சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், குளமுற்றம் எனும் ஊரில் இறந்ததால், "குளமுற்றத்துத் துஞ்சிய" என்னும் அடைமொழியுடன் எனக்குறிப்பிடப்படுகிறார். இவர் சங்ககாலச் சோழமன்னர்களில் ஒருவன்.
இவனைப் பாடிய புலவர்கள்:
- ஆடுதுறை மாசாத்தனார்
- ஆலத்தூர் கிழார்
- ஆவூர் மூலங்கிழார்
- இடைக்காடனார்
- ஐயூர் முடவனார்
- கோவூர் கிழார்
- தாயங்கண்ணனார்
- நல்லிறையனார்
- மாறோக்கத்து நப்பசலையார்
- வெள்ளைக்குடி நாகனார்
ஆகியோர்.
இவரைப் பற்றிய செய்திகள்
தொகுபுறநானூற்றில் இவரைப் போற்றிப் பாடிய பாடல்கள் 18 உள்ளன. மேலும் இவர் புலவராக விளங்கிப் பாடிய இவரது பாடல் ஒன்றும் புறநானூற்றில் உள்ளது.
- தோற்றம்
- பசும்பொன் ஆரமும் கழுத்துமாக இவர் விளங்கியிருக்கிறார். ’பசும்பூண் வளவன்’ [1] ‘பொலம்பூண் வளவன்’ [2] என்றெல்லாம் இவர் போற்றப்படுவது இதனால்தான்.
- முன்னோர்
- புறாவுக்காகத் தன்னைத் துலாக்கோலில் நிறுத்துத் தந்தவன். தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் ஆகியோர் இவனது முன்னோர்.[3]
வள்ளல்
தொகு- கொடையாளி
- இவரது அரண்மனையில் அடுதீ அல்லது சுடுதீ இல்லையாம். உணவு சமைப்பதும் வழங்குவதும் நிகழ்ந்துகொண்டே இருக்குமாம்.[4]
- பாணர்க்கு நிலையான செல்வம் வழங்கினார். வடகிழக்குப் பருவ மழையால் சோழநாட்டில் பெய்யும் மழைத்துளிகளைக் காட்டிலும் பல நாள் இந்த வளவன் வாழவேண்டும்.[5]
- பாணர்களுக்குப் பொன்னால் செய்த தாமரைகளைப் பரிசாக வழங்கினார்.[6]
- இவர் சுடச்சுட அளித்த விருந்து உண்ட வியர்வை அல்லது புலவர்க்கு வேறு வியர்வை இல்லையாம்.[7]
- புலவரின் சுற்றத்தார் அனைவருக்கும் நல்லுணவு, நயவுடை தந்து பேணினாராம்.[8]
- வைகறைப் பொழுதில் வழங்கியிருக்கிறார்.[2]
- கொடையாளியைப் போற்றிய புலவன்
- சிறுகுடியில் வாழ்ந்த வள்ளல் பண்ணனை தனது வாழ்நாளையும் சேர்த்து எடுத்துக்கொண்டு வாழவேண்டும் என வாழ்த்துகிறார்.[9]
ஆட்சி
தொகுவெற்றி
தொகு- இமயத்தில் வில்லைப் பொறித்த வானவனின் வஞ்சி நகர் வாடும்படித் தாக்கினார்.[10]
போரும், புலவர் அறிவுரையும்
தொகு- உடையோர் ஈவதும், இல்லோர் இரத்தலும் கடவது அன்று என்றாலும் வேறு வழியில்லை என்று இவரிடம் புலவர் கூறுகிறார்.[11]
- காலம் பார்க்காமல் போர் தொடுப்பவர்.[12]
- இவர் கருவூரை முற்றுகையிட்டுச் சேரனின் காவல் மரங்களை வெட்டினார். அதன் ஓசையைக் கேட்டுக்கொண்டு, சோழனுக்குப் பயந்து சேரன் கோட்டைக் கதவை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தான். இத்தகைய பயந்தாங்கொள்ளியோடு போரிடுவது இழுக்கு என்று வளவனுக்கு எடுத்துரைத்தார்.[13]
- ’செம்பியன் மருகன்’ என இவர் போற்றப்படுகிறார். வேந்தன் (சேரன்) உள்ளே இருக்கும்போதே கோட்டையைச் சிதைத்தவர்.[14]
