சேனையூர் வர்ணகுல வினாயகர் ஆலயம்

சேனையூர் வர்ண குல வினாயகர் ஆலையம்


சேனையூர் எல்லாளன் படைகள் அவனது சேனைகள் இவ்வழி வந்து தங்கியிருந்து சென்றதால் சேனையூர் என பெயர் பெற்றது என்று கர்ண பரம்பரைக் கதை வழியாக அறிய முடிகிறது.ஈழ வராலாற்றில் எல்லாளனுடைய காலம் கிறிஸ்துவுக்கு முற்பட்டதாக பேசப் படுகிறது.இதன் மூலம் சேனையூரின் வரலாறு பல்லாயிரம் வருச பண்பாட்டை கொண்டது என நிருபணமாகிறது.


திருக்கோணமலை திருக்கோயில்கள் எனும் வரலாற்று நூலில் பண்டிதர் வடிவேல் அவர்கள் அகத்தியர் ஸ்தாபனத்துடன் இவ்வூரையும் இவ் ஆலையத்தையும் தொடர்பு படுத்துகிறார்."திருகோணமலை மாவட்டத்தில் கொட்டியாபுரப் பற்றில் சேனையூர் கிராமத்தின் மத்தியில் இவ் ஆலையம் இருக்கின்றது.அகஸ்தியர் ஸ்தாபனம் அமைந்துள்ள திருக்கரசையம்பதி சிறப்புற்று விளங்கிய காலத்தில் சைவ மக்கள் நெருக்கமாய் வாழ்ந்த கிராமங்களில் இதுவும் ஒன்று." என்று சொல்வதன் மூலம் மிகுந்த செல்வாக்குப் பெற்ற திருக்கரசை புராண மரபோடு சேனையூர் தொடர்பு படுகிறது.


திருக்கரசை புராணத்துக்கு பயன் சொல்ல அந்த நாட்களில் வித்தகர் விஜயசிங்கம் காளியப்பு அவர்களும் அவரது மறைவுக்கு பின் அவரது மகன் காளியப்பு விஜயசிங்கம் அவர்களும் பயன் சொல்லி வந்தமை திருக்கரசையுடன் சேனையூர் கொண்ட தொடர்பை வரலாற்று ரீதியாக உறுதிப் படுத்துகிறது

. இதே நூலில் சேனையூர் வீரபத்திரர் கோயில்ப்பற்றி வரும் குறிப்புகள் சோழர் காலத்துடனான சேனையூர் பெற்றிருந்த முக்கியத்துவத்தை தெளிவு படுத்துகிறது.எண்பதுகளில் கோயில்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட பண்டிதர் வடிவேல் அவர்கள் வீரபத்திரர் கோயில் பகுதியில் பொலநறுவை பாணியிலான ஒரு கோயில் உள்ளதாக குறிப்பிடுகிறார்.


சேனையூருக்கும் குளக்கோட்டனுக்குமான தொடர்பையும் இப்படிச் சொல்வார்"குளக்கோட்டு மன்னன் கோணேஸ்வரத் திருப்பணிகளை நிறைவேற்றிய பின் விவசாய நோக்கங்களுக்காக அல்லைக் குளத்தை கட்டி மக்களை இந்தியாவிலிருந்து கொண்டு வந்து குடியேற்றினான்.அப்படி குடியேற்றப் பட்ட மக்களும் இங்கு வாழ்ந்து வந்திருக்கிறார்கள்."இக் கூற்று சேனையூர் மக்கள் குடியேற்றப் பட்டவர்கள் அல்ல என்பதும் ஆதி காலம் தொட்டு வாழ்ந்து வந்தவர்கள் என்பதும் குளக்கோட்டன் காலத்திலேயே இங்கு ஒரு வழிபாட்டுப்முறை இருந்திருப்பது தெளிவாகிறது.அன்றைய நாளில் ஒரு சிறிய வழி பாட்டு தலத்தை வைத்து ஆதரித்து வந்துள்ளார்கள் என மேலும் குறிப்பிடுகிறார். வர்ணகுலப் பிள்ளையார் பற்றி வடிவேல் ஐயா அவர்கள் பல சுவாரசிமான செய்திகளையும் சொல்கிறார்."இந்தியாவிலிருந்து வந்த முத்துலிங்க சன்னியாசி என்பவர் இவ்வூருக்கு அருகிலுள்ள மருதடிச்சேனை எந்று கூறப்படும் இடத்தில் தங்கியிருந்தார் அவரது தபோ பலத்தால் இந்த இடம் தெய்வீகமானதாக பிரகாசித்தது அவர் இவ்வூரில் வாழ்ந்து வந்த திரு.கந்தப்பர் என்பவருக்கு இந்த இடத்த்தில் ஆலையம் அமைக்கும் படி அருள் வாக்கு கொடுத்தாராம்"சேனையூர் முனிவர் சித்தர் ஆசி பெற்ற இடம் என்பது இங்கு புலப் படுகிறது.முத்துலிங்க சன்னியாசியின் வழி காட்டல் இவ் ஆலையத்துக்கு இன்று வரை ஒரு மரபின் தொடர்ச்சியயை பேணி நிற்கிறது.


