டிரென்டன் சண்டை
| ||||||||||||||||||||||||||||||
டிரென்டன் சண்டை (Battle of Trenton) என்பது, ஒரு சிறிய, ஆனால் அமெரிக்கப் புரட்சிப் போரில் முக்கியத்துவம் வாய்ந்த சண்டை ஆகும். இது 1776 டிசம்பர் 26 ஆம் தேதி நியூ செர்சியில் உள்ள டிரென்டனில் இடம்பெற்றது. டிரென்டனுக்கு வடக்கில் உள்ள டெலவேர் ஆற்றை முதல்நாள் இரவு ஜார்ஜ் வாசிங்டன் கடந்த பின்னர், அவர் அமெரிக்க விடுதலை இராணுவத்தின் முக்கிய பிரிவை, டிரென்டனில் முகாமிட்டிருந்த "எசிய"ப் (Hessian) படைகளுக்கு எதிராக வழிநடத்திச் சென்றார். குறுகிய நேரச் சண்டைக்குப் பின்னர் ஏறத்தாழ எல்லா எசியப் படைவீரர்களும் பிடிபட்டனர். அமெரிக்கர்களுக்கு புறக்கணிக்கத்தக்க சேதமே ஏற்பட்டது. இது அமெரிக்க விடுதலைப் படை வீரரின் மன உறுதியை அதிகரித்தது.
அமெரிக்க விடுதலைப் படை, முன்னர் நியூயார்க்கில் பல தோல்விகளைச் சந்தித்ததுடன், அங்கிருந்து நியூசெர்சி ஊடாகப் பென்சில்வேனியாவுக்குப் பின்வாங்கவும் நேரிட்டது. படையினர் மத்தியில் மன உறுதி மிகவும் குறைவாக இருந்தது. அந்த ஆண்டை ஒரு சாதகமான நிகழ்வுடன் முடிக்க விரும்பிய, விடுதலைப் படையின் தலைமைத் தளபதியான ஜார்ஜ் வாசிங்டன், 25-26 இரவு டெலவேர் ஆற்றைக் கடந்து எசியப் படை முகாமைச் சுற்றிவளைக்கத் திட்டமிட்டார். ஆற்றைப் பனி மூடியிருந்ததுடன், காலநிலையும் கடுமையாகக் காணப்பட்டது. ஆற்றைக் கடப்பது ஆபத்தானதாக இருந்தது. இரண்டு படைப் பிரிவுகள் ஆற்றைக் கடக்க முடியவில்லை. இதனால், தாக்குதலை நடத்துவதற்கு, திட்டமிட்டதிலும் 3,000 பேர் குறைவாக 2,500 பேர் மட்டுமே ஜார்ஜ் வாசிங்டனுடன் இருந்தனர். படை ஒன்பது மைல்கள் நடந்து டிரென்டனை அடைந்தது. அமெரிக்க விடுகலைப் படையிடம் இருந்து ஆபத்து இல்லை என்று எண்ணி, எசியப் படையினர் காவலைச் சற்றுக் குறைத்திருந்ததுடன், தொலை தூர வெளி அரண்களையோ அல்லது ரோந்துப் படைகளையோ வைத்திருக்கவில்லை. பாதுகாப்புக் குறைவாக இருந்த நேரத்தில் எசியப் படைகளை வாசிங்டனின் படைகள் சுற்றிவளைத்தன. குறுகிய ஆனால் கடுமையான எதிர்த் தாக்குதலைத் தொடர்ந்து பெரும்பாலான எசியப் படையினர் சரணடைந்தனர். 1,500 பேரைக் கொண்டிருந்த முகாமின் மூன்றில் இரண்டு பங்கினர் பிடிபட்டனர். சிலர் மட்டும் அசுன்பிங்க் சிறுகுடாவைக் கடந்து தப்பினர்.
சண்டையில் குறைந்த எண்ணிக்கையே தொடர்புபட்டிருந்தாலும், அமெரிக்க வெற்றி, குடியேற்றங்களில் இருந்த கலகக்காரருக்கு ஊக்கம் கொடுத்தது. ஒரு கிழமைக்கு முன்னர் புரட்சியின் வெற்றி சந்தேகத்துக்கு இடமானதாக இருந்ததுடன், விடுதலைப்படை சீர்குலைவின் விளிம்பில் இருப்பதாகவே தெரிந்தது. ஆனால் இந்த வெற்றி படையினருக்கு ஊக்கம் கொடுத்து மேலும் சேவைபுரியத் தூண்டியதுடன், புதியவர்களையும் படைக்குக் கவர்ந்திழுத்தது.
பின்னணி
தொகு1776 டிசம்பர் தொடக்கத்தில் அமெரிக்கப் படையின் மனவுறுதி மிகவும் கீழான நிலையில் இருந்தது. பிரித்தானியப் படையும், அவர்கள் சார்பான எசியத் துணைப்படையும், அமெரிக்கப் படைகளை நியூயார்க்கிலிருந்து வெளியேற்றியிருந்தன. லோங் தீவுகளில் சேவையில் இருந்த அமெரிக்கப் படையினரில் தொண்ணூறு வீதமானோர் சென்றுவிட்டனர். விடுதலைக்கான முயற்சிகள் தோற்றுவிட்டன எனப் பல விடுதலைப் படையைச் சேர்ந்தோர் படையில் இருந்து விலகலாயினர். விடுதலைப் படைகளின் தலைமைத் தளபதியான வாசிங்டனும், வெற்றி குறித்து ஐயம் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.[6]
அப்போது, நியூசெர்சியில் இருந்த சிறிய நகரான டிரென்டனில் எசியப் படைகளின் நான்கு பிரிவுகள் (1,400 பேர்) இருந்தன. இப்படைகளின் தளபதியாக சொகான் ரால் (Johann Rall) இருந்தார். வாசிங்டனின் படையில் 2,400 வீரர்கள் இருந்தனர். இப்படையின் காலாட்படைப் பிரிவுகள் மேஜர் ஜெனரல்களான நத்தானியேல் கிரீன், ஜோன் சலிவன் ஆகியோரின் தலைமையிலும், கனரக ஆயுதப் படைப் பிரிவு பிரிகேடியர் ஜெனரல் என்றி நாக்சு (Henry Knox) என்பவரின் தலைமையிலும் இருந்தன.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Wood p. 72
- ↑ Fischer p.391-393
- ↑ Fischer p.396
- ↑ Fischer p. 406
- ↑ Fischer p. 254—Casualty numbers vary slightly with the Hessian forces, usually between 21–23 killed, 80–95 wounded and 890–920 captured (including the wounded), but it is generally agreed that the casualties were in this area.
- ↑ Ketchum p. 235
- ↑ Stanhope p. 129
உசாத்துணைகள்
தொகு- Fischer, David Hackett (2006). Washington's Crossing. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-517034-2.
- Ketchum, Richard (1999). The Winter Soldiers: The Battles for Trenton and Princeton (1st Owl books ed.). Holt Paperbacks. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8050-6098-7.
- Stanhope, Phillip Henry (1854). History of England: From the Peace of Utrecht to the Peace of Versailles. GB, Murray.
- Wood, W.J. Henry (2003). Battles of the Revolutionary War. Da Capo Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-306-81329-7.[தொடர்பிழந்த இணைப்பு]