தன்முனைப்பு

சுயவிருப்பங்களை முனைப்புடன் காத்தல்

தன்முனைப்பு (Ego) அல்லது அகம் என்பதை அறிவதற்கும் விளக்குவதற்கும் பண்டைக்காலமுதல் முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. அனுபவத்துக்குக் களனாகவுள்ள தனிப்பட்ட அருவமான பொருள் ஒன்றைக் குறிப்பதற்கு ஆன்மா, அகம், தான் என்னும் சொற்களைத் தத்துவ ஞானிகள் வழங்கிவந்துளர். இந்தியாவில் பண்டைக் காலத்திலிருந்த சாருவாகர்கள் மனமானது நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கு பூதங்களாலா ஒரு சிறப்பான சேர்க்கைப் பொருள் என்றும், ஆன்மா என்று உடம்புக்குப் புறம்பாக எதுவுமில்லை என்றும் சொன்னார்கள். அதன்பின் கி. மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்த புத்தர், எதுவும் நிலையற்றது, நித்தியமில்லாதது என்று போதித்தார். மகாயான பௌத்தசமயவகை மனமும் ஆன்மாவும் கருத்துத் தொடரே என்று கூறிற்று. ஆன்மா என்று ஒன்றில்லை என்றும், மனம் என்பது வேறுவேறான நுகர்ச்சிக் கூட்டமே என்றும் ஹியூம் என்னும் பிரித்தானிய தத்துவ ஞானி 1740-ல் எழுதினார்.[1].

தோற்றம்

தொகு

ஆன்மாவின் தத்துவ விளக்கத்தை விட்டுவிட்டு உளவியல் விளக்கத்தை முதன் முதலாகக் கூறியவர் 1781 லிருந்த கான்ட் என்னும் ஜெர்மன் தத்துவ ஞானியாவார். அவர் புலனுடன் தொடர்புற்ற அகம் (Empirical Ego) என்றும், புலனுடன் தொடர் பில்லா அகம் (Pure Ego) என்றும் வேறுபடுத்திக் கூறினார். அதாவது நான் என்பது வேறு, என்னை என்பது வேறு என்றும், அறிபவனும், அடைபவனுமான அகம் வேறு ; அறியப்படுவதும் அடையப்படுவதுமான அகம் வேறு என்றும் கூறினார்.

வில்லியம் ஜேம்ஸ் 1890-ல் உளவியல் முறையில் ஆளுமை (Personality) விளக்கம் செய்ய வழி கோலினர். புலனுடன் தொடர்புடைய அகம் என்பதில் மனிதனுடையது என்று கூறும் அனைத்தும், அதாவது அவனுடைய உடலும் உள்ளத்தின் சக்திகளுமட்டுமன்றி அவனுடைய உடை உறையுள் போன்றனவுங்கூட அடங்கும் என்று கூறினார். அறிதல் என்பது நடைபெறுகிறது என்று மட்டும் கூறினால் போதும், அறியும் அகம் என்று ஒன்று இருப்பதாகக் கூறவேண்டிய அவசியமில்லை என்பதாகவும் அவர் கூறினார்.