முத்துலிங்க சன்னியாசி அவர்கள் மேலும் திரு.கந்தப்பரிடம் "ஆலையம் அமைப்பதற்குரிய நிதியும் கொடுத்து சென்றதாக கூறுகிறார்கள்.அடுத்த முறை முத்துலிங்க சன்னியாசி வந்த போது ஆலையம் அமைக்கப் படாதது கண்டு வருந்தி தனது அருட் கட்டளையயை உதாசீனம் செய்ததால் கந்தப்பர் குடி மீது சாபமிட்டாராம்" சன்னியாசி ஒருவரோடு தொடர்பு படும் இந்த சம்பவங்கள் சேனையூர் வர்ணகுல ஆலயத்தின் புனிதத் தன்மையயயுமதன் வழி வந்த ஒரு பக்தி மரபையும் வலியுறுத்தி நிற்கிறது.


மேலும் பண்டிதர் வடிவேல் அவர்கள் இப்படி கூறுகிறார். "சினம் கொண்ட சன்னாசியார் இங்கு வாழ்ந்த தியாகராஜா தில்லைவனம் என்பவரை அழைத்து விபூதி மந்திரித்து அவருடைய வாயிலிட்டு இந்த இடத்தில் ஆலையம் அமைக்கும்படியும், குளக்கோட்டு மன்னனால் கட்டப் பட்ட அல்லைக் குளத்தில் அரசடிவானில் உள்ள பிள்ளையாரை எடுத்து வந்து பிரதிஸ்டை செய்யுமாறு கூறினாராம்."


முன்னய நாட்களில் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து வியாபாரம் செய்தார்கள் என செவி வழி கதைகள் கூறுகின்றன.சேனையூர் ஒரு நெற் களஞ்சியமாக விளங்கியது.பிரம்பு வெளி,இறையாத்து வெளி,சந்தணவெட்டு,முதலான இடங்களிலும் குளங்கள் வழி விரிந்திருக்கும் வயல் நிலங்களுக்கு சொந்தக்காரர்கள் இதனால் பெருமளவில் நெல் விளைந்தது நெற் களஞ்சியமாக இருந்த சேனையூருக்கு வல்வெட்டித்துறை போன்ற இடங்களிலிருந்து வியாபார நோக்கில் வந்து சென்றனர்.சிறிய படகுகள் சேனையூர் துறைகளில் நங்கூரமிட்டு பொருட் பண்டமாற்று வணிகத்தில் ஈடுபட்டதாக அறிய முடிகிறது.அத்தோடு இங்கு புகையிலைச் செய்கை பிரபல்யமாக இருந்தமையும் குறிப்பிடத் தக்கது.யாழ்ப்பாணத்து வணிகர்கள் பொங்கலிட்டு வர்ணகுலப் பிளளையாரை வழி பட்டதாகவும் தங்கள் வணிகம் சிறக்க நேர்த்திக்கடன்களை செய்ததாகவும் செவி வழி செய்திகள் சொல்கின்றன