சைவமரபு பாதுகாப்பு மாநாடு 2010
சைவமரபு பாதுகாப்பு மாநாடு 2010 என்பது தஞ்சையில் நடைபெற்ற ஒரு சைவ சமய மாநாடு ஆகும். தமிழ்ப் பற்று என்ற பெயரில் வேதாகம நிந்தனை செய்வதைத் தடுக்கவும், தொன்மையான சைவ மரபினைப் பாதுகாக்கவும், சைவ சமய நூல்களைத் தகுந்த முறையில் போற்றவும், சைவப் பெருமக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் இந்த மாநாட்டைச் சைவநெறி வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்தது.[1]இம்மாநாட்டிற்கு சுவாமி தயானந்த சரசுவதி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார்.
தீர்மானங்கள்
தொகுஇந்த மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.[1]
- தமிழகத்தில் பூசையே நடைபெறாத சிவாலயங்களைச் சைவப் பெருமக்கள் தத்தெடுத்து அன்றாடப் பூசைகள் சிவாகம முறைப்படி நிகழ முழுமுயற்சி எடுக்க சைவ மக்களை ஒன்று திரட்டல்.
- சைவ சமய சான்றோர்கள் தந்துள்ள சைவ மரபுகளை மீறாமல் கடைப்பிடித்துச் சைவ ஒழுக்கங்களைப் பேணிப் பாதுகாக்க, சைவ உலகினை இம்மாநாடு வேண்டுகிறது.
- சைவ மக்களுக்குத் தமிழும், சமஸ்கிருதமும் இரு கண்களாகக் கொள்ள வேண்டும் என்ற அருளாளர்கள் அருளாணையைத் தமது உயிராகக் கொள்ள வேண்டும் என்று சைவ உலகினை இம்மாநாடு வேண்டுகிறது.
- வறுமையால் வாடுகின்ற திருமுறை ஓதுவா மூர்த்திகளுக்கு மாதந்தோறும் ஊதியம் கொடுத்து ஆதரித்தல்.
- சிவாச்சாரியார்களும், திருமுறை ஓதுவார்களும் சைவ சமயத்தின் இருகண்கள். இவ்விரு பெருமக்களும் நித்திய பூசையிலும் மகா கும்பாபிஷேகங்களிலும் ஒருவரையொருவர் அனுசரித்து உதவுமாறு இம்மாநாடு வேண்டுகிறது.
- இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகைக்குட்பட்ட சிவாலயங்கள் பலவற்றில் குடமுழுக்கு செய்து வரும் தமிழக இந்து அறநிலையத் துறையை பாராட்டுதல்.
- இம்மாநாட்டில் பங்கேற்ற சைவ அன்பர்கள் அனைவரும் இரு மாதத்திற்கு ஒருமுறை கூடி, சைவ மரபினைப் பாதுகாக்கக் கருத்துப் பரிமாற்றம் செய்து மகிழ வேண்டும் என அன்பர்களை இம்மாநாடு வேண்டுகிறது.