டெல்லி சலோ
இந்திய மக்களால் "நேதாஜி" என்று அழைக்கப்படும் சுபாசு சந்திரபோசு, இந்திய விடுதலைக்காக அரும்பாடுபட்ட தலைவர்களுள் ஒருவர் ஆவார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க்கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.1943 அக்டோபர் 23ஆம் தேதி "சுதந்திர இந்தியச் சர்க்காரை" வெளிநாட்டில் இருந்து கொண்டே தொடங்கினார். இந்தியாவை மீட்கும் படி, ஜனவரி 26ஆம் தேதி இந்திய தேசிய ராணுவத்திற்கு நேதாஜி கட்டளையிட்டார். "டெல்லி சலோ" என்று நேதாஜி முழக்கமிட்டதும், இந்திய தேசிய ராணுவம் இந்தியாவுக்குள் (மணிப்பூர் சமத்தானத்தில் ) புகுந்தது. அந்தச் சமத்தானத்தின் தென்பகுதியை இந்திய தேசிய இராணுவம் கைப்பற்றியது. இதற்குள் பிரிதானியப் படை பெருமளவில் வந்து, இந்திய தேசிய ராணுவத்தின் படைகளைத் தாக்கின. இரு தரப்பிற்கும் கடும் போர் நடந்தது.