ஜலதரங்கம் என்பது ஒரு இந்திய தாள இசைக்கருவி ஆகும். நீரால் நிரப்பப்பட்ட பீங்கான் கிண்ணங்கள் இசைக்கலைஞரை சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இக்கிண்ணங்களின் விளிம்புகளை தனது கைகளிலுள்ள குச்சிகளால் தட்டி அக்கலைஞர் ஒலி எழுப்புவார்.[1]நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை என இந்த இசைக்கருவி தமிழில் அழைக்கப்படுகிறது.

ஜலதரங்க பீங்கான் கிண்ணங்கள்

ஜலதரங்கத்திற்கு "உதக வாத்தியம்' என்னும் பெயரும் உண்டு. அறுபத்து நான்கு கலைகளில் ஜலதரங்கம் வாசிப்பதும் ஒன்றாகும். வயலின், மிருதங்கம் ஆகிய இசைக் கருவிகளைத் துணைக்கருவிகளாகக் கொண்டு ஜலதரங்க இசைக் கச்சேரிகள் நடைபெறுகின்றன. . பண்டைக்காலத்தில் ஜலதரங்கத்திற்கு வெண்கலக் கிண்ணங்களைப் பயன்படுத்தினர். இன்று பீங்கான் கோப்பைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதை வாசிப்பவர், வேவ்வேறு சுரங்களை உண்டாக்கும் பீங்கான் கோப்பைகளைத் தம் முன்னால் அரைவட்டமாக வைத்துக் கொள்வார். இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாகக் கோப்பைகளின் சுருதி உயர்ந்துகொண்டே போகும். இவ்வாறு 16 கோப்பைகள் இருக்கும். குறிப்பிட்ட இராகத்திற்கு வேண்டியவாறு கோப்பைகளின் சுருதியைக் கூட்டுவார்கள். அதில் வராத சுரங்களுக்கும் கோப்பைகளைச் சுருதி சேர்த்து, அவற்றை அரைவட்டத்திற்கு வெளியே அந்தந்தக் கிண்ணத்திற்கு அருகில் வைப்பார்கள். வாசிக்கும் இராகத்திற்கு ஏற்ப, வேண்டிய கோப்பைகளை வெளிப்புறத்திலிருந்து உட்புறம் அரைவட்டத்தில் வைத்து, வேண்டாத கோப்பைகளை வெளியே நகர்த்தி விடுவார்கள். இவ்வாறு செய்வதால் விரைவில் வெவ்வேறு இராகங்களில் பாடல்களை வாசிக்க முடிகின்றது.

கோப்பையிலுள்ள நீர் பல வழிகளில் பயன்படுகிறது. சீராக சுருதி சேர்த்துக் கொள்வதற்கும், இனிய நாதத்தை உண்டாக்குவதற்கும் இது உதவுகிறது. நீர்மட்டத்தின் மேல் இலேசாகத் தட்டினால் இசைக்கு வேண்டிய கமகங்கள் உண்டாகும். மிக வேகமாகக் கோப்பைகளைத் தட்டி வாசிக்கும்போது, அவை புரண்டுவிடாமல் இருக்கவும் அவற்றிலுள்ள நீர் உதவுகிறது.

ஜலதரங்கக் கலைஞர்கள் தொகு

குறிப்புகள் தொகு

  1. நீரலைகளின் பேச்சு (2018). தி இந்து பொங்கல் மலர் 2018. சென்னை: இந்து தமிழ். பக். 67. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலதரங்கம்&oldid=3596509" இலிருந்து மீள்விக்கப்பட்டது