- பகைவர் (சேரன்) முடியால் தனக்கு வீரக்கழல் செய்துகொண்ட இவர் இனிய சொல்லும், எளிய காட்சியும் தருபவராக விளங்க வேண்டும்.[15]
- புலவரெல்லாம் இவரை நோக்கும்போது இவர் மாற்றார் மண்ணையே நோக்குவாராம்.[16]
- மலையமான் மக்களை இவர் யானைக் காலடியில் இடும்போது, குழந்தைகள் அழுகை மறந்து வேடிக்கை பார்ப்பதைச் சொல்லிக் காட்டி, வளவனின் கொடுமையைத் தடுத்து நிறுத்தினார்.[17]
உழவரின் வரிக்கடனைத் தள்ளுபடி செய்தவர்
தொகு- அரசனின் வெண்கொற்றக் குடை அவருக்கு நிழல் தருவதற்காக அன்று, குடிக்களின் துன்பம் போக்கி அவர்களுக்கு நிழல் தருவதற்காக எனவும், அரசன் வெறும் வெற்றிகள் அவனது படையால் விளைந்தவை அன்று, உழவர் உழும் படைச்சாலில் விளைந்தவை என்றும் அறிவுறுத்திப் பாடி, வறுமை காரணமாக அரசனுக்குத் தான் செலுத்த முடியாமல் நிலுவையில் இருந்த நிலவரிச் சுமையிலிருந்து விடுதலை பெற்றார்.[18]
ஆட்சிப் பரப்பு
தொகு- இவர் காவிரிப் படுகையை ஆண்டவர் எனக் குறிப்பிடப்படுவதாலும், கொங்கு நாட்டை வென்றான் எனத் தெரிவதாலும் இன்றைய தமிழ்நாட்டின் காவிரிப்படுகை நிலப்பரப்பு முழுமையும் இவரது ஆட்சிக்கு உட்பட்டிருந்ததை அறியமுடிகிறது.
இறுதிக்காலம்
தொகு- இவரை யாராலும் கொல்ல முடியாது. இவர் கொடையாளி ஆகையால் எமன் (குளமுற்றம் என்னும் ஊரிலிருந்தபோது) இவரிடம் இரந்து இவரது உயிரைப் பெற்றான் போலும் என்கிறார் புலவர்.[19]
- பகைவர் பலரது உயிர்களைக் கொன்று எமன் பசிக்கு உணவூட்டிக்கொண்டிருக்கும் இவரை எமன் உண்டு உனவில்லாமல் ஏமாந்துவிட்டதாம்.[1]
- இவர் இறந்தபோது இவரை அண்டி வாழ்ந்த பலர் இவரோடு சேர்ந்து உயிர் துறந்திருக்கிறார்கள்.[20]
அடிக்குறிப்பு
தொகு- ↑ 1.0 1.1 ஆடுதுறை மாசாத்தனார் - புறம் 227
- ↑ 2.0 2.1 எருக்காட்டூர் தாயங்கண்ணனார் - புறம் 397
- ↑ மாறோக்கத்து நப்பசலையார் புறம் 39
- ↑ கோவூர் கிழார் - புறம் 70
- ↑ ஆலத்தூர் கிழார் புறம் 34
- ↑ ஆலத்தூர் கிழார் - புறம் 69
- ↑ கோவூர் கிழார் - புறம் 386
- ↑ நல்லிறையனார் - புறம் 393
- ↑ புறம் 173
- ↑ மாறோக்கத்து நப்பசலையார் பாடல்
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய
வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங் கோட்டு
இமயம் சூட்டிய ஏம விற்பொறி,
மாண் வினை நெடுந் தேர், வானவன் தொலைய,
வாடா வஞ்சி வாட்டும் நின்
பீடு கெழு நோன் தாள் பாடுங்காலே - பறுறநானூறு 39 - ↑ ஆவூர் மூலங்கிழார் புறம் 38
- ↑ கோவூர் கிழார் - புறம் 41
- ↑ ஆலத்தூர் கிழார் புறம் 36
- ↑ மாறோக்கத்து நப்பசலையார் புறம் 37
- ↑ ஆவூர் மூலங்கிழார் புறம் 40
- ↑ இடைக்காடனார் - புறம் 42
- ↑ கோவூர் கிழார் புறம் 46
- ↑ வெள்ளைக்குடி நாகனார் புறம் 35
- ↑ மாறோக்கத்து நப்பணலையார் - புறம் 226
- ↑ ஐயூர் முடவனார் - புறம் 228