டீமாட் கணக்கு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
டீமாட் கணக்கு (Demat Account) என்பது இந்திய பங்கு வர்த்தக முறையில் ஒருவர் வாங்கும் பங்குகளை கணக்கில் கொள்ள ஏற்படுத்தப்படும் மின்னணு கணக்காகும். இது அறிமுகப்படுத்தப்படும் முன்னர் பங்குச் சான்றிதழ் முறை (share certificates) நடைமுறையில் இருந்தது. ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க முன்வருவோர், முன்பே அதற்கான பதிவு பெற்ற தரகர்களால் உள்ளூர் வங்கிகளில் இடப்பெற்றிருக்கும் விண்ணப்பப் படிவங்களை எடுத்து, அவற்றை முறையாகப் பூர்த்தி செய்து அந்தந்த நிறுவனங்களுக்கு, தேவைப்படும் பணத்தை வங்கியில் செலுத்தி கேட்பு வரைவோலை பெற்று அனுப்பி வைத்தால், அந்நிறுவனங்களின் அன்றைய நிலவரப்படி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பெற்று பங்குச் சான்றிதழ்கள் அனுப்பிவைக்கபெறும்.
இதற்கு கால விரயம் மிகுதியாக ஏற்படுவதோடு மட்டுமின்றி, ஒதுக்கீடு செய்யப்பெற்ற பங்குகளை மீண்டும் பிற ஒருவருக்கு விற்பனை செய்வதிலும் பல இன்னல்கள் இருந்தன. இது போன்ற இன்னும் பல காரணங்களாலும், இன்றைய புதிய அறிவியல் தொலைத்தொடர்பு முறைகள் மாறிவிட்டதாலும், இந்தப் பங்கு வர்த்தகத்தை 'இணையம்' வாயிலாக நடத்தும் ஒரு வழக்கம் நடைமுறைக்கு வந்தது.
இதில் இந்திய மைய அரசின் அமைப்புக்களான nsdl, cdsl ஆகிய அமைப்புக்களில் ஏதேனும் ஒன்றில் ஒரு தரகர் வாயிலாக ஒரு டீமாட் கணக்கைத் துவங்கி விட்டால் இணைய வசதி உள்ள எந்த இடத்திலிருந்தும் நாம் பங்கு வர்த்தகம் மேற்கொள்ள முடியும். நாம் நம் தரகர் வாயிலாகப் பங்குகளை வாங்கும் பொழுது தரகுத் தொகை அவர்களுக்குப் போய்ச்சேர்ந்துவிடும். நாம் வாங்கும் பங்குகள் மேற்காண் அமைப்புக்களில் எந்த அமைப்பில் நாம் கணக்குத் தொடங்கி உள்ளோமோ, அந்த அமைப்பிடம் வைப்பு வைக்கப்பெறும். நாம் மீண்டும் பங்குகளை விற்கும் பொழுது வைப்பு வைக்கப்பெற்ற பங்குகள் நமது கணக்கிலிருந்து திரும்பச் சென்று விடும்.
இந்த டீமாட் கணக்குத் தொடங்க வருமான வரித்துறையிடம் 'நிரந்தரக் கணக்கு எண்' (permanent account number - PAN) ஒன்று கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மேலும் நாம் தொகை செலுத்துவதற்காக வங்கிக் கணக்கு ஒன்றும் வைத்திருத்தல் இன்றியமையாதது.