ஜே. டி. சாலிஞ்சர்
ஜே. டி. சாலிஞ்சர் (J. D. Salinger, ஜனவரி 1, 1919 – ஜனவரி 27, 2010) ஒரு அமெரிக்க எழுத்தாளர். 1951ல் வெளியான தி கேச்சர் இன் தி ரை (The Catcher in the Rye) என்ற புதினத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றவர். மேலும் புகழை விரும்பாது வெகுஜனத் தொடர்பின்றி தனிமையில் வாழ்ந்ததாலும் (1985ம் ஆண்டுக்குப்பின் எந்த ஊடகத்திற்கும் நேர்காணல் கொடுக்கவில்லை) பரவலாக அறியப்பட்டவர். மிகக் குறைவான படைப்புகளையே பதிப்பித்தவர். 1965க்குப் பின் அவருடைய எந்தப் படைப்பும் வெளியாகவில்லை.
ஜே. டி. சாலிஞ்சர் | |
---|---|
1950ல் சாலிஞ்சர் | |
பிறப்பு | ஜெரோம் டேவிட் சாலிஞ்சர் சனவரி 1, 1919 நியூயார்க், அமெரிக்கா |
இறப்பு | சனவரி 27, 2010 கார்நிஷ், நியூ ஹாம்சயர், அமெரிக்கா | (அகவை 91)
தொழில் | எழுத்தாளர் |
காலம் | 1940–1965 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தி கேச்சர் இன் தி ரை (1951) |
கையொப்பம் | |
நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் வளர்ந்த சாலிஞ்சர் தன் பள்ளிப் பருவத்திலேயே சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றினார். 1948ம் ஆண்டு அவருடைய முதல் சிறுகதை நியூயார்க்கர் இதழில் வெளியானது. 1951ல் தி கேச்சர் இன் தி ரை பெருவெற்றி பெற்றது. பதின்ம வயதினர் தனிமையினையும் வலியினையும் கருவாகக் கொண்ட இப்புதினம் 20ம் நூற்றாண்டு ஆங்கில இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இப்புதினமும் அதன் நாயகனான ஹோல்டன் காஃபீல்டும் வெகுஜன நினைவில் ஆழமாகப் பதிந்து விட்டனர். உலகெங்கும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் கேச்சருக்குப்பின் சாலிஞ்சர் சில படைப்புகளையே வெளியிட்டார். 1960களில் பொதுப் பார்வையிலிருந்து விலகி தனிமையில் வாழத்தொடங்கினார். ஆனாலும் அவருடைய இந்த வாழ்க்கை முறையே பிறரது கவனத்தை ஈர்த்தது. வாழ்வின் இறுதிவரை பல சர்ச்சைகளில் அவரது பெயர் அடிபட்டது.