டைகிரிசு ஆறு

துருக்கியிலிருந்து ஊற்றெடுத்து ஈராக் மற்றும் சிரியா வழியே பாயும் ஒரு ஆறு
(டைகிரிசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டைகிரிசு ஆறு (Tigris) பண்டைய நாகரிகப் பகுதியான மெசொப்பொத்தேமியாவை வரையறுக்கும் சிறப்பு வாய்ந்த இரண்டு ஆறுகளில் கிழக்குப் புறமாக உள்ள ஆறு. மற்றது இயூபிரட்டீசு ஆறு ஆகும். தென்கிழக்குத் துருக்கியின் மலைப்பகுதியில் ஊற்றெடுக்கும் இந்த ஆறு தெற்கு நோக்கி ஓடி ஈராக்கினூடாகச் செல்கிறது. இவ்வாற்றின் அரபுப் பெயர் திஜ்லா. இராக்கில் இதனைத் திஜ்லா என்றே அழைக்கின்றனர்.

டைகிரிசு
ஆறு
About 100 km from its source, the Tigris enables rich agriculture outside Diyarbakır, Turkey.
நாடுகள்  துருக்கி,  சிரியா,  ஈராக்
வடிநிலப் பகுதி துருக்கி, சிரியா, ஈராக், ஈரான்
கிளையாறுகள்
 - இடம் பட்மான், காபுர், பெரும் சாப், சிறிய சாப், 'ஆதைம், தியாலா, சிசுரே
 - வலம் வாடி தார்த்தார்
நகரங்கள் தியார்பக்கீர், மோசுல், பாக்தாத்
உற்பத்தியாகும் இடம் அசர் ஏரி
 - உயர்வு 1,150 மீ (3,773 அடி)
 - ஆள்கூறு 38°29′0″N 39°25′0″E / 38.48333°N 39.41667°E / 38.48333; 39.41667
கழிமுகம் Shatt al-Arab
 - அமைவிடம் Al-Qurnah, Basra Governorate, Iraq
நீளம் 1,850 கிமீ (1,150 மைல்)
வடிநிலம் 3,75,000 கிமீ² (1,44,788 ச.மைல்)
Discharge for பாக்தாத்
 - சராசரி
 - மிகக் கூடிய
 - மிகக் குறைந்த
டைகிரிசு - இயுபிரட்டீசு வடிநிலப் பகுதியின் நிலப்படம்
டைகிரிசு - இயுபிரட்டீசு வடிநிலப் பகுதியின் நிலப்படம்
டைகிரிசு - இயுபிரட்டீசு வடிநிலப் பகுதியின் நிலப்படம்
[1][2]

புவியியல்

தொகு

டைகிரிசு ஆறு 1,850 கிமீ நீளமானது. இது கிழக்குத் துருக்கியில், இலாசிக் என்னும் நகரத்தில் இருந்து, 25 கிமீ தென்கிழக்கே டோரசு மலையில் உற்பத்தியாகிறது. இவ்விடம் இயூபிரட்டீசு ஆறு உற்பத்தியாகும் இடத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது. டைகிரிசு ஆற்றின் முதல் 400 கிமீ துருக்கியின் எல்லைகளுக்குள் அடங்குகிறது. துருக்கியின் எல்லைக்கு அப்பால் அடுத்த 44 கிமீ தூரம் இவ்வாறு சிரியா, ஈராக் ஆகிய நாடுகளின் எல்லையாக அமைகிறது. சிரியாவுக்குள் இருக்கும் டைகிரிசு ஆற்றின் பகுதி இந்த 44 கிமீ மட்டுமே. இதன் எஞ்சிய 1,418 கிமீ நீளப் பகுதி முற்றிலுமாக ஈராக்கினுள்ளேயே ஓடுகிறது.

டைகிரிசு ஆறு, பாசுரா நகருக்கு அண்மையில் இயூபிரட்டீசு ஆற்றுடன் இணைகின்றது. இவ்விடத்தில் இருந்து பாரசீகக் குடாவை நோக்கிச் செல்லும் இணைந்த ஆறு சாட்-அல்-அராப் என அழைக்கப்படுகிறது. பிளினியும், வேறு பல பண்டைய வரலாற்றாளர்களும் குறிப்பிட்டுள்ளபடி ஒரு காலத்தில் இயூபிரட்டீசு ஆறு டைகிரிசுக்குப் புறம்பாகத் தனியாகவே கடலில் கலந்ததாகத் தெரிகிறது.

