ஞானக் கொள்கை

ஞானக் கொள்கை (Gnosticism) என்பது தொடக்க காலக் கிறித்தவ சபையோடு தொடர்புடையதாய் எழுந்து, பின்னர் தப்பறை என்று கண்டிக்கப்பட்ட சமய நம்பிக்கை மற்றும் ஆன்மிக செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒரு கொள்கை ஆகும். அது கிரேக்க கலாச்சாரத்தில் பரவிய யூதம், கிரேக்க-உரோமை மறைகள், சோராஸ்டரியம் மற்றும் புது-பிளேட்டனிசம் ஆகியவற்றோடும் தொடர்புடையதாய் விளங்கியது.

பெயர்ப் பிறப்பு

தொகு

ஞானக் கொள்கை என்னும் பெயர் கிரேக்க சொல்லாகிய γνῶσις = gnōsis என்பதிலிருந்து பிறக்கிறது. கிரேக்க மூலமாகிய γνῶσις என்னும் சொல்லுக்கு "அறிவு", "ஞானம்" என்று பொருள். அதிலிருந்து gnostikos என்னும் சொல் தோன்றியது. அதற்கு "அறிவு (ஞானம்) நிரம்பிய" என்பது பொருள்.

ஞானக் கொள்கையின் வடிவங்கள் பல. ஆனால் அடிப்படையில், மனிதப் புலன்களால் எளிதாக அடைய இயலாத சிறப்பு அறிவு (ஞானம்) உண்டு என்றும், அந்த ஞானத்தை அடையும்போது ஆன்மா பருப்பொருள் உலகத்திலிருந்து விடுதலை பெறும் என்றும் ஞானக் கொள்கை எடுத்துரைத்தது.

பருப்பொருள் உலகம் கடவுளால் நேரடியாகப் படைக்கப்பட்டது அல்ல, மாறாக தெய்வத்தன்மை கொண்ட ஓர் இடைநிலைச் சிறு கடவுளால் (demiurge) உருவாக்கப்பட்டது என்று இக்கொள்கை விளக்கியது. இந்த இடைநிலைக் கடவுள் முழுநிறைவு கொண்டவர் அல்ல. சில ஞானக் கொள்கை அணுகுமுறைகள் இடைநிலைக் கடவுளைத் தீய கடவுளாகக் கூடக் கருதின. சிலர் இடைநிலைக் கடவுளை ஆதாம் காத்மோன், அக்ரிமான், சாமாயேல், சாத்தான், யால்தாபாவோத், யாவே என்று வெவ்வேறு பெயர்களால் அழைத்தார்கள்.

சில ஞானக் கொள்கை அணுகுமுறைகள் விவிலியத்தைத் திரித்துப் பொருளுரைத்தன. யூத-இசுரயேல் அறிஞர் ஒருவர் கருத்துப்படி, இந்த அணுகுமுறைகள் "செமித்திய எதிர்ப்பு மனநிலை கொண்டிருந்தன" [1][2] .

அதே நேரத்தில், "கபாலா" (Kabbalah) என்று அழைக்கப்படுகின்ற ஆன்மிகக் கொள்கை யூதத்தின் ஒரு பிரிவாகவும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.[3][4]

கிறித்தவப் போர்வையில் அமைந்த ஞானக் கொள்கையின் சில அணுகுமுறைகள்படி, இயேசு கிறிஸ்து கடவுள் நிலையிலிருந்து மனித உருவெடுத்து, இவ்வுலகிற்குக் கடவுளின் ஞானத்தைக் கொண்டுவந்தார்.[5] வேறு சிலரோ, கடவுள் மனிதராக உருவெடுக்க முடியாது என்றும், இயேசு கிறிஸ்து எல்லா மனிதரைப் போல ஒரு சாதாரண மனிதர்தாம் என்றும், அவர் "ஞானத்தை" அடைந்ததால் தெய்விக நிலை பெற்றார் என்றும், அந்நிலையை அடையும் வழியைத் தம் சீடருக்குக் கற்பித்தார் என்றும் கூறுகின்றனர். மண்டேயர்கள் (Mandaeans) என்போர், இயேசு போலி மெசியா என்றும், திருமுழுக்கு யோவானிடமிருந்து அவர் பெற்ற போதனையைத் திரித்துவிட்டார் என்றும் கூறுகின்றனர்.[6] வேறுசிலர், மானி என்பவரும் ஆதிப்பெற்றோரின் மூன்றாம் மகனாகிய சேத் என்பவரும் மக்களை மீட்பவர்கள் என்று கூறுகின்றனர்.[7]

