தத்துவ விளக்கம் (சரணாலயர்)

தத்துவ விளக்கம் என்ற சிறு நூல் சித்தாந்த மரபுகளைக் கூறுவதாகும். இந்நூலை இயற்றியவர் சம்பந்த சரணாலயர் என்பவர் ஆவார்.

நூலமைப்பு

தொகு

இந்நூல் 51 கட்டளைக் கலித்துறைகள் கொண்டது. அந்தாதித் தொடையாய் மண்டலித்து வருவது. இந்நூலானது உண்மை விளக்கம் போலத் தத்துவங்களின் தோற்ற ஒடுக்கங்களைத் தெளிவாகக் கூறுகிறது.

நூலாசிரியர் வரலாறு

தொகு

சிற்றம்பல நாடிகள் மாணவரான சம்பந்த முனிவரின் சீடருள் ஒருவர் சரணாலயர். இவர் தேவாரம் பாடிய சம்பந்தரையே குருவாகக் கருதியமையால் சம்பந்த சரணாலயர் என்று பெயர் பெற்றார். இந்த மரபையொட்டியே சம்பந்த முனிவரும் தம்மிடம் சீடராய் உபதேசம் பெற்ற முதல் மாணாக்கருக்குச் சம்பந்த சரணாலயர் என்று பெயரிட்டார். இவர் எழுதிய தத்துவ விளக்க நூலில் ஒரு பாடலில், தத்துவ விளக்கம் நவின்ற நாவன் சம்பந்த சரணாலயன் என்ற தொடர் வருவதால் இந்நூலை இவரே பாடினார் என்று அறியமுடிகிறது.

நூல் சிறப்புகள்

தொகு

15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த களந்தை ஞானப்பிரகாசர் என்பவர் தாம் எழுதிய சந்தான அகவல் என்ற நூலில் தத்துவ விளக்கப் பாடலின் சிறப்பைக் கூறியுள்ளார். அப்பாடல் நூலின் 49 ஆவது பாடலாக இடம்பெற்றுள்ளது. இந்நூலை மதுரைச் சிவப்பிரகாசர், வெள்ளியம்பலவாணத் தம்பிரான், நிரம்ப அழகிய தேசிகர் முதலியோர் மேற்கோளாகக் காட்டியுள்ளார்கள்.

பதிப்புகள்

தொகு

இந்நூலை காசிவாசி செந்திநாதையர் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். செந்தமிழ்ச் செல்வி இதழில் 23 பாடல்கள் வெளியானது. சித்தாந்தம் இதழில் நூலின் சில பாடல்கள் மட்டும் மேற்கோள் குறிப்புகளோடு வெளியானது.

மேற்கோள்கள்

தொகு
  • மு.அருணாசலம், " தமிழ் இலக்கிய வரலாறு பதினான்காம் நூற்றாண்டு" தி பார்க்கர் 2004.