தந்துறைப் போர்
தந்துறைப் போர் என்பது, சிங்கள - போர்த்துக்கேயப் போரின் ஒரு பகுதியாக 1594 இல் இடம்பெற்ற தொடர்ச் சண்டைகளைக் குறிக்கும். இது போர்த்துக்கேய விரிவாக்கத்துக்கான தாயக மக்களின் எதிர்ப்பு நடவடிக்கையில் முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ முழுமையாகக் கண்டி இராச்சியம் போர்த்துக்கேயர் கைக்குச் செல்லவிருந்த வேளையில் போர்த்துக்கேயர் கடும் தோல்வியைச் சந்தித்தனர். இலங்கையில் போர்த்துக்கேய படையொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.[1] 20,000 வீரர்களைக் கொண்ட போர்த்துக்கேயப் படையினர் 5 யூலை 1594 இல் ஆளுனன் பெட்ரோ லோப்பசு டி சூசா தலைமையில் கண்டி இராச்சியத்துள் நுழைந்தனர். மூன்று மாதங்களுக்குப் பின்னர், கண்டிப் படையினரின் கரந்துறை தாக்குதல்களினாலும், பெருமளவினர் போர்த்துக்கேயப் படைகளிலிருந்து விலகியதனாலும் போர்த்துக்கேயப் படை அளவில் சுருங்கிவிட்டது. எஞ்சியிருந்தோர் விமலதர்மசூரியனின் கீழான கண்டியரினால் தந்துறையில் வைத்து முற்றாக அழிக்கப்பட்டனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து கண்டி இராச்சியம் ஒரு முக்கியமான படை வல்லமை கொண்ட நாடாக உருவானது. இது அந்த இராச்சியம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆகியோரின் காலங்களூடாக 1815 வரை இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தனது சுதந்திரத்தைப் பாதுகாக்க உதவியது.[2]