ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பூர்

ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல் நிலைப்பள்ளி தமிழ்நாட்டின் திருப்பூரில் உள்ள மிகப்பெரிய அரசு மாநகராட்சிப் பள்ளியாகும். இம் மகளிர் மேல்நிலைப் பள்ளியானது தமிழ்நாட்டிலேயே மிகுதியான மாணவர்களைக் கொண்ட பள்ளி என்ற பெருமை பெற்ற பள்ளியாகும். இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 7,185 மாணவிகள் படிக்கின்றனர். மேலும் இங்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள 22 ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 164 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இப்பள்ளியில் 1985 ஆம் ஆண்டில் ஆங்கில வழி வகுப்புகளும், 1994 இல் கணிணி வகுப்புகள் தொடங்கப்பட்டன. சிறப்பாக கணிணி கல்வியை வழங்கியதற்கான தேசிய விருது 2004 ஆம் ஆண்டு இந்தப் பள்ளிக்கு கிடைத்தது. புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இவ் விருதை வழங்கினார். பள்ளி வளாகத்தில் மாணவிகள் உருவாக்கிய மழைநீர் சேமிப்புத் தொட்டி தமிழ்நாட்டுக்கே முன்னோடியாக விளங்கியது. இதற்காக இந்தப் பள்ளி மாணவிகளை 2002 ஆம் ஆண்டு நேரில் வரவழைத்து பாராட்டிய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ரூபாய் பத்தாயிரத்தை பரிசாக வழங்கினார். [1]

ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளி

வரலாறு

தொகு

1942 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த டி. ஒ. ஆஷர் என்பவர், அவரது மனைவி ஜெய்வாபாயின் நினைவாக இப்பள்ளியைத் தொடங்கினார். 1942 இல் திருப்பூரிலுள்ள வாலிபாளையம் எனும் பகுதியில் பெண்களுக்கென்று தனியாக நகராட்சியின் ஆதரவுடன் இப்பள்ளி தொடங்கப்பட்டது. பின் சென்னை மாகாண அரசு புதிய பள்ளிக்காக 7.5 ஏக்கர் நிலம் வழங்கி உதவியது. இப்பள்ளிக்கான கட்டிடப் பணிகளுக்காக தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் நவம்பர் 11, 1948 இல் அடிக்கல் நாட்டினார். அன்றைய இந்திய மதிப்பில் ரூபாய் ஒரு லட்சம் செலவில் 18 வகுப்பறைகளுடன் கூடிய கட்டடம் கட்டப்பட்டது. அதன் பிறகு இப்பள்ளி அக்டோபர் 10, 1951 அன்று சென்னை மாநிலக் கல்வி மற்றும் சட்ட அமைச்சர் கே. மாதவ மேனனால் திறந்து வைக்கப்பட்டது. அப்போதைய திருப்பூர் நகர்மன்றத் தலைவர் கே. என். பழனிச்சாமிக்கவுண்டர் தலைமையில், பள்ளியின் நிறுவனர் டி. ஓ. ஆஷர் மற்றும் அவருடைய மகன்கள் பிரதாப் ஆஷர், கிருஷ்ணகுமார் ஆஷர் ஆகியோர் இந்தப் பள்ளியை திருப்பூர் நகராட்சிக்குத் தானமாக வழங்கினர். இதன் பிறகு இப்பள்ளி, ஜெய்வாபாய் நகராட்சிப் பெண்கள் மேல் நிலைப்பள்ளி எனும் பெயரில் செயல்பட்டு வந்தது. திருப்பூர் நகராட்சி, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இதன் பெயர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்று மாற்றமடைந்தது.

ஆதாரங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. வி.தேவதாசன் (26 சூன் 2017). "6 ஆயிரம் மாணவிகள்; 164 ஆசிரியர்களுடன் செயல்படும் தமிழ்நாட்டின் மிகப் பெரிய அரசுப் பள்ளி- திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2017.