தமிழிசை ஆய்வுகள்

தமிழிசை ஆய்வுகள் என்பது தமிழிசை குறித்து ஆய்வு செய்தோர் மற்றும் ஆய்வு நூல்களையும் குறிக்கும். ஒரு காலகட்டத்தில் தமிழ் மொழிக்கு இசைமரபு இல்லை என்றும், தமிழ்மொழியில் இசைநூல்கள் இல்லை என்றும், பிற மொழியிலிருந்து தமிழன் பெற்றவையே மிகுதி என்றும் கூறப்பட்டு வந்தது. இக்கருத்துகளுக்கு முடிவு தரும் நிலையிலும் இசைத்தமிழின் வளர்ச்சியையும், நுட்பங்களையும் எடுத்துரைக்கும் வகையிலும் உ.வே.சாமிநாதையர் 1892-இல் சிலப்பதிகாரத்தை அச்சில் பதிப்பித்து வெளியிட்டார். இந்நூலும் இந்நூலுக்கு எழுந்த அரும்பத உரை, அடியார்க்கு நல்லார் உரை ஆகியவையும் இசைத்தமிழ் வளங்களையெல்லாம் நமக்கு எடுத்துணர்த்தின. சிலப்பதிகாரத்தையும் அதன் அரும்பத உரை, அடியார்க்கு நல்லார் உரையையும் மையமாகக் கொண்டு இசைத்தமிழ் ஆய்வுகள் தோன்றலாயின. சில ஆய்வு நூல்கள்:

  • தஞ்சை. இராவு சாகிபு. மு. ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் தொகுதி I, II (1917) கருணாமிர்த சாகரத் திரட்டு என்ற நூல்கள்.
  • மதுரை எம். கே. எம். பொன்னுச்சாமியின் பூர்வீக சங்கீத உண்மை (1930)
  • விபுலானந்த அடிகளாரின் யாழ் நூல் (1947)

தஞ்சை மு. ஆபிரகாம் பண்டிதர்

தொகு

1892-இல் உ.வே.சாமிநாதையர் சிலப்பதிகாரத்தை வெளியிட்டார். இந்நூல் வாயிலாகவும் இந்நூலுக்கு எழுந்த உரைகள் வாயிலாகவும் தமிழ்க் கலைச் செல்வங்கள் பற்றி பலர் ஆராய முற்பட்டனர் இவ்வகையில் இசைத்தமிழ் ஆய்வினைத் தொடங்கி வைத்தவர் தஞ்சை மு. ஆபிரகாம் பண்டிதர். இவர் எழுதி வெளியிட்ட கருணாமிர்த சாகரம் என்ற நூல் தமிழிசை பற்றிய ஆய்வுகளுக்கு முன்னோடி நூலாக விளங்குகிறது. இசைத்தமிழ் ஆய்வினைத் தொடங்கி வைத்ததோடு தமிழில் இசைப் பயிற்சி நூல்கள் இல்லை என்ற குறையை நீக்கும் பொருட்டு, தமிழில் பயிற்சிப் பாடல்கள் அடங்கிய கருணாமிர்த சாகரத் திரட்டு என்ற நூலையும் வெளியிட்டார். தஞ்சையில் இசைத்தமிழ் ஆய்வு மாநாடுகளை நடத்தி, இசைத்தமிழ் வளங்களையெல்லாம் உலகறியச் செய்தார்.

எம். கே. எம். பொன்னுச்சாமி

தொகு

மதுரையைச் சேர்ந்த எம். கே. எம். பொன்னுச்சாமி தாம் எழுதிய இசைத் தமிழ் ஆய்வு நூலிற்கு பூர்வீக சங்கீத உண்மை என்று பெயரிட்டார். சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் நிலவிய இசை பற்றிய உண்மைகளை மீண்டும் கொண்டு வருவதே இந்நூலின் நோக்கம் என்றும், இதனால் இதற்குப் 'பூர்வீக சங்கீத உண்மை' என்று பெயரிடப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் நூன் மரபு, கர்த்தா ராகத்தின் நிர்ணயம், மூர்ச்சை பிரசுதாரம், கர்த்தா இராகங்களும் அனுபவத்திலிருக்கிற ஜன்ய இராகங்களும், இசை நுணுக்கம் என்னும் சுதிபேத ராக சூட்சுமம் ஆகிய ஐந்து பகுதிகளைக் கொண்டது. எம். கே. எம். பொன்னுச்சாமி அகமதாபாத்தில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்கு மைசூர் மன்னரின் உதவியோடு சென்று அம்மாநாட்டில் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் இவர் கூறிய தாய் இராகம் 32 என்கிற கொள்கை விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

விபுலானந்த அடிகளார்

தொகு

விபுலானந்த அடிகள் பதினான்கு ஆண்டுகள் மேற்கொண்ட தமிழிசை ஆய்வின் அடிப்படையிலும், சிலப்பதிகாரத்தில் யாழ் பற்றிய குறிப்புகள் அடிப்படையிலும் யாழ்நூல் என்ற இசைத் தமிழாய்வு நூலை எழுதியுள்ளார். யாழ்நூல் பாயிரவியல், யாழ் உறுப்பியல், இசை நரம்பியல், பாலைத் திரியியல், பண்ணியல், தேவார இயல், ஒழிபியல் என்ற ஏழு இயல்களைக் கொண்டு அமைந்துள்ளது. இந்நூலில் இசை இலக்கணங்கள் பற்றிய செய்திகள் உள்ளன; இந்நூல் இசை இலக்கிய ஆய்வாகவும் அமைந்துள்ளது. தேவார இயலில் 103 பண்களில் தேவாரப் பாடலில் காணப்படும் பண்கள், கட்டளை விவரங்களை விபுலானந்தர் குறிப்பிட்டுள்ளார். பழந்தமிழிசை மரபிற்கும் வடநாட்டிசை மரபிற்கும் அமைந்த தொடர்பு நிலையையும் இதில் விளக்கியுள்ளார்.

பிற ஆய்வாளர்கள்

தொகு

இசைத் தமிழ் ஆய்வில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில்

  1. குடந்தை ப. சுந்தரேசன்
  2. கு.கோதண்டபாணி பிள்ளை
  3. பேராசிரியர். க.வெள்ளை வாரணனார்
  4. பேராசிரியர். தனபாண்டியன்
  5. பேராசிரியர். வீ.ப.கா.சுந்தரம்
  6. பேராசிரியர். சாம்பமூர்த்தி
  7. பி.டி.ஆர்.கமலை தியாகராஜன்
  8. முனைவர். எஸ்.இராமநாதன்
  9. முனைவர்.சேலம். ஜெயலட்சுமி
  10. முனைவர்.எஸ்.சீதா

போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்.


தமிழிசையின் மேல் கடந்த 100 ஆண்டுகளில் நடந்த ஆய்வுகளின் நிலை பற்றி விபரமாக அறிய, “தமிழிசை ஆய்வும் மீட்பும்” எனும் இக்கட்டுரையைக் காணவும்[1].

  1. "தமிழிசை ஆய்வும் மீட்பும் - Tamilisai Retrieval". www.academia.edu. பார்க்கப்பட்ட நாள் 2022-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழிசை_ஆய்வுகள்&oldid=3426869" இலிருந்து மீள்விக்கப்பட்டது