தஞ்சாவூர் யோகநரசிம்மப்பெருமாள் கோயில்

தஞ்சாவூர் யோகநரசிம்மப்பெருமாள் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் கீழ ராஜ வீதியிலிருந்து கோட்டையின் கிழக்கு வாயிலுக்குச் செல்லும் சாலையில் உள்ள கொண்டிராஜபாளையத்தில் அமைந்துள்ளது.

யோகநரசிம்மப்பெருமாள் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சை மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:யோகநரசிங்கப்பெருமாள்

தேவஸ்தான கோயில்

தொகு

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1] தஞ்சாவூரின் கிழக்கே உள்ள இக்கோயிலை கீழசிங்கப்பெருமாள் கோயில் என்றும், வெண்ணாற்றங்கரையில் உள்ள வீரநரசிங்கப்பெருமாள் கோயிலை மேல நரசிங்கப்பெருமாள் என்றும் அழைப்பர்.[2]

மூலவர்

தொகு

இக்கோயிலின் மூலவராக யோகநரசிம்மப்பெருமாள் உள்ளார். இவர் யோகநரசிம்மர் என்றும், யோகநரசிங்கர் என்றும், இலட்சுமிநரசிம்மர் என்றும் அழைக்கப்படுகிறார். கருவறையில் ஒன்றரை அடி உயரமான பீடத்தில் ஆறரை உயரத்தில் பெருமாள் காணப்படுகிறார்.[2]

அமைப்பு

தொகு

இக்கோயில் பாண்டியர் காலச் சாமந்த நாராயண விண்ணகரம் ஆகும். இக்கோயில் கி.பி.1820இல் திருப்பணி செய்யப்பட்டு சரபோஜி மன்னரால் புதுப்பிக்கப்பட்டது.[3] தெற்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் முகப்பில் சிறிய கோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் கோயிலின் வலப்புறம் கமலவள்ளித் தாயார் சன்னதி உள்ளது. மூலவர் கருவறையின் முன்பாக உள்ள மண்டபத்தின் இடப்புறம் விஸ்வசேனர், வேதாந்த தேசிகர், குலசேகர ஆழ்வார், ராமானுஜ ஜீயர், நம்மாழ்வார் ஆகியோர் உள்ளனர்.

குடமுழுக்கு

தொகு

இக்கோயிலில் 9 சூன் 1992 அன்று குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டு காணப்படுகிறது.

கீழ கோதண்டராமர் கோயில்

தொகு
 
ராமர் கோயில்

இக்கோயிலுக்கு எதிரில் ராமர் கோயில் உள்ளது.கோதண்டராமரை மூலவராகக் கொண்டு அமைந்துள்ள இக்கோயில் மராட்டியர் காலத்தைச் சார்ந்ததாகும்.[3] இக்கோயிலும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு 88 கோயில்களில் ஒன்றாகும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997
  2. 2.0 2.1 அருள்மிகு கீழ சிங்கப்பெருமாள் திருக்கோயில், திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, சென்னை, 2014
  3. 3.0 3.1 தஞ்சாவூர், குடவாயில் பாலசுப்ரமணியன், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997