தண்ட நாயக்கர்கள்


மகாமண்டலேசுவரர் தண்டநாயகர் எனப்படுவார். குறைந்த மதிப்புள்ள காசுகளை இவர் வெளியிடமுடியும். சட்டம்-ஒழுங்கு நிருவாகப் பொறுப்பும் வரிவிதிப்பு-வரித்தள்ளுபடி செய்வதற்கான உரிமையும் இவருக்கு உண்டு. இவர் அரசின் நேரடிப் பிரதிநிதி. பேரரசருக்குத் திறை செலுத்தத் தேவையில்லை. மகா மண்டலேசுவரர்கள் பேரரசரால் இடமாற்றம் செய்யப்படுவர். விஜயநகர அரசர்கள் நாட்டிலுள்ள நிலமனைத்தும் நாடாளும் மன்னர்க்கே உரியது என்ற கொள்கை உடையவர்கள். (இது தமிழகத்தில் ஏற்கனவே நிலவி வந்த தனிநபருக்கு உரிமையுள்ளதும் தத்தம் இரத்த உற்வுகளுக்குள் மட்டுமே பரிமாற்றம் செய்துகொள்ளத் தக்கதுமான காணியாட்சி முறைமைக்கு முற்றிலும் மாறுபட்டது.) விஜயநகர அரசர்கள் தமக்கு நம்பிக்கையான படைத்தலைவர்களுக்கு நிலங்களை வழங்கினர். இவ்விதம் பெற்றவர்களே அமர நாயக்கர்கள். அமர நாயக்கர் என்பதற்கு ஆயிரம் காலட்படைத் தலைவர் என்பது பொருள். இவர்கள் குறிப்பிட்ட ஒரு தொகையினை ஆண்டுதோறும் அரசருக்கு வழங்க வேண்டும் இதுவே திறை. மட்டுமின்றி போர்க்காலங்களில் நாயக்கர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள காலட்படை, குதிரைப்படை , யானைகள் முதலானவற்றை அரசருக்கு அளிக்கவேண்டும். நாயக்கர்கள் இடமாற்றம் செய்யப்படுவதில்லை.பேரரசர் கிருஷ்ண தேவராயர் காலத்திலேயே (கி.பி.1529) மகாமண்டலேசுவரருக்குப் பதிலாக நாயக்கர் முறை தோன்றியது. கருநாடகப் போசள (ஹொய்சள) அரசர்களில் வீரசோமேசுவரன் ஒருவன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1234-1264 என்னும் குறிப்புள்ளது. இவனது மகன் மூன்றாம் நரசிம்மன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1263-1292. கருநாடகத்தில் மைசூரை அடுத்துள்ள இன்றைய குண்ட்லுப்பேட்டைப் பகுதி முன்னாளில் தெற்கணாம்பி என்னும் பெயரில் இருந்தது. அதன் உட்பிரிவான பதிநால்கு நாட்டின் தலைவர்களாக இந்தத் தண்ட நாயக்கர்கள் ஆட்சிசெய்தனர்.

தண்டநாயக்கர்கள் பற்றிய பிற கல்வெட்டுகள் அவிநாசி, கொழுமம், பாப்பினி ஆகிய ஊர்களின் கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

