எம் அன்றாட வாழ்வின் கூட்டுத்தொகுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் வரலாற்றையும் இவற்றோடு இணைத்து நாவலொன்று எழுத வேண்டும் என்ற என் விருப்பே இக்கதை நூலாகக் கனிந்த து’ என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்[4].'அரசியல், பொருளாதார, சமூகப்பின்னணியிலேயே நாவல் விரிகிறது. இப்பின்னணியை வரலாற்று நூல்களிலன்றி, நாவலில் இருந்து பெற முடிந்தமை ஒன்றே நூலின் வளர்ச்சிக்கு சான்றாகும்’ என்று கைலாசபதி கூறுகிறார் [5]இப்புதினத்தில் சமுதாயத்தின் மேல் தளத்தில் உள்ள முதலாளி, அடித்தளத்தில் உள்ள தொழிலாளி வர்க்கத்தினரையும், நடுத்தர வர்க்கத்தினரையும் பின்னிப்பிணைத்தே செ. கணேசலிஙகம் இந்நாவலை அமைத்துள்ளார் என்ற நிலை கைலாசபதியின் திறனாய்வு கூற்றுக்கு ஆதாரமளிக்கிறது.


கதையமைப்பு தொகு

செவ்வானத்தின் கதாநாயகன் நாகரத்தினம். டயர் கம்பெனி அதிபர். முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதி. அவரது மனைவி பெயர் இந்திரா. சொகுசான வாழ்க்கை, ஆடம்பரம் ஆகியவற்றில் நாட்டம் உள்ளவள். அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள். மூத்தவள் பெயர் பத்மினி; மருத்தவக்கல்லூரி மாணவி. இளயவள் பெயர் செல்வி; பள்ளி மாணவி. அவர்களின் செல்வச்செருக்கை வெளிப்படுத்தும் அவர்கள் வீட்டின் பெயர் அவர்களின் இளைய மகள் பெயரை தாங்கி நிற்கிற செல்வி பவனம். இவர்கள் இருப்பிடம் நாட்டின் தலைநகரான கொழும்பு.அவர்கள் வீட்டை கவனித்துக்கொள்வது மேரி என்ற வேலைக்காரப் பெண். அவளுக்குதவ பீம சேனா என்கிற பன்னிரண்டு வயதுப் பையன். கார்கள் ஒட்ட செல்வா என்ற பெயர் உள்ள டிரைவர். நாகரத்தினத்திற்கு எட்ம்ண்ட், அப்புகாமி என்ற பெயருடைய இரண்டு தொழில் நண்பர்கள்.

நாகரத்தினத்தின் உள்ளம் கவர்ந்த பேரழகி மாலினி. நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி. மாலினிக்கு பத்திரிக்கை அலுவலகத்திலே வேலை. அவள் எம்.டியின் பர்சனல் செகரட்டரி.அவளுக்கு மார்க்சிசவாதியான பொன்னையா மீது தீராத காதல்.மாலினியின் காதலை பொன்னையா ஏற்க மறுக்கிறான். மாலினி அலுவலகத்திலேயே வேலை பார்த்த பொன்னையா அவனது தீவிரவாத நடவடிக்கைகள் பிடிக்காத நிர்வாகம் அவன் வேலையை இழக்கச் செய்து விரட்டிவிடுகிறது. அதன் விளைவாக தீவிர தொழிற்சங்கவாதியாகி விடுகிறான். மாலினி எவ்வளவோ முயன்றும் அவன் காதலைப் பெற அவளால் இயலவில்லை.

மாலினியின் அன்பைப் பெற துடியாய் துடிக்கும் நாகரத்தினத்துடன் மாலினி நெருங்கிப்பழகுகிறாள். செல்வி பவனத்துக்கும் வந்து போகிறாள். இந்திராவைத்தவிர அனவராலும் விரும்பப்படுகிறாள். பம்பலபிட்டியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் அவள் வசித்து வந்தாள். அவளை அங்கு கொண்டு வந்து விட்டுச் செல்வது நாகரத்தினத்தின் வழக்கம். நாகரத்தினத்திற்கு மாலினி சுதந்திராக்கட்சியும் இடதுசாரிக்கட்சிகளும் ஒன்று சேர்ந்து கூட்டரசாங்கம் அமைக்கப்போகிறார்கள் என்ற செய்தியை முன்னமே தெரிவித்து அவன் ஷேர் மார்க்கட்டில் இலாபம் பெற உதவுகிறாள். நாகரத்தினம் மாலினியின் அன்பைப்பெற பலமுறை முயன்று அவளுடன் நெருங்கிப்பழகுகிறார். பொன்னையாவின் அன்பைப் பெற மாலினி பலமுறை முயன்றும் தோல்வியையே தழுவுகிறாள். 1964- 65 ல் ஆட்சிக்கு வந்த கூட்டரசாங்கமும் கவிழ்கிறது.