கிறித்தவ சமயத்தோடு தொடர்புடையதாக ஞானக் கொள்கை எழுந்தாலும், அதன் வேர்கள் யூதத்தில் உள்ளன என்று சில அறிஞர் கருதுகின்றனர்.[8] பண்டைய உரோமைப் பேரரசு பரவியிருந்த இடங்களிலும், ஆரியுசு என்பவரின் கொள்கை பரவிய இடங்களிலும் ஞானக் கொள்கையும் வேரூன்றியது.[9] அதுபோலவே பண்டைய பாரசீகப் பேரரசிலும் (Persian Empire) இக்கொள்கை பரவி, மத்தியதரைக் கடல், நடு ஆசியா ஆகிய இடங்களில் கி.பி. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் நிலைபெறலாயிற்று. இசுலாம் பரவியதும், அல்பிஜேன்சியன் கொள்கைக்கு எதிர்ப்பு எழுந்ததும் (1209-1229) நடுக்காலத்தில் ஞானக் கொள்கையினர் ஏறக்குறைய மறைந்துபோகக் காரணமாயின. எனினும் மண்டேயர்கள் சிறு குழுக்களாக ஆங்காங்கே இன்றும் உளர். 19-20 நூற்றாண்டுகளில் ஞானக் கொள்கை ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் சில இடங்களில் மீண்டும் உயிர்பெற்றது.

புனித இரனேயுஸ் ஞானக் கொள்கைக்குப் பெயர் அளித்தல்

தொகு
 
"ஞானக் கொள்கை" என்னும் பெயர்கொண்டு தப்பறைக் கொள்கைகளை முதலில் அடையாளம் காட்டியவர் புனித இரனேயுஸ்

கி.பி. 185ஆம் ஆண்டளவில், புனித இரனேயுஸ் என்னும் கிறித்தவ அறிஞர் "ஞானக் கொள்கை" என்னும் சொல்லைப் பயன்படுத்தி வாலண்டைன் (Valentinus) என்பவரின் படிப்பினையை அடையாளம் காட்டினார். அக்கொள்கை "தப்பறை" (heresy) என்றும், "அறிவு (ஞானம்) சார்ந்த தப்பறை" என்றும் அவர் கூறினார்.[10] இப்பெயரை இரனேயுஸ் பயன்படுத்தியதற்கு விவிலிய அடிப்படையாக அமைவது திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் வருகின்ற ஒரு சொற்றொடர் ஆகும். 1 திமொத்தேயு 6:20

என்று திமொத்தேயுவுக்கு அறிவுரை கூறுகிறது. இதையே தலைப்பாகக் கொண்டு (On the Detection and Overthrow of Knowledge Falsely So Called. கிரேக்கத்தில் elenchos kai anatrope tes pseudonymou gnoseos) இரனேயுஸ் ஒரு நூல் எழுதினார். அதில் வாலண்டைன் கொள்கையையும் பிற சில கொள்கைகளையும் அவர் "ஞானக் கொள்கை" என்று அழைக்கின்றார்.[11]

ஞானக் கொள்கை ஒரு கிறித்தவத் திரிபுக் கொள்கையா?

தொகு

ஹார்னாக் என்னும் அறிஞர் "ஞானக் கொள்கை என்பது கிறித்தவம் கிரேக்க மயம் ஆக்கப்பட்டதன் கூர்மைமிகு தோற்றம்"[12] என்று கூறிய கருத்து வரலாற்று ஆய்வாளர்களால் இன்று ஏற்கப்படுவதில்லை. கிறித்தவக் கொள்கைகளை நன்கு அறிந்தோ அறியாமலோ, அதன் சில அம்சங்களைக் கிரேக்க மெய்யியலோடும் சமயக் கருத்துகளோடும் இணைத்ததன் விளைவே ஞானக் கொள்கை என்பது தவறு என்று இவ்வறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அவர்கள் கருத்துப்படி, கிறித்தவத்துக்கு முற்பட்ட காலத்தில் ஏற்கப்பட்டிருந்த சமயக் கொள்கைகளையும் கிறித்தவத்திலிருந்து கடனாகப் பெற்ற சில கொள்கைகளையும் இணைத்ததால் உருவானதே ஞானக் கொள்கை.

இவ்வாறு உருவான ஞானக் கொள்கை கிறித்தவ மரபுக் கொள்கைக்குப் பல விதங்களில் எதிர்ப்பாக அமைந்தது. அந்த மோதலின் விளைவாக, கிறித்தவம் தன் கொள்கைகளைத் துல்லியமாக வரையறுக்கும் வாய்ப்புப் பிறந்தது.