உளவியலாளர்

தொகு

தற்கால உளவியலார் அகம் என்னும் பொருளைப் பலவாறு ஆராய்கின்றனர். முன்னாலிருந்த சோதனை உளவியலார் புலக்கொள்கையாளருடைய (Empiricist) கருத்தை ஏற்றுக்கொண்டு, அகம் என்னும் பொதுமைக் கருத்தை (Concept) ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மனக்கோளாறுகள் பற்றிய ஆராய்ச்சி. அந்தப் பொதுமைக் கருத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்கிறது. ஒன்று சேர்ந்த நனவு (Co-consciousness) என்பது பற்றியும், பன்மை ஆளுமை (Multiple Personality) என்பது பற்றியும் ஆராய்ந்த மார்ட்டன் பிரின்ஸ், வால்ட்டர் பிராங்க்லின் பிரின்ஸ் ஆகிய இருவரும் அவ்வாறே முடிவு செய்துள்ளனர்.[2] கனவுகள் அகத்துடன் முரணும் ஆசைகளைக் கூறுவதாக பிராய்டு (Freud) கண்டார்.[3] ஆன்மா என்பது தொடக்கத்தில் கிடையாது என்றும், உடலில் ஏதோ குறிக்கோளில்லாத இழுவிசை (Tension) ஒன்றே இருக்கிறது என்றும் கூறுகிறார். அந்த ஒன்றையே அவர் அது என்றும், இத் என்றும் கூறுகிறார். இந்த இத் சக்தியினின்றே அகம் என்பது உண்டாகின்றது. குழந்தை இப்பொழுது தன்னைப் பற்றிய அறிவும் பிறரைப் பற்றிய அறிவும் பெறுகின்றது. முதல் ஆண்டின் இறுதியில் அச்சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்துகொள்கின்றது. அகமானது தாய் தந்தையுடன் ஒன்றுவதன் மூலம் வளர்ச்சி அடைகிறது. ஆனால் பெற்றோர் கட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். இதன் காரணமாகவே அகம் இரண்டு விதமாகப் பிரிகின்றது. ஒன்று வாழ்க்கை நிகழ்ச்சிகளை நடத்துகிறது; மற்றொன்று பெற்றோர் கட்டுப்பாட்டை மனத்தில் பதியவைத்து மனச்சான்று என்பதை உண்டாக்கி, இறுதியில் அதீத அகமாக ஆகிவிடுகிறது. இவ்வாறு இத், அகம், அதீத அகம் என மூன்று பிரிவுகள் மனத்தில் காணப்படுகின்றன. இத் என்பது நனவிலி மனமாகும்.

மன ஆராயச்சி

தொகு

மன வளர்ச்சிபற்றி ஆராய்வதற்காகப் பியாகெ (Piaget) சிசுக்களையும் குழந்தைகளையும் பயன்படுத்தினர். சிசுவுக்குத் தன்னைப்பற்றிக்கூடத் தெரிவதில்லை. அதனிடம் தொடக்கத்தில் இருப்பது அகமும் சூழ்நிலையும் சேர்ந்த ஒரு முழுப் பிண்டமேயாம், அகமானது பின்னர்த் தனியே பிரிந்து வளரத் தொடங்குகிறது. பிரிந்துவிடுவதற்குப் பயன்படும் தலையாய ஏற்பாடுகளுள் ஒன்று குழந்தைக்குப் பெயரிடுதலாகும். அதுபோலவே குடும்பத்திலுள்ள உறவும் குழந்தையின் செயலும் தன்னைத்தானே அறியும்படி உதவுகிறது.

அமெரிக்க அறிஞர் கால்கின்ஸ் (Calkins) என்பவரும் ஜெர்மன் அறிஞர் ஸ்டெர்ன் (Stern) என்பவரும் உளவியல் ஆராய்ச்சிகளை ஆளுமைக் கருத்துடன் நடத்தவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அருவமான ஆன்மா என்று ஒன்று உளவியலின் அடி நிலையாக இருப்பதாக ஏற்றுக்கொள்ளாவிடில் உளவியல் விளங்கவே செய்யாது என்று கால்கின்ஸ் கூறினார். உண்மையான தனித்தன்மை (Individuality)யைப் பிரிப்பதோ, இல்லாமல் செய்வதோ தவறு என்று ஸ்டெர்ன் கூறினார். ஆள் (Person) என்பது எங்கும் பரவி நிற்கும் ஓர் ஒருமை (Unity) ஆகும். அது தன்னிறைவுள்ளது (Self-sufficient). அதன் குறிக்கோள் தற்பாதுகாப்பும் தன் வளர்ச்சியுமேயாம். இவ்வாறு கூறுவதெல்லாம் உண்மையை அடையவொட்டாது என்று ஹல் போன்ற அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இயல்பூக்கங்களும் உள்ளக் கிளர்ச்சிகளும் உள்ளப் போக்கும் சேர்ந்ததே உள்ளம் என்று மக்டூகல் கருதுகிறார். இவைதாம் மனிதனுடைய தொடக்கச் சொத்து ; அவன் வளர வளர, ஆளுமை ஒன்று உண்டாகுமாறு அவன் பற்றுக்களை உண்டாக்குகிறான். தன் மதிப்பு என்னும் பற்றே ஆளுமை முழுவதையும் ஒன்றாக இணைக்கின்றது. அடக்கல் (Repression) போன்றவற்றின் தவறான பயன்களைத் தடுக்கிறது. அகம் என்பது மேலே உந்தும் ஒரு சக்தி என்று காப்கா (Koffka) கூறுகிறார். நம்முடைய நுகர்ச்சிக்களத்தில் அகம் என்பது ஒரே ஒரு தனிப்பட்ட மண்டலம் என்றும், நம்முடைய நடத்தையில் பெரும்பாகம் அகத்துடன் தொடர்பு இல்லாதது என்றும், காட்சி செயல் உள்ளக்கிளர்ச்சி ஆகியவை அகத்துடன் தொடர் பின்றியே நடைபெறக் கூடுமென்றும் அவர் கூறுகிறார்.

