ஜான் ஹென்றி நியூபோல்ட்

அரசியல்வாதி

சர் ஜான் ஹென்றி நியூபோல்ட் (John Henry Newbolt, 1769 - 22 சனவரி 1823) என்பவர் ஒரு ஆங்கில நீதிபதி ஆவார். இவர் மதராசின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். மேலும் மதராஸ் இலக்கியச் சங்கத்தின் நிறுவனர் ஆவார். இவர் 1800-02 வரை ஐக்கிய இராச்சியத்தின் பிராம்பர் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார்.

வாழ்க்கை

தொகு

ரெவரெண்ட் ஜான் மாங்க் நியூபோல்ட், சூசன்னா இணையருக்கு மூத்த மகனாக வின்செஸ்டரில் ஜான் பிறந்தார். இவர் வின்செஸ்டர் மற்றும் ஆக்ஸ்போர்டில் உள்ள கிறிஸ்ட் சர்ச்சில் படித்தார். 1791 இல் பட்டம் பெற்றார். இவர் ஆக்ஸ்போர்டில் உள்ள ஆல் சோல்ஸ் கல்லூரியில் சட்டம் பயின்றார். பின்னர் 1795 இல் லிங்கனின்ஸ் இன்னில் உள்ள வழக்கறிஞர் சங்கத்தில் இணைந்தார்.

இவர் சிறிது காலம் சான்சரியில் செயலராகவும் பின்னர் திவால் ஆணையராகவும் (1796-1811) பணியாற்றினார். 1794 இல் அவர் டர்ஹாமின் டீனின் மகள் எலிசபெத் ஜூலியானா டிக்பியை மணந்தார். அவர்களுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். 1800 ஆம் ஆண்டில், கிறிஸ்ட் சர்ச்சின் சக முன்னாள் மாணவரான கானிங் பிரபுவின் உதவியுடன் இவர் 1802 ஆம் ஆண்டு வரை பிரம்பர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

1809 ஆம் ஆண்டில், இவரது மனைவி இறந்தார். பின்னர் கானிங் பிரபுவின் செல்வாக்கினால் 1810 ஆம் ஆண்டில் இந்தியாவில் மெட்ராஸில் பியூஸ்னே நீதிபதியாக பதவியைப் பெற்றார். இவருக்கு மதராசில் 1810 ஆண்டு ஹென்றிட்டா பிளென்கின்சாப்புடன் மறுமணம் நடந்தது. இந்த இணையருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர். இவர் 1810 ஏப்ரல் 17 அன்று நைட் பட்டம் பெற்றார் மற்றும் 1811-12 இல் பாம்பாய் உச்ச நீதிமன்றத்தின் பதிவாளராக ஆனார். 1815 ஆம் ஆண்டில் இவர் தாமஸ் ஆண்ட்ரூ லுமிஸ்டன் ஸ்ட்ரேஞ்சிற்கு அடுத்து மதராசின் தலைமை நீதிபதியாக ஆனார். மேலும் 1817 இல் இவர் மதராஸ் இலக்கியச் சங்கத்தை நிறுவினார்.

இவர் 31 ஆகத்து 1820 அன்று தனது தலைமை நீதிபதி பதவியை விட்டு வலகினார். மேலும் வைட் தீவில் உள்ள ஒரு குடிலில் ஓய்வு காலத்தைக் கழிக்க முடிவு செய்தார். ஆனால் 22 சனவரி 1823 அன்று சவுத்தாம்ப்டனில் உள்ள போர்ட்ஸ்வுட் லாட்ஜில் உள்ள தனது வீட்டில் திடீரென இறந்தார் [1] இவர் சவுத்தாம்ப்டனுக்கு அருகிலுள்ள தெற்கு ஸ்டோன்ஹாமில் அடக்கம் செய்யப்பட்டார், அங்கு இவரது நினைவாக ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Port, M.H. (1986). Thorne, R. (ed.). The History of Parliament: The House of Commons 1790-1820. Boydell & Brewer.
  2. Anon. (1824). "Review: Madras Government Gazette, July 1". The Quarterly Oriental Magazine 2: 40. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஹென்றி_நியூபோல்ட்&oldid=3865654" இலிருந்து மீள்விக்கப்பட்டது