ஞானக் கொள்கை பற்றி அறிய உதவும் ஆதாரங்கள்

தொகு

ஞானக் கொள்கை பற்றி இன்று நாம் அறிய உதவும் ஆதாரங்கள் இரு வகைப்படும். முதல் வகை ஆதாரம் ஞானக் கொள்கையை எதிர்த்தும் அதை விமர்சித்தும் பண்டைக் கிறித்தவ அறிஞர்களால் எழுதப்பட்ட நூல்கள். இரண்டாம் வகை ஆதாரம் கடந்த சில பத்தாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஞானக் கொள்கை நூல்கள்.

ஞானக் கொள்கையை எதிர்த்து எழுதப்பட்ட நூல்கள்

தொகு

கிபி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் கிறித்தவ அறிஞர் புனித இரனேயுஸ் என்பவர் "தப்பறைக் கொள்கைகளுக்கு மறுப்பு" அல்லது "போலி ஞானம் என்னும் கொள்கையை இனம் கண்டு மறுத்துரைத்தல்" (Adversus Haereses or Unmasking and Refutation of the False Gnosis) என்னும் தலைப்பில் எழுதிய நூல் இன்றும் முழுமையாகக் கிடைக்கின்றது[13]. மூல மொழியாகிய கிரேக்க பாடத்தின் ஒரு சில சிறு பகுதிகளே கிடைத்தாலும், தொடக்கத்திலேயே செய்யப்பட்ட இலத்தீன் மொழி பெயர்ப்பு முழுமையாகக் கிடைத்துள்ளது. ஐந்து தொகுதிகளாக அமைந்த இந்த நூல் கிபி சுமார் 180இல் எழுதப்பட்டது. அதில் திருத்தந்தை எலூத்தேரியுஸ் தமக்கு சம காலத்தவர் என்று இரனேயுஸ் கூறுவதிலிருந்து நூல் தோன்றிய காலம் துல்லியமாகத் தெரிகிறது.

தொடக்க காலக் கிறித்தவ அறிஞராகிய ஹெகேசிப்பஸ் (Hegesippus) என்பவர் ஞானக் கொள்கையினருக்கு எதிராக எழுதிய நூல் கிடைக்கவில்லை. ஆனால் அதிலிருந்து பல பகுதிகளை யூசேபியஸ்[14] என்னும் பண்டைய அறிஞர் மேற்கோளாகக் காட்டுகிறார்.

ஞானக் கொள்கையினரான மார்சியோன், வாலண்டைன் ஆகியோருக்கு எதிராகத் தெர்த்தூல்லியன் என்னும் பண்டைய ஆசிரியர் ஐந்து நூல்கள் எழுதினார்[15].

ஞானக் கொள்கையினர் எழுதிய நூல்கள்

தொகு

18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும் ஞானக் கொள்கை பற்றி அறிவதற்கு அக்கொள்கையை எதிர்த்து எழுதிய பண்டைய ஆசிரியர்களின் நூல்களும் குறிப்புகளும் மட்டுமே இருந்தன. ஆனால் பிற்காலத்தில் ஞானக் கொள்கையினரே எழுதிய நூல்கள் சில கண்டுபிடிக்கப்பட்டன. எகிப்து நாட்டில் நாக் ஹம்மாடி (Nag-Hammadi) என்னும் இடத்தில் (பண்டைய பெயர் "கேனோபோஸ்கியோன்" - Chenoboskion) 1946இல் நிகழ்ந்த கண்டுபிடிப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. பப்பைரஸ் நாணல் ஏடுகளில் எழுதப்பட்ட இந்நூல்கள் கோப்து மொழியில் உள்ளன. அவை கிரேக்க மூலத்திலிருந்து பெயர்க்கப்பட்டன என்று அறிஞர் கருதுகின்றனர்.

இந்த சுவடிகளிலிருந்து ஞானக் கொள்கை பற்றி இன்று பல தகவல்களை நேரடியாக அறிந்துகொள்ள முடிகிறது. அங்கு விவரிக்கப்படுகின்றவை தொடக்க காலக் கிறித்தவ அறிஞர்கள் ஞானக் கொள்கை பற்றிக் கூறியதைப் பெரிதும் ஒத்திருக்கின்றன என்று ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர்.

நாக் ஹம்மாடியில் கண்டுபிடிக்கப்பட்ட 13 ஏட்டுத் தொகுதிகளில் 51 நூல்கள் உள்ளன. அவை கோப்து மொழியில் அமைந்துள்ளன. அவற்றுள் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது "தோமா நற்செய்தி" (Gospel of Thomas) என்னும் நூல் ஆகும்.

