சேலம் கோட்டை மாரியம்மன் கோயில்

கோட்டை மாரியம்மன் கோவில் சேலம் மாவட்டம், சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில்
பெயர்
பெயர்:சேலம் கோட்டை மாரியம்மன் கோயில்
அமைவிடம்
அமைவு:சேலம் , தமிழ்நாடு
கோயில் தகவல்கள்
மூலவர்:கோட்டை ஸ்ரீ மாரியம்மன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோயில்

பெரிய மாரியம்மன் தொகு

சேலத்தில் அமைந்துள்ள எட்டு மாரியம்மன் கோவில்களில் கோட்டை மாரியம்மன் கோவிலே பெரியது. இதனாலேயே இது "கோட்டை பெரிய மாரியம்மன்" என்று அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் “எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி” என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

கோவில் வரலாறு தொகு

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள். இந்த அம்மன் கோயிலை கோட்டை வீரர்கள் எல்லாம் ஒரு காவல் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தார்கள். கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரி காவல் தெய்வமாக இருந்திருக்கிறாள். ஆனால் இன்று அந்த கோட்டை இல்லை. கோட்டை இருந்ததற்கு அடையாளமாக கோட்டைமேடு என்ற பகுதி மட்டுமே இன்று உள்ளது. இக்கோட்டையில் அமைந்த இக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கோட்டைக்கு காவல் தெய்வமாக இருந்ததால் “கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி” என்ற சின்னப்பகவுண்டரின் பாடல்கள் மூலம் தெரியவருகிறது.

இந்த கோட்டைக்குள் இருந்த அம்மனை திருமணிமுத்தாற்றின் அருகில் சேலம் கணக்கர் தெருவில் இருக்கும் தி. கனகசபை முதலியார், சிவசங்கர முதலியார் ஆகியோர் இப்போதிருக்கும் இடத்திற்கு இடம் மாற்றம் செய்து கோயில் அமைத்து கும்பாபிசேகம் செய்தார்கள். அப்போது திருமணிமுத்தாற்றிலிருந்து அம்மன் அபிசேகத்திற்கு தண்ணீர் எடுத்து வந்து அபிசேகம் செய்தனர். கோட்டை மாரியம்மனை தரிசிக்க சுற்றிலும் இருக்கிற ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்குவதற்கு 1876 தாது வருடம் சித்திரை மாதம் தர்ம சத்திரம் ஒன்று கட்டப்பட்டது. இந்த தர்ம சத்திரம் தான் கோயிலின் அலுவலகமாக செயல்பட்டு வந்தது. இக்கட்டிடம் பழுதடைந்து இடியும் நிலையில் அதை இடித்துவிட்டு அறநிலையத்துறை ஆணையர் அவர்களின் அனுமதியின்பேரில் அலுவலகக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

1982-1989 ஆம் ஆண்டிலும் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு 81 அடி உயர இராசகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, 1993 சூலை 1 அன்று திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.

மாரியம்மனின் திருக்கோலம் தொகு

மாரியம்மனின் சிரசில் சுவாலை கிரீடம் அக்கினி சுவாலையுடன் ஒளி வீசிக்கொண்டு இருக்கிறது. அக்கிரீடத்தில் நாகம் படம் எடுத்துள்ளது போன்ற அமைப்பு உள்ளது. நான்கு கரங்களுடன் அன்னை விளங்குகிறாள். வலது மேற்கரத்தில் நாக உடுக்கையும் (டமருகம்), இடது மேற்கரத்தில் பாசமும் மற்றும் வலது கீழ்க்கரத்தில் திரிசூலமும், இடது கீழ்க்கரத்தில் கபாலமும் ஏந்தி வீற்றிருக்கிறாள். அன்னை வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு, இடது காலை மேல் யோகாசனமாக மடித்து வைத்துக்கொண்டு சிவசக்தியாக ஈசான திசை நோக்கி அன்பும், கருணையும் ததும்பும் வடிவமாய், ஆனந்தம் பொங்கும் புன்முறுவல் முகத்தினை உடையவளாய் வீற்றிருந்து, தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அருளாசி செய்து வருகின்றாள்.

ஆடித்திருவிழா தொகு

ஆடிப்பெருந்திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சேலம் மாநகரத்தில் நடைபெறும் மிகப்பெரிய விழாவாகும். ஆடி மாதத்தில் அம்மனுக்கு பூச்சாட்டலுடன் விழா தொடங்கி 22 நாட்கள் நடைபெறும். இந்த பூச்சாட்டுதலின் போது சேலத்தில் உள்ள ஏனைய ஏழு மாரியம்மன் திருக்கோயில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச்சென்று அந்தந்த மாரியம்மன் திருக்கோயில்களில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பண்டிகையின் போது கோட்டை பெருமாள் என்று அழைக்கப்படும் அழகிரிநாதசுவாமி திருக்கோயிலில் இருந்து தங்கையான கோட்டை மாரியம்மனுக்கு சீர்வரிசைகள் இன்றளவும் கொண்டுவரப்படுகிறது. இது தொன்றுதொட்டு நடந்து வரும் அற்புத நிகழ்ச்சியாகும். இத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னைக்கு நைவேத்தியம் படைக்கப்படுவதில்லை மாறாக ஊட்டிவிடப்படுகிறது. இந்த மிகப்பெரிய திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவத்திற்கு 'உள்ளூர் விடுமுறை' அறிவிக்கப்படுகிறது.