தமிழர் வாழ்வியல் சடங்குகள்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
ஒரு தனி மனிதனின் பிறப்பு முதல் அவனுடைய இறப்பு வரையிலும் பல படிநிலைகளைத் தாண்டி வருகிறான். அவ்வாறாகச் செய்யப்படும் காரியங்கள் ஒரு சில வரையறுக்கப்பட்ட பழக்க வழக்கங்களுக்கு உட்படுத்தப்பட்டு சமுதாயத்திற்குள்ளாகவே பரவலாகச் செய்யப்படும் பாங்கினையும் காண முடிகின்றது. இவ்வழக்கங்களே காலப்போக்கில் சடங்குகள் என்று பெயர பெற்றது. சடங்குளை ஒரு சமுதாயத்தின் பண்பாட்டின் அடிப்படையில் பிரிக்க முடியாத ஓர் அங்கம் எனலாம். உலகம் முழுவதும் சடங்குகள் காலத்திற்கேற்ப மாறியோ அல்லது சடங்குகளைச் செய்பவரின் தேவைக்கேற்ப எளிமைப்படுத்தப்பட்டோ பரிணாமத்திற்கு வித்திட்டிருக்கலாம். ஆனால், சடங்குகளை நிச்சயமாக யாராலும் மறக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது. சில இடங்களில் சடங்குகள் பரிணாமத்திற்கு உட்படுத்தப்பட்டு விரிவாக்கவும் பட்டிருக்கலாம். ஒரே சடங்கினை வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த இருவேறு சமுதாயத்தினர் மேற்கொள்வது, சடங்கின் பன்முகத் தன்மையையும் ஏற்புடைத் திறனையும் காட்டுகின்றது. பண்பாட்டிற்கு நேரடித் தொடர்பில்லாத சடங்குகளும் மதங்களின் அடிப்படையில் ஓர் ஊடகமாக மாறி காலப்போக்கில் நிலைத்து விடுகின்றன. சில நேரங்களில் காலத்தின் வேகத்தாலும் சடங்குகளின் பரிணாம மாற்றத்தாலும், மூதாதையர்களின் பல்வேறான சடங்குகளின் அடிப்படைகள் கைவிடப்பட்டுப் புதிய கூறுகளும் இணைக்கப்படும் வாய்ப்பும் இருக்கின்றது. சடங்கு என்பது ஒருபோதும் தன் நிலையிலிருந்து விலகிச் செல்வதே இல்லை. தமிழர்களின் வரலாற்றுப் பாரம்பரியங்களிலேயே விழாக்களும் சடங்குகளும் அவன் வாழ்வோடு ஒன்றியைந்த புலனாகும் என்று அறிஞர்கள் பகருகின்றனர். தமிழர்களின் வாழ்வியல் முறையில் விழாக்களும் சடங்குகளும் பெருமை வாய்ந்தவையாகவும் காணப்படுகின்றன. தமிழர்களின் விழாக்களுக்கும் சடங்குகளுக்கும் முக்கியமான தனிச்சிறப்புகள் உண்டெனில் அது மிகையாகாது. ஒரு மனிதனின் வாழ்வில் நிகழும் முக்கிய நிகழ்வுகளைக் குறித்து ஒவ்வொரு சமூகமும் அது தொடர்பான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கொண்டிருக்கின்றது. இத்தகைய சடங்குகள் சமயப் பின்புலன்களைப் பற்றியதும் சமயச் சார்புடையனவாகவுமே இருக்கின்றது. ஆகவே, வெறுமனே சடங்குகள் அல்லது சம்பிரதாயங்கள் என்று சொல்லப்படுவன மனிதனின் முற்போக்குச் சிந்தனையில் அமைந்த ஓர் ஏடல் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் சடங்கு சம்பிரதாயங்கள் என்று சொல்லப்படுவன ஒரு சமுதாயத்தின் பண்பாடு என்றும் அவர்களின் நம்பிக்கை அல்லது இறை விசுவாசத்தின் கண்ணாடி என்றும் கூறலாம்.