ஞானக் கொள்கையின் அடிப்படை அம்சங்கள்

தொகு

ஞானக் கொள்கையின் வடிவங்கள் மிகப்பல. எண்ணிறந்த அந்த வடிவங்கள் பற்றி இரனேயுஸ் பின்வருமாறு கூறுகிறார்: "ஞானக் கொள்கையினர் இரண்டு அல்லது மூன்று பேர் ஓரிடத்தில் இருந்தால், ஒரே பொருள் பற்றி அவர்கள் ஒவ்வொருவரும் மாறுபட்ட கருத்துகளைத் தான் கூறுவார்கள்; சொல்லும் மாறுபடும், பொருளும் மாறுபடும்"[16]. "ஞானம்" (அறிவு) என்பது விடுதலை கொணரும் என்பது அவர்களது அடிப்படைக் கொள்கையாக இருந்ததால், ஒவ்வொருவரும் தமக்கே உரிய விதத்தில் "ஞானம்" பெற்றதாகக் கூறிக்கொண்டதால் ஒருவர் பெற்ற ஞானம் வேறொருவர் பெற்ற ஞானத்திலிருந்து மாறுபடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

எனவே, கிறித்தவம் சார்ந்த வகையிலோ, கிறித்தவம் சாராத வகையிலோ அமைந்த பல வகையான ஞானக் கொள்கைகளின் ஒவ்வொன்றின் தனித்தன்மையையும் துல்லியமாக வரையறுப்பது இயலாத காரியம். இருப்பினும், எல்லா வகையான ஞானக் கொள்கைகளிலும் அடிப்படையில் ஐந்து கூறுகள் உள்ளன என்று அறிஞர் கூறுவர். அவை:

  • கடவுள்
  • உலகு
  • மனிதன்
  • விடுதலை
  • அறநெறி


என்பனவாகும்.

ஞானக் கொள்கையின் கடவுள் கருத்து

தொகு

கடவுள் என்றால் உலகிலிருந்தும் மனிதரிலிருந்தும் வானதூதர் மற்றும் இடைநிலைத் தெய்வங்களிலிருந்தும் முற்றிலுமாகப் பிரிந்து நிற்கும் பரம்பொருள் என்பது ஞானக் கொள்கையின் பார்வை. இக்கடவுள் எவராலும் அறியக்கூடாதவர்; ஒருவிதத்தில் மனிதருக்கு அன்னியர்; முற்றிலும் மாறானவர். குறிப்பாக, கடவுள் இவ்வுலகைப் படைத்தவர் என்றோ, இவ்வுலகு தொடர்ந்து நிலைபெற்றிருப்பதற்கு அவருடைய துணை தேவை என்றோ ஞானக் கொள்கை கருதுவதில்லை. ஞானக் கொள்கையின் சில பிரிவுகள்படி, கடவுளிடமிருந்து தோன்றிய சில சக்திகள் இவ்வுலகு தோன்றக் காரணம் என்றாலும், கடவுளுக்கும் உலகுக்கும் தொடர்பு இல்லை. அவ்விதத்தில் கடவுள் "இல்லாக் கடவுள்" (non-existent God) எனப்படுகிறார்.

கடவுள் பற்றிய கருத்து இவ்வாறு இருப்பதால் ஞானக் கொள்கை முழுக்க முழுக்க "இரு பிரிவுக் கொள்கை" (dualism) என்னும் அணுகுமுறையைக் கொண்டுள்ளது. கடவுளும் உலகும் ஒன்றுக்கொன்று யாதொரு உறவுமின்றி, எதிர் எதிராக உள்ளன. ஒளியும் இருளும் ஒன்றாக இருக்க முடியாததுபோல கடவுளும் உலகமும் எதிர் எதிராக இருப்பதோடு, நன்மை தீமை என்னும் வகையில் அவை ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன என ஞானக் கொள்கை கூறுகிறது.

ஞானக் கொள்கையின் உலகு பற்றிய கருத்து

தொகு

இவ்வுலகு எவ்வாறு தோன்றியது என்பது குறித்து ஞானக் கொள்கை தரும் விளக்கம் தொல்புனைவுப் பாணியில் உள்ளது. கடவுளுக்கும் உலகுக்கும் இடைநிலையில் எண்ணிறந்த விண்ணுயிரிகள் (Aeons) உள்ளனர் என்று ஞானக் கொள்கை கருதியது. இந்த விண்ணுயிரிகளுக்குப் பெயர்கள், உறவுகள் போன்றவற்றை அளிப்பதில் ஞானக் கொள்கை கருத்தாயிருந்தது. இவ்விண்ணுயிரிகள் கடவுளின் அண்மையில் "முழுமை" (Fullness; கிரேக்கத்தில்: Pleroma) என்னும் இடத்தில் உறைகின்றன.