ஈராக்கின் தலைநகரமான பாக்தாத், டைகிரிசு ஆற்றங்கரையிலேயே அமைந்துள்ளது. துறைமுக நகரான பாசுரா (Basra) சாட்-அல்-அராபின் இரு கரைகளிலும் அமைந்துள்ளது. மெசொப்பொத்தேமியா நாகரிகக் காலத்தில் செழித்திருந்த நகரங்கள் பல இந்த ஆற்றின் கரையில் அல்லது அதற்கு அண்மையிலேயே காணப்பட்டன. இந் நகரங்களுக்குத் தேவையான நீரும், இவற்றைத் தாங்குவதற்கான உணவு உற்பத்திக்கான நீர்ப்பாசனத்துக்குத் தேவையான நீரும் இவ்வாற்றிலிருந்து பெறப்பட்டது. நினேவே, டெசிபொன், செலியுசியா என்பன இந்த ஆற்றின் கரையில் அமைந்த முக்கியமான நகரங்கள். லாகாசு என்னும் நகரத்துக்குத் தேவையான பாசன நீர் கிமு 2400 இல் வெட்டப்பட்ட கால்வாய் ஒன்றின் மூலம் டைகிரிசு ஆற்றில் இருந்தே பெறப்பட்டது. ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் பிறந்த நகரான திக்கிரிட்டும் இதே ஆற்றங்கரையிலேயே அமைந்துள்ளது. இந்த நகரத்தின் பெயரும், ஆற்றின் பெயரில் இருந்தே பெறப்பட்டது.

போக்குவரத்து

தொகு

பெரும்பாலும் பாலைவனமாக உள்ள ஒரு நாட்டில், நீண்ட காலமாகவே டைகிரிசு ஒரு முக்கியமான போக்குவரத்துப் பாதையாகச் செயல்பட்டது. ஆழமில்லாத அடிப்பாகத்தைக் கொண்ட கப்பல்கள் பாக்தாத் வரை செல்ல முடியும். மேலும் தட்டைப் படகுகளில் ஆற்றின் திசைக்கு எதிராக மோசுல் வரை செல்லலாம். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆற்றோட்டத்துக்கு எதிராகச் செல்வதற்கு நீராவிப் படகுகளைப் பயன்படுத்தினர். பிரித்தானியர் ஓட்டோமான் மெசொப்பொத்தேமியாவைக் கைப்பற்றியபோது, படையினரின் தேவைகளை வழங்குவதற்கு இவ்வழி பயன்பட்டது.

20 ஆம் நூற்றாண்டில், திட்டமிடப்பட்டு முடிவுறாத பெர்லின்-பாக்தாத் தொடர்வண்டிப் பாதையின் ஒரு பகுதியாகிய பாசுரா-பாக்தாத்-மோசுல் தொடர்வண்டிப் பாதை பயன்பாட்டுக்கு வந்தது. பெருமளவிலான சரக்குப் போக்குவரத்து இதனூடாக இடம்பெறத் தொடங்கியபோது ஆற்றுப் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்ட வணிகம் வீழ்ச்சியடைந்தது.

சொற்பிறப்பு

தொகு

தொடக்கத்தில் சுமேரியர் இந்த ஆற்றை இடிக்னா அல்லது இடிகினா என்று அழைத்தனர். "ஓடும் நீர்" என்னும் பொருள் கொண்ட இட் (இ)கினா என்பதில் இருந்து இப்பெயர் ஏற்பட்டு இருக்கக்கூடும். இது "விரைவான ஆறு" என்று பொருள் தருவதாகக் கொள்ளமுடியும். இதன் அயலில் உள்ள இயூபிரட்டீசு ஆறு மெதுவாகவே ஓடுவதால் அதனுடன் ஒப்பிட்டு இந்த ஆற்றுக்கு அப் பெயர் எற்பட்டிருக்கலாம். இப்பெயரில் இருந்து அக்காடிய மொழிப் பெயரான இடிக்லாட் உருவானது. பழம் பாரசீக மொழியில் இது டிக்ரா ஆனது. இதைப் பின்பற்றிக் கிரேக்க மொழியில் இந்த ஆற்றை டைகிரிஸ் என்றனர். அம்மொழியில் இச் சொல் "புலி"யையும் குறிக்கும்.

குறிப்புகள்

தொகு
  1. Isaev, V.A.; Mikhailova, M.V. (2009). "The hydrology, evolution, and hydrological regime of the mouth area of the Shatt al-Arab River". Water Resources 36 (4): 380–395. doi:10.1134/S0097807809040022. 
  2. Kolars, J.F.; Mitchell, W.A. (1991). The Euphrates River and the Southeast Anatolia Development Project. Carbondale: Southern Illinois University Press. pp. 6–8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8093-1572-6. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைகிரிசு_ஆறு&oldid=3714926" இலிருந்து மீள்விக்கப்பட்டது