அவிநாசிக் கல்வெட்டு- க.வெ.எண். 189. AR 1909

தொகு

அவிநாசிக்கோயிலில், மாதப்ப தண்டநாயக்கன் தன் பெயரால் இம்மடி இராகுத்தராயன் சந்தி என்னும் ஒரு சந்திப்பூசையையும், இம்மடி இராகுத்தராயன் திருநாள் என்னும் வைகாசி விசாகத் திருநாள் விழாவினையும் ஏற்படுத்தி அவை நடந்தேறக் கரைவழி நாட்டில் இருக்கும் தென்பள்ளி நத்தம் என்னும் சிதகரகண்ட நல்லூரைக் கொடையாக அளிக்கிறான். கரைவழி நாடு என்பது இன்றுள்ள உடுமலை, கொழுமம் பகுதிகளைக்குறிக்கும். தென்பள்ளி நத்தம் என்னும் இயற்பெயர் அமைந்த ஓர் ஊரைத் தன் பெயரால் சிதகரகண்டநல்லூர் எனப்பெயரிட்டுக் கொடையாக அளிக்கிறான். மேலும், அவிநாசியில் 2000 பணம் இட்டு புக்கொளியூர்க் குளம் வெடடுவித்து, குளத்தால் வந்த வருவாயை மேற்படி சந்திக்கும் திருநாளுக்கும் செலவிடுகிறான். அவிநாசியில் தாமரைக்குளம், சங்கமன் குளம் ஆகிய இரு குளங்கள் இன்றும் உண்டு. அவற்றில் சங்கமன் குளம் நாயக்கர் காலத்தில் வெட்டப்பட்டது என வேறொரு கல்வெட்டின்மூலம் அறியப்படுகிறது. எனவே, தாமரைக்குளம் என்பது மாதவப்பெருமாள் வெட்டுவித்த புக்கொளியூர்க் குளம் என்பதில் ஐயமில்லை. அதற்கேற்ப இக்குளத்துக்கருகில் இருக்கும் மடம் ஒன்று புக்கொளியூர் மடம் என்று இன்றுவரை அழைக்கப்பட்டுவருவதைச் சான்றாகக் கருதலாம். கல்வெட்டின் காலம் கி.பி. 1322. இக்கல்வெட்டில், மூன்றாம் வீரவல்லாளனின் மேலாண்மையின்கீழ் மாதப்ப தண்டநாயக்கன் இருப்பது புலப்படுகிறது. கல்வெட்டின் தொடக்கப்பகுதியிலேயே வீரவல்லாளன் பெயர் குறிப்பிடப்பெறுகிறது. =====கல்வெட்டின் பாடம்=====: ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீமந் ப்ரதாபச்சக்ரவத்தி போசள புஜபல வீரவல்லாள தேவற்கு செல்லாநின்ற சகரயாண்டு ஆயிரத்திருனூற்றுநாலில் ஸ்வஸ்திமந் மடிகோலய குல கமள மார்த்தாண்ட இம்மடி இராகுத்தராய சிதகரகண்ட ஸ்வஸ்திஸ்ரீமனு மஹாப்ரதாந இம்மடி இராகுத்தராயன் பெருமாள் தண்ணாயக்கர் குமாரன் மாதப்ப தண்ணாயக்கன் திருப்புக்கொளியூர் அவினாசியாளுடைய நாயனாற்கு நாம் விட்ட இம்மடி இராகுத்தராயன் சந்தி உதித்து பன்னிரண்டாநாழிகையில் சந்தி ஒன்றுக்கு கோயிற் காலால் பதக்கு அரிசி அமுதுபடி தனால் வந்த சாத்துப்படி பூச்சுப்படி பல விஞ்சனமும் கொண்டு ஸமாராதனை பண்ணவும் இம்மடி இரா(குத்த)ராயன் திருநாள் வைகாசி விசாகம் தித்தமாக் திருநாள் எழுந்தருளிப் ப்போதவும் இதுக்கு இன்னாயனார் தேவதானமா(ன நில)த்தில் நத்தமாய்க்கித் தென்பளி நத்தமான சிதகரகண்டநல்லூ(ர்) நாம் நாயனார்க்கு விட்டு குடியேற்றிந இவ்வூர்இவ்வூரில் முதலுள்ளதும் நாம் புக்கொளியூர்(க்)குளம் வெட்ட இரண்டாயிரம் பணம் இட்டுவெட்டிவிக்கையில்

அவிநாசிக் கல்வெட்டு- க.வெ.எண். 793/2003. (கோவை மாவட்டக் கல்வெட்டுகள்)

தொகு

மாதப்ப தண்ணாயக்கரின் இளைய மகன் சிங்கய தண்ணாயக்கர் அவிநாசிக் கோயிலில் தன் தந்தை ஏற்படுத்திய சிதகரகண்டன் சந்திக்கும், திருநாளுக்கும், நித்த நிமந்தங்களுக்கும் கரைவழி நாட்டிலிருக்கும் ஓர் ஊரை இறையிலி தேவதானமாக அளிக்கிறான். கல்வெட்டின் காலம் தெரியவில்லை; போசள அரசனின் மேலாண்மைக் குறிப்பும் இல்லை.

