டோங்பா எழுத்துக்கள்
டோங்பா எழுத்துக்கள் (Dongba script), தென் சீனாவில் நாக்சி மக்கள் நடுவே புழக்கத்தில் இருந்த படவெழுத்து முறையாகும். நாக்சி மொழியில் இவ்வெழுத்து முறையை "மரப் பதிவுகள்" அல்லது "கற்பதிவுகள்" என்னும் பொருள்படும் சொற்களால் அழைத்தனர். கெபா அசையெழுத்து முறை, இலத்தீன் எழுத்து ஆகியவற்றுடன் இதுவும் நாக்சி மொழியை எழுதுவதற்கான ஒரு எழுத்துமுறையாக இருந்தது. இது ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. உருவங்கள் அற்ற பண்பியற் சொற்களைக் குறிப்பதற்கு வரியுருக்களை (glyphs) ஒலிக்குறிகளாகப் (rebuses) பயன்படுத்த முடியும். இவ்வெழுத்து முறையைப் பெரும்பாலும் ஒரு நினைவுக் குறியீடாகவே இருந்தது. இதனால் இக் குறியீடுகளை நாக்சி மொழியை எழுத்தில் வடிப்பதற்கான ஒரு நேரடியான முறையாகக் கொள்ள முடியாது. வெவ்வேறு நபர்கள் இவ் வரியுருக்களை வெவ்வேறு பொருள் குறிக்கும்படி பயன்படுத்தலாம்.
டோங்பா | |
---|---|
எழுத்து முறை வகை | |
காலக்கட்டம் | கிபி 1000 தொடக்கம் இன்றுவரை |
திசை | Left-to-right |
மொழிகள் | நாக்சி மொழி |
தோற்றமும் வளர்ச்சியும்
தொகுஇதற்கு முற்பட்ட எழுத்து முறைகள் இருந்த சூழலில் உருவானாலும், டோங்பா எழுத்துமுறை ஒரு தனியான பண்டைய எழுத்து முறையாகத் தெரிகிறது. டோங்பா சமயக் கதைகளின்படி போன் சமயத்தை நிறுவிய தொன்பா சென்ராப் என்பவரே இந்த எழுத்துமுறையை உருவாக்கியதாகச் சொல்லப்படுகின்றது. சீன வரலாற்று ஆவணங்களின்படி டோங்பா கிபி ஏழாம் நூற்றாண்டில் தாங் வம்சத் தொடக்க காலத்திலேயே புழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது. 10 ஆம் நூற்றாண்டில் சோங் வம்சக் காலத்தில் டோங்பா நாக்சி மக்களிடையே பரவலாகப் புழங்கிவந்தது.
1949 ஆண்டு சீனாவில் இடம்பெற்ற கம்யூனிசப் புரட்சிக்குப் பின்னர் டோங்பாவின் பயன்பாட்டுக்கு ஆதரவு இருக்கவில்லை. சீனாவின் கலாச்சாரப் புரட்சிக் காலத்தில் பல எழுத்துப் படிகள் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இன்று தப்பியுள்ள டோங்பா எழுத்துப்படிகளில் அரைப்பங்கு சீனாவிலிருந்து, ஐக்கிய அமெரிக்கா, செருமனி, எசுப்பெயின் போன்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டவையாகும்.
1957 ஆம் ஆண்டில் சீன அரசு நாக்சி மொழிக்கு இலத்தீன் எழுத்து முறையைத் தழுவிய ஒலியன் எழுத்துமுறை ஒன்றை உருவாக்கியது. இன்று டோங்கா அழியும் நிலையில் உள்ளது. நாக்சிப் பண்பாட்டைப் பாதுகாக்கும் முயற்சியில் சீன அரசு இன்று டோங்கா அழிவதைத் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.