இவ்வுலகைப் படைத்தவர் ஒருவர் உண்டு என்றும் அவர் அனைத்தையும் கடந்த பரம்பொருள் அல்ல, மாறாக ஓர் "இடைநிலைக் கடவுள்" (Demiurge) என்பவர் என்றும் ஞானக் கொள்கை கூறுகிறது. இந்த இடைநிலைக் கடவுள் (அ) கடவுளர் "ஆட்சியாளர்" (கிரேக்கம்: Archon) என்று அறியப்பட்டனர். இவர்கள் வழக்கமாக எழுவர் (கிரேக்கம்: Hebdomad) ஆவர். இந்த ஏழு இடைநிலைக் கடவுளருக்கு பாபிலோனிய முறை வான் கோள்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டன. சில சமயங்களில் பழைய ஏற்பாட்டில் கடவுளுக்கு அளிக்கப்பட்ட பெயர்களாகிய யாவு, அதோனாய், எல் ஷடாய் போன்ற பெயர்களும் கொடுக்கப்பட்டன. பூமியைச் சுற்றி அமைந்த வெவ்வேறு சுற்றிடங்களை இக்கடவுளரே ஆளுகின்றனர். இந்த இடைநிலைக் கடவுளர் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் பரம்பொருளாம் கடவுளிலிருந்து தோன்றியவர்களாயினும் அதனால் அப்பரம்பொருளின் மீயியல் தன்மை (transcendence) மாற்றமடைகிறது என்று கூற முடியாது.

ஞானக் கொள்கை பயன்படுத்தும் ஒரு புனைவுப்படி, விண்ணுயிரிகளில் ஒருவராய் இருந்த "ஞானம்" (கிரேக்கம்: Sophia; எபிரேயம்: Achamoth) என்னும் தெய்வம் தன் நிலையிலிருந்து வீழ்ச்சியுற்றது. பருப்பொருளின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்ட "ஞானம்" இடைநிலைக் கடவுளர் செயல்படத் தூண்டியது. அந்த இடைநிலைக் கடவுளரிடமிருந்து கதிரவனிலிருந்து ஒளி பரவுவதுபோல இவ்வுலகம் தோன்றியது என்பது ஞானக் கொள்கை தரும் விளக்கம்.

பூமியைச் சூழ்ந்திருக்கும் மண்டலங்களின் சக்திகளும் இவ்வுலகப் பருப்பொருளும் தம் இயல்பிலேயே தீமையானவை. இங்கேயும் ஞானக் கொள்கையின் "இரு பிரிவுக் கொள்கை" (dualism) தோன்றுவதைக் காணலாம். இவை எல்லாம், அனைத்தையும் தாண்டி நிற்கும் பரம்பொருளிலிருந்து அகன்ற நிலையைக் குறிக்கின்றன. மனிதர் கடவுளை நோக்கி எழுவதை இவை தடுத்து நிறுத்தப் பார்க்கின்றன. கடவுள் ஒளி என்றால் இச்சக்திகளும் பருப்பொருளும் இருளாக உள்ளன. இந்த இருளின் பிடியில் சிக்கி மனிதர் அவதியுறுகின்றனர். பல பிறவிகள் எடுத்தாலும் அவர்கள் விடுதலை அடைய முடியா நிலையில் உள்ளனர். இவ்வாறு ஞானக் கொள்கை கருதுகிறது.

மனிதர் பற்றி ஞானக் கொள்கை போதிப்பது

தொகு

கடவுளிடமிருந்து, அவரது முழுமையிலிருந்து வெளியான ஒரு தீப்பொறி மனிதரிடம் உள்ளது. பருப்பொருள் என்னும் தீமையில் உழலும் மனிதர் கடவுளை நோக்கி எழுந்து செல்ல இயாலா நிலையில் உள்ளனர். அவர்கள் "ஞானம்" ஒன்றின் வழியாக மட்டுமே கடவுளிடம் செல்ல இயலும்.

மனிதர் இரு கூறுகளால் அல்ல, மூன்று கூறுகளால் ஆனவர்கள். பருப்பொருளால் ஆகிய உடல் என்பது ஒரு கூறு, உள்ளம் (psyche) என்பது இரண்டாம் கூறு, ஆன்மா (அ) ஆவி (spirit; கிரேக்கம்: pneuma) என்பது மூன்றாம் கூறு. இந்தக் கூறுகளில் ஏதாவது ஒன்று மேலோங்கிவிட்டால் மனிதன் அக்கூறினுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறான். தீமையாகிய பருப்பொருள் என்னும் உடலின் ஆதிக்கத்தின்கீழ் இருப்பவன் (hylic) இவ்வுலகமே கதி என்று தீமையில் உழன்றுகொண்டிருப்பான். உள்ளம் என்னும் கூறும் பருப்பொருளுக்கு மிக அண்மையில் இருப்பதாலும், இடைநிலைக் கடவுளரிடமிருந்து தோன்றியதாலும் தீமை வகையைச் சார்ந்தே. எனவே, உளத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பவன் (psychic) கூட தீமையிலிருந்து விடுபடா நிலையிலேயே உள்ளான். ஆன்மா அல்லது ஆவியின் ஆதிக்கத்தின் கீழ் வருவோர் மட்டுமே தெய்விகத் தீப்பொறி தூண்டப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் "ஆன்மிகள்" (அ) "ஆவிநிலையினர்" (pneumatics) எனப்படுவர். இவர்கள் தீமை எனும் பருப்பொருள் உலகிலிருந்து விடுதலை பெற குறித்து வைக்கப்பட்டவர்கள். தம் பூர்வீகப் பிறப்பிடமாகிய தெய்வ உலகை அடையும் தகுதி இவர்களுக்கு மட்டுமே உண்டு. ஞானக் கொள்கையினர் தங்களை இத்தகைய "ஆன்மிகள்" என்று அழைத்து, பெருமைப்பட்டுக் கொண்டனர்.

