தப்பிப்பிழைத்தல் திறன்கள்

தப்பிப்பிழைத்தல் திறன்கள் (Survival skills)என்பவை ஆபத்தான நிலைமையை ஒருவர் சமாளிக்கப் பயன்படும் திறன்கள் ஆகும். போர், பயங்கரவாத தாக்குதல்கள், இயற்கை அழிவுகள், விபத்துக்கள் என பல காரணங்கள் ஒருவரை அல்லது ஒரு குழுவை ஆபத்தான நிலைமைக்கு இட்டுச் செல்லலாம். தம்மைப் பாதுகாத்துக் கொண்டு, வாழ் ஆதாரங்களான நீர், உணவு, உறையுள், மருந்து, நெருப்பு ஆகியவற்றைப் பெறுவதை தப்பிப்பிழைத்தல் திறன்கள் நோக்காக கொண்டவை.இந்த திறமைகள் பெரும்பாலும் பண்டைய மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பயன்படுத்திய அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் திறன்களாகவே இருக்கின்றன. நடை பயணம், மூட்டையை முதுகுப்புறத்தில் சுமத்தல், குதிரையேறுதல், மீன்பிடித்தல், வேட்டையாடுதல் இது பொன்ற திறமைகளைக் கையாளுவது வனப்பகுதிகளில் அவசரகால நிலைமையில் வாழ்வுக்குத் தேவையான திறன்கள் ஆகும்.

விண்வெளி_வீரர்கள்-உயிர்பிழைப்புத்_திறமைகள்_பயிற்சி

1963 - ல் பனாமா கால்வாய் அருகே உள்ள அல்ப்ரூக் விமானப்படைத் தளத்தில் உயிர்பிழைப்புத் திறமைகள் பற்றி விண்வெளி வீரர்கள் பயிற்சி பெறுகிறார்கள் . இடமிருந்து வலமாக ஒரு அடையாளம் தெரியாத பயிற்சியாளர், நீல் ஆம்ஸ்ட்ராங், ஜான் எச்க்ளென், ஜூனியர். எல் கார்டன் கூப்பர் மற்றும் பீட் கான்ராட் இருக்கின்றனர்.விண்கல புறப்பாடு கைவிடப்படும் போதும் அல்லது தவறாக திசை திரும்பும் போதும் வனப்பகுதிகளில் அவர்களைத் தரையிறக்க வேண்டியது இருக்கும். எனவே, அவர்களுக்கு உயிர்பிழைத்திருக்கப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

மனித எல்லைகள்

தொகு

மனிதர் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக மிக் கடுமையான குளிரைத் தாங்க முடியாது. மனிதர் மூன்று நாட்களுக்கு மேல் நீர் இல்லாமல் உயிர் வாழ முடியாது. மனிதர் மூன்று கிழைமைகளுக்கு மேலாக உணவு இல்லாமல் உயிர் வாழ முடியாது.

முதல் உதவி

தொகு

முதல் உதவி (குறிப்பாக வனப்பகுதிகளில் முதல் உதவி) ஒரு நபர் அவசர காலங்களில் உயிர்பிழைத்திருக்கவும்,காயங்கள் மற்றும் நோய்களுடன் செயல்பட வைக்க உதவும். இல்லையெனில், அந்த காயங்கள் மற்றும் நோய்கள் அந்த நபரை மேலும் ஆட்கொண்டு உயிரிழப்பை ஏற்படுத்தும்.

  • பொதுவான மற்றும் ஆபத்தான காயங்கள் பின்வருமாறு:
  • விஷக்கடிகள்
  • எலும்பு முறிவுகள்
  • வெந்தபுண்
  • தலை வலி
  • மாரடைப்பு
  • குருதிப்போக்கு
  • உடல் வெப்பம் குறைதல் அல்லது அதிகரித்தல்
  • உணவு, விலங்கு தொடர்பு, அல்லது அருந்தத்தகாத நீர் மூலம் தொற்று நோய் பரவுதல்
  • விஷ செடிகள் அல்லது விஷ பூஞ்சைகள் மூலம் வீஷம் ஏறுதல்
  • குறிப்பாக கணுக்கால் சுளுக்குகள்.

உயிர் பிழைத்தவர்(Survivor) முதலுதவிப் பெட்டியில் உள்ள குறிப்புகளைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். மருத்துவ தாவரங்களை இனம் அறிந்து மற்றும் அதன் பலன் அறிந்து பயன்படுத்துவது மேலும் உதவும். எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருப்பின் அந்த பகுதியை அசையவிடாமல் மரப்பட்டை உதவியுடன் அந்தப் பகுதியைக் கட்ட வேண்டும்.

தங்குமிடம்

தொகு

தங்குமிடம் அமைக்க வேண்டிய சூழ்நிலைகளில் 1) குகை அல்லது கீழே விழுந்த மரம் போன்ற இயற்கைத் தங்குமிடங்கள், 2) பனிக் குகை, மரம் அருகே குழி தோண்டி இயற்கையுடன் இணைந்த தங்குமிடங்கள் , அல்லது 3) கூடாரம் , மரவீடு போன்ற செயற்கைத் தங்குமிடங்கள் என உருவாக்கிக் கொள்ளும் திறமை வேண்டும்.