கல்வெட்டுப்பாடம்
தொகு

ஸ்வஸ்திஸ்ரீ மகபிரதானி இம்மடி (இராகு)த்தராயன் சிங்கய தண்ணாயக்கர் அவிநாசி ஆளுடையார் கோயில் தானத்தார்க்கு நம் ஓலை குடுத்த தன்மமாவது நாயனார் அவிநாசி யாளுடையார்க்கு சிதகரகண்டன் சந்திக்கும் (சி)தக(ர)கண்டன் திருநாளுக்கும் நித்த நிமந்தங்க(ளுக்கு)ம் உடலாக கரைவழி நாட்டு இறையிலி (தே)வதானமாக குடுத்தோம் இவ்வூர்

கொழுமம் கல்வெட்டு க.வெ.எண். 159. AR 1909
தொகு

கொழுமம் சோழீசுவரர் கோயிலில் உள்ள இக்கல்வெட்டு, மாதப்ப தண்டநாயக்கனின் மகன் கேத்தய தண்டநாயக்கன் கரைவழி நாட்டின் ஒட்டைக்குமிண்டான் என்னும் ஊரில் உள்ள நிலத்தைப் பிராமணர்க்குக் கொடைகொடுத்த செய்தியைக் கூறுகிறது. இவ்வூரின் இயற்பெயர் தென்மூர். தண்டநாயக்கர்களின் ஒரு விருதுப்பெயரான ஒட்டைக்குமிண்டான் என்னும் பெயரால் வழங்கியது. கல்வெட்டின் காலம் கி.பி. 1343.

கல்வெட்டுப்பாடம்
தொகு

சுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் 1265 மேல் செல்லாநின்ற ஸுபாநு சம்வத்ஸரத்து ஸ்வஸ்திஸ்ரீ சிதகரகண்ட முடீகுலய கமலமார்த்தாண்ட நீலகிரி சாதாரணன் ஸ்ரீமனு மஹாப்ரதாந மாதப்ப தெண்ணாஆயக்கர் கேஷ்ட குமாரரான ஸ்ரீமனு மஹாப்ரதானந் கேத்தய யக்கற்கு விஜயாத்புதயங்களாகவும் நம்முடைய சகலாபீஷ்ட ப்ராமணற்க்கு பத்ரசாஸந

கொழுமம் கல்வெட்டு- க.வெ.எண். 158. AR 1909

தொகு

கொழுமம் சோழீசுவரர் கோயிலில் உள்ள இக்கல்வெட்டு, மாதப்ப தண்டநாயக்கனின் மகன் கேத்தய தண்டநாயக்கன், மாதவச் சதுர்வேதிமங்கலம், தென்னவதரையச் சதுர்வேதிமங்கலம் ஆகிய இரு சபையினர்க்குக் கொடையாக நிலக்கொடை அளிக்கிறான். கொடை தன் நலத்துக்கும், தன் தம்பியான சிங்கயனின் வெற்றிக்கும் உயர்வுக்கும் வேண்டி அளிக்கப்படுகிறது. கொடை நிலம் கரைவழி நாட்டின் அகரம்புத்தூரைச் சேர்ந்தது. கல்வெட்டின் காலம் கி.பி. 1345. கல்வெட்டில் போசள அரசரின் மேலாண்மைக் குறிப்பில்லை.

கல்வெட்டுப்பாடம்
தொகு

1ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் 1267 மேல் செல்லாநின்ற பார்த்திவ சம்வத்ஸரத்து மாதப்பதண்டநாயக்கர் ஜ்யேஷ்டகுமாரன் ஸ்ரீமனு மஹாப்ரதானந் கேத்தய தண்டநாயக்கன் னம்முடைய சகலாபிஷ்டஸித்யர்த்தம் மாதவச் சதுர்வேதி மங்கலத்து மஹாஜநங்களுக்கும் தென்னவதரைய சதுர்வேதிமங்கலத்து மஹா ஜநங்களுக்கும் பத்ரசாஸநங் குடுத்தபடி கரைவழிநாட்டு ஒட்டைக்குமிண்டானில்