ஒருவித போலிக் கிறித்தவ அணுகுமுறை கொண்ட சில ஞானக் கொள்கைப் பிரிவுளின்படி, கடவுளிடத்தில் நம்பிக்கை கொண்டு, கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, திருவருட்சாதனங்களில் பங்கேற்று, அழியாப் பேரின்பத்தைக் கடவுளிடம் கண்டுகொள்வோம் என்னும் உறுதிப்பாட்டோடு செயல்படுகின்ற கிறித்தவர்கள் "உளத்தின் ஆதிக்கத்தின் கீழ்" இருப்பவர்கள் (psychics) என்று அறியப்பட்டனர். இத்தகையோரிடமிருந்து ஞானக் கொள்கையினர் தங்களைப் பிரித்துக் காட்டியதோடு தாங்கள் பிறரைவிட "அறிவாளிகள்" என்று கருதினர்.

ஆன்மா விடுதலை பெறுதல் பற்றி ஞானக் கொள்கையின் கருத்து

தொகு

ஞானக் கொள்கை "மனித மையக் கொள்கை" என்று சில அறிஞர் கூறுகின்றனர். ஆன்மா எங்கே எந்நிலையில் இருந்தது, எத்தகைய இழிநிலையில் வீழ்ந்துவிட்டது, எந்நிலைக்கு எழுந்து செல்ல வேண்டும். என்னும் கேள்விகளுக்கு ஞானக் கொள்கை பதிலளிக்க முன்வந்தது. "விடுதலை" அடைவதே ஞானக் கொள்கையின் ஒரே குறிக்கோள். விடுதலை அடைவது கடவுளின் துணையால் நிகழும் காரியம் அல்ல; மனிதர் கடவுளிடத்தில் நம்பிக்கை கொள்வதால் நிகழும் காரியமும் அல்ல; கடவுளின் திருவுளத்தோடு மனித்ர் ஒத்துழைப்பதால் நிகழும் காரியமும் அல்ல. மாறாக, மரபு வழிக்குப் புறம்பாகப் பெறப்படுகின்ற ஞானம் (esoteric knowledge) மட்டுமே விடுதலை கொணரும்.

விடுதலை தரும் அறிவை (ஞானத்தை) மனிதருக்கு வழங்குவதற்காக ஒரு தெய்விக மீட்பர் (விடுதலையாளர்) (divine savior) வருவார் என்னும் கருத்து பல ஞானக் கொள்கைப் பிரிவுகளிடம் உண்டு. இத்தகைய "மீட்பர்" என்பவர் கிறித்தவம் கூறும் "மீட்பர்" என்னும் கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். ஞானக் கொள்கை கூறும் மீட்பர் ஒரு தெய்வப் பிறவியும் தேவ தூதரும் ஆவார். ஆனால் அவரை இயேசு கிறிஸ்து என்று ஞானக் கொள்கை அழைத்தாலும் அவர் வெளித்தோற்றத்தில் மனிதர் போல இருந்தாரே தவிர உண்மையிலேயே மனிதர் அல்ல (Docetism). இயேசு துன்பங்கள் அனுபவித்து சிலுவையில் அறையுண்டு இறந்ததை விளக்குவதற்கு இயேசு உண்மையிலேயே மனிதர் என்னும் கருத்தை ஏற்காத ஞானக் கொள்கை திணறியதுண்டு.

மனிதனுக்கு விடுதலை அளிக்க ஒரு "மீட்பர்" வேண்டும் என்று ஞானக் கொள்கை கூறுவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. விடுதலைக்கு ஒரே வழி "ஞானம்" என்னும் போது அந்த ஞானம் மெய்யியல் சார்ந்த சிந்தனையறிவு அல்ல, மாறாக, கடவுளிடமிருந்து வருகின்ற ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த "ஞானம்" (அறிவு). எனவே, அத்தகைய ஞானம் ஓர் "இறை வெளிப்பாடாக" (divine revelation) மட்டுமே வர முடியும். இத்தகைய முன்கருத்தோடுதான் ஞானக் கொள்கை இயேசு தம் சீடருக்கு அளித்த "இரகசிய" போதனை பற்றியும், தெய்வ நிலையோர் வழங்கிய "இரகசிய" போதனை பற்றியும் குறிப்பிட்டது.