மனச் சோதனைகள்

தொகு

லெவின் என்னும் மற்றொரு உளவியலார் ஆளுமையின் அமைப்பை ஆராய்வதற்காகப் பல சோதனைகள் வகுத்தார். அவரும் காப்கா போலவே அகத்தை ஆளில் ஓர் உபமண்டலமாகவே கருதுகிறார். ஆயினும் அவர் அதை நடு உபமண்டலமாகக் கொள்கிறார். நம்முடைய நடத்தை முழுவதும் அகத் தொடர்புடையதன்று. நாம் செய்யும் செயல்களிலும் நுகரும் நுகர்ச்சிகளிலும் பல, புத்தரும் ஓவியூமும் கூறியதுபோல் அகநுகர்ச்சியுடன் தொடர்புடையன அல்ல. ஆயினும் சில செயல்கள் அகத்தொடர்பு உடையன என்பதாகச் சோதனைச் சான்று காட்டுகிறது. உயர்நோக்கு நிலை (Aspiration Level) பற்றிய சோதனைகளைச் சான்றாகக் கூறலாம். செய்து முடிக்கக் கடினமாகவுள்ள செயல்களைச் செய்யுமாறு சிலரிடம் சொல்லப்பட்டது. சிலர் நிறைவாகவும் சிலர் குறைவாகவும் செய்து முடித்தனர். செய்து முடிக்க முடியும் என்ற எண்ணத்தின் அளவே செய்துமுடித்த அளவும் இருந்தது. தன்மதிப்பையோ பிறர் மதிப்பையோ எண்ணிச் செய்பவர் அவ்விரண்டில் எதையும் எண்ணாது செய்பவரைவிட மூன்று முதல் ஏழு மடங்கு மிகுதியாகச் செய்து முடிக்கக் கூடியவர்களாக இருந்தனர்.

ஆல்போர்ட், ஷெரிப், கான்ட்ரில் ஆகியவர்கள் அகம்தொடர்புடைமை (Ego-involvement) என்னும் பொதுமைக் கருத்தை அண்மையில் சோதனைச்சான்றை அடிநிலையாக வைத்து ஆராய்ந்துளர். அகம்-தொடர்புடைமை என்பது ஆன்மா முழுவதும் கலந்து கொள்ளும் நிலைமையாகும், ஆன்மா நிர்மாணப்போனாகவும், பதவி தேடுபவனாகவும், சமூக ஆளாகவும் வேலை செய்யும். அகம்-தொடர்புடைமையில்லாத பொழுது, ஆள் ஊக்கமற்ற தன்மையில் வேலை செய்கிறான். அகம்-தொடர்புடைமை இருக்கும்போதோ அவன் மிகுந்த ஊக்கத்துடன் வேலை செய்கிறான்.

கிளைன், ஷோன்பெல்டு ஆகிய இருவரும் சிலர்க்கு ஆறு சோதனைகள் தந்தனர். அந்தச் சோதனைகள் சாதாரணமானவை. அறிவை அதிகம் பயன்படுத்த வேண்டிய தேவையில்லாதவை. அவற்றை அவர்கள் செய்து முடித்தபின், தொடங்கும்போது அவர்களிடமிருந்த நம்பிக்கைகளின் அளவையும், செய்தபின்னர் அவர்கள் செய்த வேலையின் அளவையும் குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதன்பின் அறிவைப் பயன்படுத்திச் செய்ய வேண்டிய வேறு ஆறு சோதனைகளைத் தந்து, இவற்றைச் செய்து முடிப்பர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "ego - Origin and meaning of ego by Online Etymology Dictionary". Etymonline.com. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2019.
  2. Schacter, Gilbert, Wegner, Daniel (2011). Psychology (1. publ., 3. print. ed.). Cambridge: WorthPublishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-429-24107-6.
  3. Sigmund Freud (1933). p. 110
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்முனைப்பு&oldid=3925190" இலிருந்து மீள்விக்கப்பட்டது