பாப்பினிக் கல்வெட்டு- க.வெ.எண். 293/2004. (ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்)

தொகு

காங்கயம் வட்டத்திலுள்ள பாப்பினியில் இருக்கு ஒரு தனிக்கல்லில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, காங்கய நாட்டார் நீலகிரி சாதாரன் கோடையில் (இருக்கும்) நாயனார் மாதவப்பெருமாளுக்குப் பாப்பினி ஊரைக் கொடையாக அளிக்கிறார்கள். பாப்பினி ஊரின் பழம்பெயர் கொங்கரமாரி மாதவநல்லூர். கொங்கரமாரி என்பது தன்டணாயக்கர்களின் விருதுப்பெயர்களுள் ஒன்று என அறிகிறோம். இக்கல்வெட்டில் டணாயக்கன் கோட்டை பற்றிய நேரடிக்குறிப்பு காணப்படுகிறது. டணாயக்கன் கோட்டையின் வேறொரு பெயர் நீலகிரி சாதாரன் கோட்டை. கல்வெட்டில் அரசர் குறிப்பில்லை. காலக்குறிப்புமில்லை.

கல்வெட்டின் பாடம்
தொகு

ஸ்வஸ்திஸ்ரீ நீலகிரி சாதாரன் கோட்டையில் நாயனார் ஸ்ரீ மாதவப்பெருமாளுக்குக் காங்கய னாட்டார் திருவிடையாட்டமாக விட்ட பாற்பனியான கொங்கரமாரி மாதவ நல்லூர்

முடிவுரை
தொகு

டணாயக்கன் கோட்டை, வரலாற்று முதன்மை பெற்ற ஒன்று. போசளர் (ஹொய்சளர்) காலத்தில் கட்டப்பட்ட இக்கோட்டையும், கோட்டைப்பகுதியில் இருந்த சோமேசுவரர் கோயிலும் கி.பி. 1310 ஆண்டளவில் முகம்மதியப் படைத்தாக்குதலுக்கு உள்ளாயின என்றும், முகமதியத் தாகுதல்களிலிருந்து மீண்ட போசளர் கோட்டையையும், கோயிலையும் புதுப்பித்தனர் என்றும் புதுப்பித்தல் பணியை மேற்கொண்டவன் பல்லய தண்டநாயக்கன் என்றும் கூறப்படுறது. இவனுக்கு வலிய தண்டநாயக்கன் என்னும் பெயரும் உண்டு. தொல்லியல் துறையின் 1920-ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையில், கி.பி. 1310 ஆண்டளவில் முகம்மதியரின் தொடர்த் தாக்குதல்களால் கருநாடகத்தில் போசள அரசு சிதறுண்டபோது மூன்றாம் வீர வல்லாளன் (1292-1342), தமிழகத்தில் கொங்குமண்டலத்தின் ஒருமூலையில் தன் மேலாண்மையை நிலைநிறுத்தினான் என்னும் குறிப்பு உள்ளது. இவ்விரு தரவுகளையும் கொண்டு, டணாயக்கன் கோட்டை கி.பி. 1310 ஆண்டளவிலேயே இருந்துள்ளது என்று கருத வாய்ப்புள்ளது. எனில், கோட்டை எழுநூறு ஆண்டுகள் பழமைகொண்டது எனலாம்.



மாதப்ப தண்டநாயக்கன் மூன்றாம் வீரவல்லாளன் காலத்தில் டணாயக்கன் கோட்டையை நிறுவினான். மூன்றாம் நரசிம்மன் (கி.பி. 1263-1292) தன் ஆட்சிக்காலத்தில் தன் தந்தை பெயரால் சோமேசுவரன் கோவிலைக்கட்டினான் என்று வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. பவானிசாகர் அணைப்பகுதியில் மூழ்கிப்போன கோயில்களுள் இக்கோயிலும் ஒன்று எனக்கருதலாம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்ட_நாயக்கர்கள்&oldid=3412790" இலிருந்து மீள்விக்கப்பட்டது