தீயை உருவாக்குவது உடல் மற்றும் மனதளவில் ஒரு புது உற்சாகத்தை அதிகரிக்கிறது.தீயை உருவாக்கும் உபகரணம், தீக்குச்சி ஆகியவை இல்லாமல் சிக்கிமுக்கி கல் , எஃகு வெடிமருந்தைப் பயன்படுத்தி தீயை உருவாக்குவது பற்றி உயிர்பிழைத்தல் புத்தகங்கள் மற்றும் பயிற்சிகளில் அதிகம் விளக்கப்படும். வனப்பகுதிகளுக்கு செல்லும் முன் இந்த பயிற்சிகள் பெறுவது சிறந்தது.

தீ , உங்கள் உடலை குளிரில் சூடெற்ற , ஈரத் துணிகளை உளர்த்த , தண்ணீரைச் சுட வைக்க , உணவைச் சமைக்க போன்ற உயிர் பிழைத்திருக்க தேவையான பலவற்றை உங்களுக்குக் கொடுக்கிறது. மேலும், விலங்குகளிடமிருந்து உங்களை பாதுகாக்கிறது.பயத்தைப் போக்கி பாதுகாப்பு உணர்வையும் தரும்.

தண்ணீர்

தொகு

ஒரு மனிதன் தண்ணீர் உட்கொள்ளாமல் சராசரியாக மூன்று முதல் ஐந்து நாட்கள் வாழ முடியும். ஆபத்து சூழ்நிலைகளில், உடலில் உள்ள தண்ணீரை வியர்வை மூலம் தேவையற்ற முறையில் இழக்கக்கூடாது. உடற்பயிற்சி தண்ணீர் தேவையை அதிகரிக்கிறது.
பொதுவாக, ஒரு மனிதன் சாதாரணமாகவே ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முதல் அதிகபட்சம் நான்கு லிட்டர் தண்ணீர் வரை சூடான, உலர்ந்த, அல்லது குளிர் காலநிலைகளில் உடலிலிருந்து இழக்கின்றான்.
வனாந்தரத்தில் நீர்ப்போக்கை தவிர்க்கவும் உடல் ஒழுங்காகச் செயல்படவும் பொதுவாக நான்கு முதல் ஆறு லிட்டர் தண்ணீர் அல்லது பிற திரவங்கள் ஒவ்வொரு நாளும் தேவைப்படுகிறது.அமெரிக்க இராணுவத்தின் உயிர்பிழைத்தல் கையேடுகளில் தாகத்தின் போது மட்டும் தண்ணீர் குடிப்பது நீர்ப்போக்கிற்கு வழிவகுக்கிறது எனவும், எனவே குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தண்ணீர் குடித்துக்கொன்டே இருப்பது நல்லது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடலில் தண்ணீர் பற்றாக்குறையால் சோம்பல், தலைவலி, தலைச்சுற்றல், குழப்பம் ஏற்பட்டு இறுதியில் மரணம் கூட ஏற்படலாம்.குறைந்த அளவு நீர்ப்போக்கு கூட சகிப்புத்தன்மையை குறைத்து , கவனத்தைச் சிதறடிக்கும்.
அடர்த்தியான மஞ்சள் அல்லது பழுப்பு வண்ண சிறுநீர் , நீர்ப்போக்கினைக் குறிக்கும்.எனவே, நீர்ப்போக்கினைத் தவிர்க்க அதிகளவு நீரைக் குடிப்பது மிக முக்கியம்.

உணவு

தொகு

உண்ணத்தகுந்த கிழங்குகள், பழங்கள், காளான், கொட்டைகள், பீன்ஸ், தானியங்கள், இலைகள், கள்ளி செடிகள் மற்றும் பாசிகள் ஆகியவைகளைத் தேடி வேகவைத்து உண்ண வேண்டும். இலைகள் தவிர மேற்கூறிய உணவுகள் , கலோரிகளை அதிக அளவு வழங்குகின்றன, இவை உடலுக்குத் தேவையான ஆற்றலை அதிக அளவு தருகின்றன. காட்டில் அல்லது பாலைவனத்தில் தாவரங்கள் அவைகளின் நிலைத்தன்மை காரணமாக கண்டுபிடிக்க எளிய உணவு ஆதாரங்களாக இருக்கின்றன. எனவே, அதிக ஆற்றலை வீணடிக்காமல் உணவினைப் பெற முடியும். விலங்குகளை வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மூலம் உணவைப்பெற அதற்குத் தேவையான உபகரணங்கள் (அம்பு , வேட்டைக் கண்ணிகள் , வலை ) மற்றும் அதற்கான திறமைகளும் வேண்டும்.
உயிர்பிழைத்தவர் , காப்பாற்றப்படும் வரை தனக்கு வேட்டையாடும் திறன் இல்லையென்றால் வேட்டையாடுவதை தவிர்க்க வேண்டும் , இது ஆற்றலை வீணாக்கும் செயல் ஆகும்.

