ததீசி புராணம்

ததீசி புராணம் திருமலைநாதர் என்பவரால் 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழில் எழுதப்பட்ட நூல். ததீசி முனிவரின் வரலாற்றைக் கூறுவது. வடமொழி சிவபுராணத்தின் பகுதியாகத் ததீசி புராணம் வருகிறது.

ததீசி புராணம் 48 விருத்தங்களைப் கொண்ட நூல். இந்தப் புராணத்தின் தொடக்கப் பாடல் சிவபெருமான் சிங்க உருவம் தாங்கிய அரியைக் கொன்று அதன் தோலைப் போர்த்திக்கொண்ட செய்தியைக் கூறியபின் இந்தக் கதையைச் சொல்வதாகக் குறிப்பிடுகிறது.[1]

  • இந்த நூலில் வரும் பாடல் ஒன்று. எடுத்துக்காட்டு
நீசர் ஆயினும் மறையவர் ஆயினும் நீங்காப்
பாசர் ஆயினும் பவத்துவக்கு அளித்திடும் பாச
நாசர் ஆயினும் அடியவர் நாசம் ஒன்று இல்லாத்
தேசர் ஆகுவர் என்று முன் செப்பினான் பரமன்.

ததீசி கதை

தொகு
நான்முகனின் தும்மலில் தோன்றிய குதன் வச்சிராயுதம் பெற்றுப் பூமியை ஆண்டுவந்தான். அதர்வ மகரிசி மகன் ததீசியுடன் நட்பு கொண்டிருந்தான். ஒருநாள் உலகில் முதன்மையானவர் யார் என்னும் கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்தது. தேவர்கள் ததீசி முனிவர் என்றனர். குதன் மன்னனே என்றான். சண்டை முற்றியது. குதன் ததீசியை நன்றாகப் புடைத்தான். ததீசி சுக்கிரனிடம் மிருத சஞ்சீவி பெற்றார். சிவனை நோக்கித் தவம் செய்து வச்சிர யாக்கை பெற்றார். குதன் தனக்கு வச்சிர யாக்கை நல்கும்படித் திருமாலை வேண்டினான். திருமால் ததீசியைத் தன் சக்கரத்தால் தாக்கினார். சக்கரம் சாம்பலாயிற்று. இப்போது திருமால் பக்கம் தேவர்களும் சேர்ந்துகொண்டனர். எனினும் தோற்றனர். ததீசி திருமால் மார்பில் உதைத்தார். திருமால் தன் வடுப்பட்ட மார்பில் திருமகளை வைத்து மறைத்துக்கொண்டார். – இது கதை.

கருவிநூல்

தொகு

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. மன்று நாயகன் சரபமாய் மானிட அரியைக்
    கொன்று தோல்முகம் புனைந்தமை கூறினாம்; இப்பால்
    துன்று வண்டலின் துளபமாம் ஆழியைத் தொலைத்து
    வென்றி கொண்டிடு ததீசிதன் மேன்மையை உரைப்பாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ததீசி_புராணம்&oldid=1791717" இலிருந்து மீள்விக்கப்பட்டது