ஞானம் என்பது மரபுக்கு வெளியிருந்து வரும் அறிவு (esoteric knowledge). இத்தகைய அறிவு எல்லாருக்கும் கிடைக்கும் அறிவு அல்ல. இதனைப் பெற்று விடுதலை பெறுவதற்கென்று குறிக்கப்பட்டோர் ஒருசிலர் மட்டுமே. அவர்களே ஞானக் கொள்கையினர் என்னும் "தேர்ந்தெடுக்கப்பட்ட" குழுவினர். இவ்வாறு ஞானக் கொள்கை போதித்தது.

ஞானக் கொள்கையின் அறநெறிப் புரிதல்

தொகு

ஞானக் கொள்கையைத் தாக்கி எழுதிய பண்டைக்காலக் கிறித்தவ அறிஞர்கள் (இரனேயுஸ், யூசேபியஸ் போன்றோர்) கருத்துப்படி, ஞானக் கொள்கையினர் அறநெறிக் கொள்கையின் வெவ்வேறான இரு விளிம்புநிலைப் பார்வை கொண்டிருந்தனர். உலகமும் பருப்பொருளும் தீயவை என்று ஞானக் கொள்கை கருதியதால் அந்த உலகத்தையும் பருப்பொருளையும் சார்ந்த "இழிவான" காரியங்களை அவர்கள் வெறுத்து ஒதுக்கி, ஒருவித ஆன்மிகப் பார்வை கொண்டவர்களாய் அதிமிக ஒறுத்தலில் ஈடுபட்டார்கள் (asceticism). இது ஒரு விளிம்புநிலை. மறுபுறமோ, ஞானக் கொள்கையின் ஒரு சில பிற்காலப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள், இந்த உலகமும் பருப்பொருளும் தீயவை என்றாலும், தாங்கள் கடவுளின் தீப்பொறியைத் தமக்குள் கொண்டிருந்ததால் இந்த உலகமும் அதன் சிற்றின்பங்களும் தங்களை எவ்விதத்திலும் தீண்ட முடியாது என்னும் கருத்துடையவர்களாய் சிற்றின்பத்தில் மூழ்கினார்கள். இந்த முரண்பாடான விளிம்புநிலை ஞானக் கொள்கையில் இருந்ததால் அக்கொள்கையைக் கடைப்பிடித்தவர்கள் நலமான அறநெறிப் பார்வை கொண்டிருக்கவில்லை என்று தொடக்க காலக் கிறித்தவ ஆசிரியர்கள் குறைகூறினார்கள்[17].

ஞானக் கொள்கையின் சமயச் சடங்குகள்

தொகு

ஞானக் கொள்கையினர் வெவ்வேறு விதங்களில் திருமுழுக்கைக் கடைப்பிடித்தார்கள். பிற்கால ஞானக் கொள்கைப் பிரிவுகள் மந்திரவாதத்தில் ஈடுபட்டன; ஒருசில உயிரெழுத்துக்களைத் தொடர்ச்சியாக உச்சரித்து ஒலியெழுப்புதல், சில சொற்களை மீண்டும் மீண்டும் உச்சரித்தல் போன்ற பல வகைகளில் மாந்த்ரிகம் கடைப்பிடிக்கப்பட்டது.

ஞானக் கொள்கையின் முக்கிய தலைவர்கள்

தொகு
  • மாயவித்தை சீமோன் (Simon Magus): இவரைப் பற்றிய நீண்ட குறிப்பு கிறித்தவ விவிலிய நூலாகிய திருத்தூதர் பணிகளில் உள்ளது (8:9-24):

கிபி முதல் நூற்றாண்டில் நிலவிய ஞானக் கொள்கைக்கும் அதன் பின் கிறித்தவப் போர்வையில் எழுந்த ஞானக் கொள்கைகளுக்கும் இடையே ஒரு பாலம் போல "மாயவித்தை சீமோன்" செயல்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அவரது சீடர் மெனாண்டர் (Menander) என்பவர் அந்தியோக்கியாவில் கற்பித்தார். அவர் தம்மை விண்ணிலிருந்து இறங்கிவந்த "மீட்பர்" என்று காட்டிக்கொண்டார்.