நா. சுப்பிரமணியன்[6] என்ற நூலில் செவ்வானம் என்ற இந்த புதினத்தின் தலைப்பை விளக்கிக் குறிப்பிடுவது அனைவராலும் கருத்திற் கொள்ளத்தக்கது.

சமகால அரசியல் வரலாற்று இலக்கியம் தொகு

க. கைலாசபதி ‘அரசியல், பொருளாதார சமூகப் பின்னணியிலேயே நாவல் விரிகிறது. வரலாற்று நூல்களிலின்றி நாவலிலிருந்து பெற முடிந்தமை ஒன்றே நூலின் வளத்திற்கு போதிய சான்றாகும்’ இந்நூலின் முன்னுரையில்குறிப்பிடுகிறார் [7].ஒருவரலாற்றிலக்கியம் வலிமை கொண்டதாக இருக்க வேண்டுமானால் ‘விதந்து காட்ட எடுத்துக்கொண்ட வர்க்கத்திற்கு எதிரான பாத்திரங்களும் இன்றியமையாதன.’ [8]. இந்நிலைப்பாட்டில் உருவாக்கப்பட்டப்பாத்திரங்களே நாகரத்தினம், பொன்னையா ஆகியோரது பாத்திரங்கள். பொன்னையா இல்லையேல் நாகரத்தினம் இல்லை என்ற நிலையில் இவ்விரு பாத்திரங்களும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. இவ்விருவரையும் சார்ந்து இயங்கும் மாலினி சமுதாய அரசியற் சூழலை சித்தரிக்க உதவும் கருவியாக படைப்பிலக்கிய ஆசிரியருக்கு பயன் படுகிறாள். திருமதி பண்டரநாயகாவால் கொண்டுவரப்பட்ட பத்திரிக்கை கட்டுப்பாட்டு சட்டம் இப்புதினத்தில் குறிப்பிடப்படுகிறது. அதைப்பற்றிய வேறுபட்ட விமரிசனங்கள் இப்புதினத்தின் பாத்திரங்கள் மூலம் வெளிக்கொணரப்படுகின்றன. அரசியலுக்கும் இலக்கியத்துக்கும் தொடர்பில்லை என்ற தமிழ்நாட்டவரது எண்ணத்தை பொய்யாக்கியதும் இந்நாவலாகும் என்ற இந்நாவலாசிரியரின் கூற்று கூர்ந்துநோக்கத்தக்கது.

பாடநூலாக செவ்வானம் தொகு

செவ்வானம் சென்னைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் எம்.ஏ க்கு இலக்கியப்பாடநூலாக விதிக்கப்பட்டிருந்தது என்று நாவலாசிரியர் அதன் இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் கூறுகிறார்[9].

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம், 1968
  2. ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்,குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2009
  3. தொழிலாளர் வர்க்கத்தின் நீண்ட பயணம் எதிர்கால வரலாற்றுடன் சங்கமமாக விருப்பது. அச்சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பெருமாற்றங்களை யதார்த்தமாக சித்தரிக்க நூற்றுக்கணக்கான நாவாலாசிரியர் தேவைப்படுவர். அவர்கள் படிக்கும் நாவல்களில் நிச்சயமாக செவ்வானம் ஒன்றாகவிருக்கும்
  4. சில குறிப்புகள், செவ்வானம், முதற்பதிப்பு, குமரன் பப்ளிசர்ஸ், 1967, பக்கம் 6
  5. செவ்வானத்துக்கு முன்னுரை (1967), பாரி நிலையம், சென்னை
  6. ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம், குமரன் பதிப்பகம், கொழும்பு, 1978 : காதலையும் அரசியலையும் இணைத்து எழுதப்பட்ட இந்நாவலின் தலைப்பான செவ்வானம் என்ற சொல்லாட்சி இரண்டையும் உருவகப்படுத்துவதாக அமைகிறது. காதல் ஒரு செவ்வானம் என்றும் அதன் அழகுத்தோற்றம் நிலையற்றதென்றும் மாலினிக்கு பொன்னையா உணர்த்துகிறான். தேசிய முதலாளிகளுடன் இடதுசாரிகள் இணைந்து அமைத்த கூட்டாட்சியும் தற்காலிக அழகுகாட்டும் செவ்வானமே என்பது கதையில் உணர்த்தப்படுகிறது.
  7. முன்னுரை, பக்கம், 24
  8. முன்னுரை, பக்கம், 30
  9. இரண்டாம் பதிப்பின் முகவுரை, சென்னை, பக்கம் 7, 1994
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வானம்_(புதினம்)&oldid=3297583" இலிருந்து மீள்விக்கப்பட்டது