சைவக் கிரியை
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
சைவக் கிரியைகள் என்பது சிவநெறியில் ஒழுகுவோர் மந்திரம், தந்திரம், பாவனைகளுடன் செய்யும் செயல்கள் அல்லது கருமங்களைக் குறிக்கும். கிரியை என்ற சைவ சமய கலைச்சொல் பல்வேறு சந்தர்ப்பங்களில் அனுஷ்டிக்கப்படும் நியதிச்செயல்கள் என்னும் கருத்தில் சமயப் பிரமாண நூல்களில் வழங்கி வருகின்றது. கருமம், சடங்கு, பூசை என்பனவும் அதே பொருளைத்தரும் சொற்கள் ஆகும். சைவசமயிகளுக்குரிய இத்தகைய கிரியைகள் பற்றி, சிவாகமங்களும் அவற்றைச் சார்ந்த உபாகமங்களும் இவற்றின் அடிப்படையில் எழுந்த பத்ததிகளும் விரித்துக் கூறுகின்றன.
கிரியை செய்வதால் உண்டாகும் பயன்
தொகுஇச்சைவக் கிரியைகளைச் செய்வதால் இம்மையில் அறம், பொருள், இன்ப வாழ்வுகளைப் பெற்று வாழ்தலும், மறுமையில் வீடு பேற்றினைப் பெறுதலுமாம். கிரியைகளை முறைப்படி செய்வதனால் மனத்தூய்மை உண்டாகும்; மனத்தூய்மையினால் பரதருமங்கைகூடும். பரதருமத்தினால் ஐம்பொறி அடக்கமாகிய சாந்தி உண்டாகும் சாந்தியினால் யோகநெறி கைகூடும் யோகத்தினால் தத்துவ ஞானங் கைகூடும் தத்துவ ஞானத்தினால் பரமுத்தி சித்திக்கும். ஆகவே கிரியைகள் ஞானத்திற்கு மூலகாரணமாய் வீடு பேறாகிய பரமுத்திப்பேற்றை தரும்.
கிரியைகளின் வகைகள்
தொகுசைவக் கிரியை ஆன்மார்த்தக் கிரியை, பரார்த்தக் கிரியை என இரு வகைப்படும். ஆன்மார்த்தம் என்பது தன் நன்மை கருதிச் செய்யப்படும் சந்தியாவந்தனம், சிவபூசை போன்ற கிரியைகளைக் குறிக்கும். பரார்த்தம் என்பது பிறர் நன்மை கருத்திச் செய்யப்படும் ஆலய வழிபாடுகளைக் குறிக்கும்.
ஆன்மார்த்த கிரியையானது பூர்வக் கிரியை, அபரக் கிரியை என இரு வகைப்படும். பூர்வக் கிரியை ஓர் உயிர் தாயின் கர்பத்தில் தங்கும் காலம் முதல் பூமியிற் பிறந்து வளர்ந்து வாழ்ந்திருக்கும் காலம் வரையும் செய்யப்படுங் கிரியைகளைக் குறிக்கும். அபரக் கிரியை மரண சமயம் முதல் சபிண்டீகரணம் வரையும், அதன் மேல் வருட சிராத்தம், மகாளயம், அமாவாசை தர்ப்பணம் வரையில் விரிந்து செல்கின்றது.
பரார்த்தக் கிரியையானது நித்தியக் கிரியை, நைமித்தியக் கிரியை என இரு வகைப்படும். நித்தியம் என்பது ஆலயத்தில் தினமும் நடைபெறும் நித்திய பூசையைக் குறிக்கும். இது ஆலயங்களின் அமைப்புக்கும் மரபுக்கும் ஏற்ப ஒரு காலப் பூசை தொடக்கம் ஆறு காலப் பூசை, பன்னிரு காலப் பூசை (திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெறுவது) என விரிந்து செல்லும். நைமித்தியம் என்பது நித்திய பூசை வழிபாடுகளில் ஏற்படுகின்ற குறைகளை நிவர்த்தி செய்வதற்காக நடைபெறும் சிறப்பு பூசைகள், திருவிழாக்களைக் குறிக்கும்.
உசாத்துணை நூல்கள்
தொகு- சைவக் கிரியைகள், சுப்பிரமணிய தேசிகர், சி. 1964.
- சைவத் திருக்கோவிற் கிரியை நெறி, கைலாசநாதக்குருக்கள், கா., 1963
- சைவக் கிரியை விளக்கம், சிவபாதசுந்தரம் சு.