ஜான் லாசரஸ்

ஜான் லாசரஸ் (1845–1925) 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலேயக் கிறிஸ்தவ மதபோதகரும் திருக்குறள் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். திருக்குறளின் முதல் 63 அதிகாரங்களை ஏற்கனவே மொழிபெயர்த்திருந்த வில்லியம் ஹென்றி ட்ரூவின் பணியைத் திருத்தி, மீதமுள்ள அதிகாரங்களை ட்ரூவின் பாணியில் மொழிபெயர்த்தவர் லாசரஸ்.

ஜான் லாசரஸ்
ஜான் லாசரஸ்
பிறப்பு1845
இறப்பு1925
பணிகிறிஸ்தவ மதபோதகர்
அறியப்படுவதுதிருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

பணிகள் தொகு

ஜான் லாசரஸ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை முடித்தார். அவரது முதல் படைப்பாக 1878-இல் தமிழ் இலக்கண நூலான நன்னூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். எனினும் இவர் தனது திருக்குறள் மொழிபெயர்ப்புக்காக இன்று நன்கு அறியப்படுபவராகத் திகழ்கிறார். 1840-இல் வில்லியம் ஹென்றி ட்ரூ திருக்குறளின் முதல் 63 அதிகாரங்களை மட்டும் உரைநடையில் மொழிபெயர்த்ததையறிந்த லாசரஸ் அப்பணியின் விடுபட்ட பகுதிகளை முடிக்க எண்ணினார். ட்ரூவின் மொழிபெயர்ப்பில் திருத்தங்களைச் செயது விடுபட்ட 64 முதல் 133 வரையிலான அதிகாரங்களை ட்ரூவின் நடையில் மொழிபெயர்த்து 1885-இல் வெளியிட்டார்.[1] அதுவே திருக்குறளின் முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பாகத் திகழ்கிறது. இதன் பின்னரே 1886-இல் ஜி. யு. போப் தனது படைப்பான முதில் செய்யுள் வடிவ ஆங்கில குறள் மொழிபெயர்ப்பை வெளியிட்டார். லாசரஸின் மற்றுமொரு மிகப்பெரிய பங்களிப்பாகக் கருதப்படுவது அவரது தமிழ் பழமொழிகளின் அகராதி (Dictionary of Tamil Proverbs) என்ற நூலேயாகும். அறிமுகம், குறிப்புகள், மூலத்துடன் கூடிய மொழிபெயர்ப்பு ஆகியவற்றோடு 1894-இல் இந்நூல் வெளியிடப்பட்டது. இந்நூலில் 10,000 பழமொழிகளைப் லாசரஸ் பட்டியலிட்டுள்ளார். இதுவே இன்றுவரை தொகுக்கப்பட்ட பழமொழி அகராதிகளில் முழுமையானதாகத் திகழ்கிறது.

ஒரு கிறிஸ்தவ மதபோதகராக லாசரஸ், ஜி. யு. போப்பைப் போலவே ஆரம்பத்தில் வள்ளுவரின் கருத்துக்களில் ஓரளவு கிறிஸ்தவ தாக்கம் இருப்பதாகக் கூறிவந்தார். பின்னாளில் அவர் திருக்குறள் தனித்தன்மை வாய்ந்தது என்றும் அதில் கிறிஸ்தவ சிந்தனைகளின் தாக்கம் சிறிதளவுமில்லை என்றும் கூறி ஜி. யு. போப்பின் கூற்றுக்களையும் மறுத்துரைத்தார். குறளின் முதலதிகாரத்தில் காணப்படும் கடவுளைப் பற்றிய சிந்தனைகள் கிறிஸ்தவத்திலிருந்து வேறுபட்டவை என்றும் குறளில் கடவுளின் குணங்களாகக் கூறப்பட்டவைகளில் ஒன்று கூட விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுளோடு சற்றும் பொருந்தாதது என்றும் கூறினார். அறங்களிலும் குறளும் விவிலியமும் வேறுபடுவதை லாசரஸ் சுட்டுகின்றார். விவிலியம் கூறும் கொல்லாமை வெறும் மனிதக் கொலைகளை மட்டுமே தடுக்க முயலுகையில் குறள் கூறும் கொல்லாமையோ மனிதன் உட்பட அனைத்து விலங்குகளையும் உள்ளடக்கியது என்று லாசரஸ் நிறுவுகிறார்.[2]:42

மேற்கோள்கள் தொகு

  1. Ramasamy, V. (2001). On Translating Tirukkural (First ). Chennai: International Institute of Tamil Studies. 
  2. A. A. Manavalan (2009). Essays and Tributes on Tirukkural (1886–1986 AD) (1 ). Chennai: International Institute of Tamil Studies. 

மேலும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_லாசரஸ்&oldid=3299809" இலிருந்து மீள்விக்கப்பட்டது