ஜேம்ஸ் ஹில்லியர்

ஜேம்ஸ் ஹில்லியர் (James Hillier) (ஆகத்து 22,1915 - சனவரி 15,2007) ஒரு கனடிய-அமெரிக்க அறிவியலாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் 1938-ஆம் ஆண்டில் வட அமெரிக்காவில் முதல் வெற்றிகரமான உயர் தெளிவுத்திறன் கொண்ட எதிர்மின்னி நுண்ணோக்கியை ஆல்பர்ட் ப்ரீபஸுடன் வடிவமைத்து உருவாக்கினார்.[1]

ஜேம்ஸ் ஹில்லியர்
பிறப்பு(1915-08-22)ஆகத்து 22, 1915
பிராண்ட்ஃபோர்டு, ஒன்றாரியோ, கனடா
இறப்புசனவரி 15, 2007(2007-01-15) (அகவை 91)
பிரின்ஸ்டன், நியூ ஜெர்சி, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தேசியம்கனடியர், அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்தொராண்டோ பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஎதிர்மின்னி நுண்நோக்கி
தலைவர், அமெரிக்க எதிர்மின்னி நுண்ணோக்கி கழகம் (1945)

வாழ்க்கை வரலாறு

தொகு

ஒன்ராறியோவின் பிராண்ட்ஃபோர்டில் பிறந்த ஜேம்ஸ் மற்றும் எதெல் ஹில்லியர் (குக் ஹில்லியர்) ஆகியோரின் மகனான இவர், 1937 ஆம் ஆண்டில் கணிதம் மற்றும் இயற்பியலில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். முதுகலைப் பட்டத்தை 1938 ஆம் ஆண்டில் பெற்றார். 1941 ஆம் ஆண்டில் இவர் தொராண்டோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (1941) பெற்றார். இவரால் கண்டுபிடிக்கப்பட்ட பரிமாற்ற எதிர்மின்னி நுண்ணோக்கி பிற்கால எதிர்மின்னி நுண்ணோக்கிகளுக்கான முன்மாதிரியாக பயன்படுத்தப்பட்டது.

1941 ஆம் ஆண்டில், இவர் அமெரிக்காவிற்குச் சென்று நியூ ஜெர்சியில் உள்ள கேம்டனில் உள்ள ரேடியோ கார்ப்பரேஷன் ஆஃப் அமெரிக்கா என்ற நிறுவனத்தில் சேர்ந்தார். இவர் ஆர். சி. ஏ ஆய்வகங்களின் பொது மேலாளராகவும் (1957) துணைத் தலைவராகவும் (1958) ஆர். சி. ஏ ஆய்வு மற்றும் பொறியில் துறையின் துணைத்தலைவர் மற்றும் முதன்மை அறிவியலாளராகவும் (1976) பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார். இவரது பதவிக்காலத்தில் உருவாக்கப்பட்ட புதிய தொழில்நுட்பங்களில் ஆர். சி. ஏ செலக்டாவிஷன் என்ற அமைப்பும் அடங்கும். (குறிப்பு: நியூ ஜெர்சியின் பிரின்ஸ்டனில் அமைந்துள்ள ஆர்.சி.ஏ ஆய்வகங்கள், 1986 இல் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டதன் விளைவாக இந்த அமைப்பு ஆர். சி. ஏ யிலிருந்து தன்னாட்சி அமைப்பானது. 2011 ஆம் ஆண்டு வரை எஸ். ஆர். ஐ இன்டர்நேஷனலின் துணை நிறுவனமான சர்னோஃப் கார்ப்பரேஷன் என்று பெயர் மாறி எஸ். ஆர். ஐ நிறுவனத்தால் தன்னகப்படுத்தப்பட்டது.

1977-ஆம் ஆண்டில் ஆர். சி. ஏ. வில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, டாக்டர் ஹில்லியர் மூன்றாம் உலக நாடுகளுக்கு தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து ஆலோசனை வழங்கியதோடு அறிவியல் கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். 1945-ஆம் ஆண்டில் இவர் அமெரிக்க குடிமகனாக ஆனபோதிலும், ஹில்லியர் தனது வாழ்நாள் முழுவதும் பிராண்ட்ஃபோர்ட் சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தார். 1993 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஜேம்ஸ் ஹில்லியர் அறக்கட்டளை, பிராண்ட் கவுண்டி மாணவர்களுக்கு அறிவியல் கல்வியைத் தொடரும் ஆண்டு உதவித்தொகைகளை வழங்குகிறது.

1936 ஆம் ஆண்டில், இவர் புளோரன்ஸ் மர்ஜோரி பெல்லை மணந்தார், இந்தத் திருமண உறவு 1992-ஆம் ஆண்டில் புளோரன்ஸ் இறக்கும் வரை நீடித்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

ஜனவரி 15,2007 அன்று, நியூ ஜெர்சியின் பிரின்ஸ்டனில் பக்கவாதம் காரணமாக ஹில்லியர் இறந்தார்.

கவுரவங்கள்

தொகு
  • 1950 ஆம் ஆண்டில், ஒன்ராறியோவின் பிராண்ட்ஃபோர்டில் ஜேம்ஸ் ஹில்லியர் பப்ளிக் பள்ளி திறக்கப்பட்டது.
  • 1960 ஆம் ஆண்டில், அடிப்படை மருத்துவ ஆராய்ச்சிக்கான ஆல்பர்ட் லாஸ்கர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
  • 1975 ஆம் ஆண்டில், தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து ஐஆர்ஐ பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது.
  • 1980 ஆம் ஆண்டில், இவர் தேசிய கண்டுபிடிப்பாளர்களுக்கான ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார்.
  • 1981 ஆம் ஆண்டில், மின் மற்றும் மின்னணு பொறியாளர்கள் நிறுவனத்தில் இருந்து நிறுவநர்கள் பதக்கம் பெற்றார்.
  • 1997 ஆம் ஆண்டில், இவர் ஆர்டர் ஆஃப் கனடாவின் அலுவலராக நியமிக்கப்பட்டார்.

குறிப்புகள்

தொகு
  1. Sterling Newberry (September 2007). "Obituary: James Hillier". Physics Today 60 (9): 87–88. doi:10.1063/1.2784698. Bibcode: 2007PhT....60i..87N. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_ஹில்லியர்&oldid=4075540" இலிருந்து மீள்விக்கப்பட்டது