இடஞ்சுட்டல்(Navigation)

தொகு

உயிர்பிழைத்தல் சூழ்நிலைகளில் பாதுகாப்பான வழி மற்றும் மீட்கப்படுவதற்குப் பொருத்தமான இடத்தை அறிவது மிக அவசியமான ஒன்று .அதற்கு திசையறிதல் திறன் மிக முக்கியமாகும்.
இடஞ்சுட்டலின் வகைகள்:-
1. விண்வெளி இடஞ்சுட்டல்: சூரியன் , விண்மீன்களைப் பயன்படுத்தி திசைகளை கண்டறிந்து பயணிப்பது.(சூரிய நிழல்)
2. வரைபடம், திசைகாட்டி அல்லது புவியிடங்காட்டி பயன்படுத்தி பயணிப்பது.
3. இயற்கை இடஞ்சுட்டல்: சுற்றியுள்ள பொருட்களை பயன்படுத்தி இடஞ்சுட்டல்(அதாவது, பாசி, மரம், ஒரு கல் மீதுள்ள பனி)

 
பாசியுள்ள_மரம்.jpg

இந்த இரண்டு படங்களும் வட கோளத்தில் உள்ள ஒரே மரத்தின் அடிப்பகுதி ஆகும்.இது இடஞ்சுட்டலுக்கு உதவும்.
இடது படம், மரத்தின் வலது பக்கப் பகுதியாகும். இங்கு பாசி அதிகமாக உள்ளது. எனவே, இந்தப் பக்க பகுதியில் காற்றின் ஈரப்பதம் அதிகம் , சூரிய ஒளி குறைவு (மேற்கு திசையாக இருக்கலாம்). அதேபோல், வலது படம் மரத்தின் இடது பக்க பகுதியாகும். இங்கு பாசி குறைவாக உள்ளது. எனவே, இந்தப் பக்க பகுதியில் காற்றின் ஈரப்பதம் குறைவு , சூரிய ஒளி அதிகம் (கிழக்கு திசையாக இருக்கலாம்). இதன் மூலம் எந்த திசையை தேர்ந்தெடுப்பது என்பதை சுலபமாக அறிய முடியும்.
மலைப்பகுதிகளில் ஒரு ஆறு அல்லது ஓடையை கண்டுபிடிப்பது மலையில் கீழே இறங்க மிக சிறந்த வழி.
பொதுவாக சிலந்தி தனது நூலாம்படை(வலையை) வடக்கு தெற்காக பின்னும். இதன் மூலமும் திசையை அறிய முடியும்.

மன தைரியம்

தொகு

உயிர்பிழைத்தலில் மனம் மற்றும் அதன் செயல்பாடுகள் முக்கிய பங்கெடுக்கின்றன. தன்னை ஆபாய நிலையை அடையச் செய்த தவறுகளின் நினைவுகளை முதலில் மறக்க வேண்டும். அதன்பின் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொரு முறையும் யோசித்து அதன்பின் செயல்பட வேண்டும். பயத்தினைப் போக்க வேண்டும் , எதிர்மறை எண்ணங்களைக் குறைக்க வேண்டும். நிறைய பொதுமக்கள் எந்த பயிற்சியும் இல்லாமல் இதுபோன்ற ஆபாய நிலையைக் கடந்து உயிர்பிழைத்திருக்கிறார்கள். எனவே, நேர்மறை எண்ணங்களை எண்ண வேண்டும்

முக்கிய உயிர் பொருட்கள்

தொகு

மலைப்பகுதிக்குள் பயணம் செய்யும் போது உயிர்பிழைத்திருக்கத் தேவையான பொருட்கள் அடங்கிய பெட்டியினை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.அதில் கூர்மையான கத்தி , தீக்குச்சி , முதல் உதவி பெட்டி , மீன் கொக்கிகள் , கை மின்விளக்கு பொன்றவை இடம் பெற வேண்டும்.

பொதுவான புனைவுகள்

தொகு

சிலர் உண்ணத்தக்க உணவுகளை உணர்வுகள் மூலம் கண்டறிய இயலுமென்றும், சிலர் சிறிய அளவு உணவை உட்கொண்டு உடம்பில் எதுவும் பெரிய மாற்றங்கள் எற்படுகிறதா என்பதை உணர்ந்த பின் அதை உண்ணச் சொல்கிறார்கள். இவை இரண்டும் தவறான புனைவுகளே சிறிய அளவு விஷமுள்ள உணவில் கூட பெரிய அளவில் உடலில் கேடுதலை உருவாக்கும்.
பல முக்கிய உயிர்பிழைத்தலில் நிபுணர்கள் நீர்ப்போக்கு நோயின் போது நீர் இல்லையென்றால் சிறுநீரை குடிக்கச் சொல்கிறார்கள். எனினும் , அமெரிக்க ஐக்கிய நாடுகளின் விமானப்படையின் உயிர்பிழைத்தல் கையேடில் (AF 64-4) இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள். இதற்கு சிறுநீரில் அதிக அளவு உப்பு அசுத்தங்கள், மற்றும் சில நேரங்களில் பாக்டீரியா போன்ற காரணங்களால் அதை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் .