சேருதளம் குன்னின்மதிலகம் மகாதேவர் கோயில்

சேருதளம் குன்னின்மதிலகம் மகாதேவர் கோயில் கேரளாவில் கண்ணூரில் சேருதளம் என்னுமிடத்தில் உள்ள கோயிலாகும். இக்கோயிலின் பழைய பெயர் குன்னின்மதிலகம் சிவன் கோயில் என்பதாகும். இங்குள்ள சிவன் 'குன்னின்மதிலகத்தப்பன்' என்றழைக்கப்படுகிறார். குன்னின்மதிலகத்தப்பன், காலையில் தட்சிணாமூர்த்தியாகவும், நடுப்பகலில் கிராதமூர்த்தியாகவும், மாலையில் உமாமகேசுவரராகவும் பக்தர்களால் வழிபடப்படுகிறார்.

சேருதளம் குன்னின்மதிலகம் மகாதேவர் கோயில்

இங்குள்ள மற்றொரு புகழ் பெற்ற கோயில் ராகவபுரம் (அனுமாரம்பலம்) கோயிலாகும்.

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் பயங்கடி.

வரலாறு தொகு

திரேதா யுகத்தில், ராமபிரானின் நம்பிக்கைக்கும் பக்திக்கும் பாத்திரமான அனுமாரிடம் மகாதேவரின் சிலையை ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பு ராமரால் வழங்கப்பட்டது. செல்லும் வழியில் அவர் மகாதேவரின் ஒரு பகுதியை இந்தப் புனித மண்ணில் நிர்மாணித்தார். அதனால் அவர் ராமேஸ்வரம் செல்ல தாமதமானது. ஆஞ்சநேயரின் தாமதமான வருகையின் காரணமாக, ராமர் களிமண்ணால் செய்த மகாதேவரின் சிலையை அமைத்ததுடன், தனுஷ்கோடியில் உள்ள களிமண் சிலைக்கு உரிய சக்தியைத் தந்தார்.

அந்த சக்தியும், மண்ணின் முக்கியத்துவமும் காரணமாக இறைவரும், முனிவர்களும் இவ்விடத்தில் மகாதேவரை வழிபட ஆரம்பித்தனர். கலி யுகத்தில், ஆறு பிராமணக் குடும்பத்தார் இவ்விடத்தில் மகாதேவருக்கான கருவறையைக் கட்டினர். தொடர்ந்து அந்த தெய்வத்தை மூன்று வடிவங்களில் —காலையில் தட்சிணாமூர்த்தி, நடுப்பகலில் கிராதமூர்த்தி, மாலையில் உமாமகேசுவர் என்ற வகையில்—வழிபட ஆரம்பித்தனர். நாளடைவில் வெளிநாட்டவர் படையெடுப்பின் காரணமாக கோயிலின் பல பகுதிகள் அழிக்கப்பட்டன. 1980களில் கோயில் டிரஸ்டிகளின் குடும்பத்தாரும், உள்ளூர் பக்தர்களும் கோயிலைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மூலவர் சன்னதி, நமஸ்கார மண்டபம், கருவறையைச் சுற்றி நான்கு பக்கக் கட்டடம் (நாலம்பலம்), விக்னேச்வர் சன்னதி, சுப்பிரமணியர் சன்னதி மற்றும் சரஸ்வதி மண்டபம் உள்ளிட்ட மிக முக்கியமான கட்டுமானப்பணிகள் நிறைவேற்றப்பட்டன.

வழிபாடு தொகு

நித்ய பூசை, நிறமாலை, விளக்கு மாலை, கூவள மாலை, நெய்விளக்கு, பின்விளக்கு, எண்ணெய் விளக்கு, சுயம்வர புஷ்பாஞ்சலி, மிருத்யஞ்ச புஷ்பாஞ்சலி, மலர் நைவேத்யம், கணபதி ஹோமம், ஜலதாரை, சங்காபிஷேகம், வாகன பூசை, இளநீர் அபிஷேகம் உள்ளிட்ட பல வகையான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

புதுப்பிக்கும் பணி தொகு

பழமை மாறாமல் இருப்பதற்காக கோயிலை புதுப்பிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பல திருப்பணிகள் தாமதமின்றி நிறைவேறியுள்ளன.

உசாத்துணை தொகு