ஜனனி சுரக்ச யோஜனா
ஜனனி சுரக்ச யோஜனா (ஜனனி சுரக்ஷ யோஜனா, Janani Suraksha Yojana -JSY) என்பது இந்திய ஒன்றிய அரசால் கர்ப்பிணித் தாய்மார்கள் இறப்பு விகிதத்தையும் இளங்குழந்தை இறப்பு விகிதத்தையும் (maternal and infant mortality rates) குறைக்கும் இலக்குடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுள் ஒன்றாகும். அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிப்பதன் மூலம் இந்த இலக்குகளை இது அடைய முயலுகிறது. ஏனென்றால் அரசு மருத்துவமனைகளில் நல்ல மகப்பேறு மருத்துவர்களும் நல்ல குழந்தை நல மருத்துவர்களும் 24 மணிநேரமும் இருப்பர். இவ்வாறாக கர்ப்பிணித் தாய்மார்கள் இறப்பு விகிதத்தையும் இளங்குழந்தை இறப்பு விகிதத்தையும் குறைக்கலாம்.
இத்திட்டம் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் ( National Rural Health Mission) (NRHM) கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
பயன்கள்
தொகுஅரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்களுக்கு 700 ரூபாயும், பயிற்சி பெற்ற செவிலியர் உதவியுடன் வீடுகளில் பிரசவித்தால் 500 ரூபாய் உதவித்தொகையும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. இதில் ஆதிதிராவிட, பழங்குடியின மக்களுக்கு வயது வரம்பு, வருமான வரம்பு கிடையாது.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் விதம்
தொகுதமிழகத்தில் உள்ள எந்த அரசு மருத்துவமனையிலும் பிரசவத்திற்காக சேர்க்கப்படும் போது, செவிலியர்களால் ஒப்புகை செய்யப்பட்ட நகலை கொடுத்தால், அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கொடுத்து உதவித்தொகையைக் காசோலையாகப் (மட்டுமே) பெற்றுக்கொள்ளலாம். இதற்காக போதுமான அளவு நிதி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், நகராட்சி, அரசு மருத்துவமனைகளுக்கும் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் நலத்திட்டமான முத்துலட்சுமி ரெட்டி கர்ப்பிணி உதவித்தொகை திட்டத்தில் பயன் பெற்றவராக இருந்தாலும் "ஜனனி சுரக்ஷ யோஜனா' திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவம்
தொகுஇத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்களை ஆரம்பச் சுகாதார நிலையங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலகங்கள் போன்றவற்றில் இதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்று முழுமையாக நிரப்பி கீழ்காணும் சான்றுகளை இணைக்க வேண்டும்.
- கர்ப்பம் தரித்தவுடன் ஆரம்பச் சுகாதார நிலையங்கள்/அரசு/மாநகராட்சி/நகராட்சி நலவாழ்வு மையங்களில் பதிவு செய்திருக்க வேண்டும். அதற்கான சான்று.
- குடும்ப அட்டை நகல்
- பெண்ணிற்கு திருமணம் 18 வயதுக்குப் பின்பு நடந்திருக்க வேண்டும்.
- குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ12,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கான வருமானச் சான்றிதழ் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பெற்று இணைக்க வேண்டும்.