ஜாக் மைனர் (Jack Miner ஏப்ரல் 10, 1865 – நவம்பர் 3, 1944) என்பவர் வட அமெரிக்காவைச் சேர்ந்த பறவையியலாளர், சூழலியலாளர். இவர் வட அமெரிக்க பறவைகள் பாதுகாப்பின் தந்தை என்று போற்றப்படுகிறார். பள்ளிச் சென்று படிக்காத இவரது பெயர் பல கல்வி நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டது.

ஜாக் மைனர்
பிறப்புஜான் தாமஸ் மைனர்
(1865-04-10)ஏப்ரல் 10, 1865
டோவர் செண்டர், ஓஹியோ
இறப்புநவம்பர் 3, 1944(1944-11-03) (அகவை 79)
கோஸ்பைல்ட் சவுத் டவுன்சிப் (தற்போதைய கிங்ஸ்வில், ஒண்டரியோ பகுதி)
தேசியம்கனடியர்
மற்ற பெயர்கள்வைல்டு கூஸ் ஜேக்
பணிவிலங்குகளை கண்ணி வைத்துப் பிடிப்பவர், வேட்டைக்காரர், விவசாயி
அறியப்படுவதுபறவைகள் பாதுகாப்பு

வாழ்க்கையும், பணிகளும்

தொகு

இவர் ஐக்கிய அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் 1865இல் பிறந்தவர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ஜான் தாமஸ் மைனர். குடும்பம் 1878-ல் கனடாவில் குடியேறியது. முறையான கல்வி கற்காத இவர், ஆரம்பத்தில் வேட்டைத் தொழில் செய்தார். பிறகு, அதைக் கைவிட்டு, பறவைகள் பாதுகாப்பில் ஆர்வம் காட்டினார்.

குளிர்காலங்களில் சிரமப்படும் காடைகள், வான்கோழிகளைப் பாதுகாத்து வளர்த்தார். அருகே உள்ள குளங்களுக்குப் பல்வேறு பறவைகள் வருவதைப் பார்த்து, தனது நிலத்தில் ஒரு குளத்தை உருவாக்கினார்.

ஆரம்பத்தில் ஒருசில காட்டு வாத்துகள் வந்தன. 1911 முதல் ஏராளமான வாத்துகள் வரத் தொடங்கின. அதற்கேற்ப குளத்தை பெரிதாக்கினார். 1913-ல் இவரது மொத்த இடமும் பறவைகள் சரணாலயமாக மாறிவிட்டது. ஏறக்குறைய 50 ஆயிரம் பறவைகள் அங்கு இருந்தன. இதைக் கண்ட அரசு இவரது முனைப்பை மேலும் விரிவாக்க நிதியுதவி அளித்தது. அங்கு ஏராளமான மரங்கள், புதர்களை வளர்த்தார். நீர்நிலைகளையும் அமைத்தார்.

பறவை கண்காணிப்பு பட்டை

தொகு

வலசை போகும் பறவைகளின் பாதையைக் கண்காணிக்க, அவற்றுக்கு பட்டயம் கட்டும் (Bird Banding) முறையை 1909-ல் மேம்படுத்தினார்.[1] உலகில் இத்தகைய முறையை முதன்முதலாக மேம்படுத்தியவர்களில் ஜாக் குறிப்பிடத்தக்கவர்.

நூற்றுக்கணக்கான பறவைகளுக்குப் பட்டயம் கட்டப்பட்டது. பறவைகள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு இது பயன்பட்டது.

நீர்நிலைகள் குறைவது, சுற்றுச்சூழல் சீர்கேடு வேதனையான விஷயம் என்று கூறியவர், அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை வலியுறுத்தினார். பறவைப் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க இளைஞர்களை ஊக்கப்படுத்தினார். 1910-ல் தொடங்கிய இவரது சேவை இறுதிவரை தொடர்ந்தது.

வலசை போகும் பறவைகள் சில நேரங்களில் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுவது இதன்மூலம் தெரியவந்தது. சில குறிப்பிட்ட பறவைகளைப் பிடிப்பது, விற்பது மற்றும் கொல்வதற்கு எதிராக அமெரிக்காவில் தடைச் சட்டம் கொண்டுவரவும் இது காரணமாக அமைந்தது.

‘ஜாக் மைனர் மைக்ரேட்டரி பேர்ட் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பை இவரது நண்பர்கள் 1931-ல் உருவாக்கினர். பல இடங்களுக்கும் சென்று வனவிலங் குப் பாதுகாப்பு, சரணாலயங்கள், வனவிலங்குப் புகலிடங்கள் அமைப்பதன் அவசியம், தனது ஆய்வுகள் குறித்து உரையாற்றினார்.

எழுதிய நூல்

தொகு

தான் கண்டறிந்த பட்டய முறைகள் மற்றும் நீர்ப்பறவைகள் பாதுகாப்பு ஆய்வுகள் அடங்கிய ‘ஜாக் மைனர் அண்ட் தி பேர்ட்ஸ்’ என்ற புத்தகத்தை 1923-ல் வெளியிட்டார். முதல் பதிப்பின் 4 ஆயிரம் பிரதிகளும் 9 மாதங்களில் விற்பனையாகின. அதன் பிறகு, உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். அந்த புத்தகத்தின் பதிப்புகள் தற்போதும் வருகின்றன.[2]

மறைவு

தொகு

பறவைகள் பாதுகாப்புக்காகவே வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட ஜாக் மைனர் தனது 79 வயதில் 1944ஆம் ஆண்டு மறைந்தார்.

மேற்கோள்

தொகு
  1. Hanson, Harold C.; Curry Campbell (1 January 1957). "The Kill of Wild Geese by the Natives of the Hudson-James Bay Region". Arctic 4: 211–229. 
  2. Loo, Tina. States of Nature: Conserving Canada’s Wildlife in the Twentieth Century. (Canada: UBC Press, 2006), p.66
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_மைனர்&oldid=2303218" இலிருந்து மீள்விக்கப்பட்டது