  • பசீலிடஸ் (Basilides): இவர் மெனாண்டரின் முக்கிய சீடர்களுள் ஒருவர். இவரும் இவருடைய மகன் இசிதோர் என்பவரும் எகிப்து நாட்டு அலக்சாந்திரியாவில் ஒரு குழுவைத் தொடங்கினர்.
  • கார்ப்போக்ராட்டஸ் (Carpocrates): இவரும் இவருடைய மகன் எப்பிபானஸ் (Epiphanes) என்பவரும் "ஞானக் கொள்கையினர்" ("the Gnostics") என்னும் பொதுப் பெயரில் ஒரு குழுவை நிறுவினர் என்று புனித இரனேயுஸ் தகவல் தருகிறார்[18]. இக்குழுவும் மாயவித்தைகளில் ஈடுபட்டது.
  • வாலண்டைன் (அ) வாலந்தீனுஸ் (Valentinus): எகிப்தில் பிறந்த இவர் கிபி இரண்டாம் நூற்றாண்டில் உரோமையில் கற்பித்தார். ஞானக் கொள்கையினருள் மிகப் பிரபல்யமானவர் இவரே[19]. இவர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் அழிந்துபட்டன. ஆயினும் அவருடைய படைப்பாகக் கருதப்படுகின்ற "உண்மையின் நற்செய்தி" (Gospel of Truth) என்னும் நூல் 1945இல் நாக் ஹம்மாடி நகரில் கண்டெடுக்கப்பட்டது. இவரது கருத்துப்படி, மனிதப் புலன்களுக்கு எட்டும் உலகம் வேறு, புலன்களுக்கு எட்டாத உலகம் வேறு. மனிதர் பருப்பொருள், உளம், ஆன்மா என்னும் மூன்று கூறுகளால் ஆனவர்கள். வாலந்தீனுசின் கொள்கை இரு வடிவங்களாகப் பிரிந்தது. மேற்கு மரபு இயேசுவை "உளம்" சார்ந்த ஒருவராகவும், கீழை மரபு இயேசுவை "ஆன்மா (அ) ஆவி" சார்ந்த ஒருவராகவும் புரிந்துகொண்டன.

இவர் ஹைஜீனஸ் என்பவர் காலத்திலும், திருத்தந்தை அனிசேட்டஸ் என்பவர் காலத்திலும் வாழ்ந்தார். உரோமையில் தம் கொள்கையைப் பரப்பினார். அதனால் சபைநீக்கம் செய்யப்பட்டார்.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Bayme, Steven. Understanding Jewish History: Texts and Commentaries, KTAV Publishing House, 1997, p. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88125-554-6
  2. Gager, John G. The Origins of Anti-Semitism Attitudes toward Judaism in Pagan and Christian Antiquity, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், 1985, p. 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-503607-7
  3. Scholem, Gershom. Jewish Gnosticism, Merkabah Mysticism, and the Talmudic Tradition, 1965.
  4. Idel, Moshe. Kabbalah: New Perspectives, Yale University Press, 1990, p. 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-04699-1
  5. "An Introduction to Gnosticism and The Nag Hammadi Library". The Gnostic Society Library. பார்க்கப்பட்ட நாள் 2009-12-02.
  6. Macuch, Rudolf (1965). Handbook of Classical and Modern Mandaic. Berlin: De Gruyter & Co. pp. 61 fn. 105.
  7. "The Gnostic World View: A Brief Introduction". The Gnosis Archive. பார்க்கப்பட்ட நாள் 2009-02-12.
  8. J. Jacobs, L. Blau Gnosticism Article from the Jewish Encyclopedia 1911
  9. Barbarian migrations and the Roman West, 376-568 By Guy Halsall pg 293 Publisher: Cambridge University Press (January 28, 2008) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-43491-2 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-43491-1 [1]
  10. Stephen Charles Haar Simon Magus: the first gnostic? p231
  11. Dominic J. Unger, John J. Dillon - 1992 St. Irenaeus of Lyons Against the heresies, Vol.1 p3 "the final phrase of the title "knowledge falsely so-called" is found in 1 Timothy 6:20.
  12. A. Harnack, The History of Dogma, 1896-1900, I, p. 227
  13. முழு பாடமும் இங்கே காணலாம்:http://www.newadvent.org/fathers/0103.htm; அல்லது http://www.ccel.org/ccel/schaff/anf01.ix.i.html
  14. http://en.wikipedia.org/wiki/Eusebius_of_Caesarea யூசேபியஸ்
  15. http://en.wikipedia.org/wiki/Tertullian தெர்த்தூல்லியன்
  16. Irenaeus, Adversus Haereses 1.11.1
  17. Irenaeus, Adversus Haereses 1.6.2-3
  18. Irenaeus, Adversus Haereses 1.25
  19. வாலந்தீனுஸ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானக்_கொள்கை&oldid=4040947" இலிருந்து மீள்விக்கப்பட்டது