விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்
விக்கிப்பீடியா என்பது இணையத்தில் இயங்குவதும், கூட்டுமுயற்சியால் உருவாக்கப்படுவதுமான கட்டற்ற பன்மொழிக் கலைக்களஞ்சியத் திட்டம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட விக்கிமீடியா பவுண்டேசன் எனப்படும் இலாப நோக்கற்ற அமைப்பு இதனை நிருவகித்து வருகின்றது. உலகெங்கும் உருவாகும் அறிவுத்திரளைத் திரட்டி எவரும் இலவசமாகப் பெறக்கூடிய வகையிலும், காப்புரிமைகள் போன்ற கட்டுப்பாடுகள் இன்றியும் வழங்குவதே விக்கிப்பீடியாத் திட்டத்தின் தலையாய நோக்கம் ஆகும். இந்த நல்ல நோக்கத்தைச் செயற்படுத்துவதில் இலட்சக்கணக்கான தன்னார்வலர்கள் ஒன்றுகூடி உழைத்து வருகிறார்கள். விக்கிப்பீடியாத் திட்டத்தின் கீழ் தற்போது 267 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் செயற்பட்டு வருகின்றன.
விக்கிப்பீடியாக்களில் எவரும் புதிய கட்டுரைகளை எழுதலாம், ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளில் புதிய பகுதிகளைச் சேர்க்கலாம், தேவையானால் மாற்றங்களையும் செய்யலாம் என்பதே இத் திட்டத்தின் சிறப்பு ஆகும். இதனால், ஒவ்வொரு நாளும் அனைத்து மொழிகளிலும் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதப்படுவதுடன், அவற்றிலுள்ள விடயங்கள் தொடர்ந்து இற்றைப்படுத்தப்பட்டும் வருகின்றன. தற்போது எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் மொத்தமாக 15 மில்லியனுக்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இவற்றுள் ஆங்கில மொழியில் 32 இலட்சங்களைத் தாண்டி வளர்ந்து வருகிறது. ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளிலும் பல இலட்சக்கணக்கான கட்டுரைகள் உள்ளன. இத்தகைய மொழிகளில் உள்ள கட்டுரைகள் விரிவானவையாகவும் ஆழமானவையாகவும் காணப்படுகின்றன.
தமிழ் விக்கிப்பீடியா
தொகுதமிழ் விக்கிப்பீடியா, உலகளாவிய விக்கிப்பீடியாத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2003 ஆம் ஆண்டில் தொடங்கியது. இன்று வரை தமிழ் விக்கிப்பீடியாவில் 21,452 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தொடக்கத்தில் மிகவும் மெதுவாகவே வளர்ந்தாலும், எவ்வித தொய்வும் இல்லாமல் படிப்படியாக வளர்ச்சி பெற்று வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதப்பட்ட கட்டுரைகள் சராசரியாக ஆண்டொன்றுக்கு 3,500. கடந்த இரண்டு ஆண்டுகளின் சராசரி 4,000 கட்டுரைகளாகக் கூடியுள்ளது. 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் 2.6 மில்லியன் தடவைகள் தமிழ் விக்கிப்பீடியா பார்வையிடப் பட்டுள்ளது. இது நாளொன்றுக்கு ஏறத்தாழ 88,000 பார்வைகள் ஆகும்.
பயனர்கள்
தொகுஇதுவரை 15,800 க்கு மேற்பட்டவர்கள் தம்மைப் பயனர்களாகப் பதிவு செய்துகொண்டுள்ளனர். எனினும் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்து வருபவர்களின் எண்ணிக்கை சுமார் 30 எனலாம். இவர்கள், இந்தியா, இலங்கை, கனடா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, செருமனி, நார்வே, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பல நாடுகளில் இருந்து பங்களிப்புச் செய்கின்றனர்.
வாய்ப்பு
தொகுஆங்கிலத்திலும், வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள வேறு பல மொழிகளிலும், பல தொகுதிகளைக் கொண்ட கலைக் களஞ்சியங்களை அச்சிட்டு வெளியிடுகிறார்கள். இவற்றை குறித்த கால இடைவெளீகளில் இற்றைப்படுதியும், விரிவாக்கியும் புதிய பதிப்புக்களையும் வெளியிட்டு வருகிறார்கள். தமிழில் இத்தகைய ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதானால் மிகுந்த உழைப்பும் பெருமளவு பணமும் தேவைப்படும். பின்னர் இவற்றைக் குறித்த கால இடைவெளிகளில் புதுப்பித்து வெளியிடுவதென்பது ஏறத்தாழ முடியாது என்றே கூறிவிடலாம். இவற்றையெல்லாம் ஒருவாறு செய்யலாம் என்று வைத்துக்கொண்டாலும், சாதாரண மக்கள் இலகுவாகப் பயன்பெறும் வகையில் இவற்றின் விலை இருக்காது.
இவ்வாறான தடங்கல்களை முறியடித்து, உலகின் அறிவுச் செல்வங்களை சாதாரண மக்களும் இலகுவாகப் பெறத்தக்கதாகத் தமிழில் கலைக்களஞ்சியமொன்றை உருவாக்குவதற்கான வாய்ப்புத் தமிழ் விக்கிப்பீடியா மூலம் கிடைத்துள்ளது. உலகெங்கும் வாழும் பல துறைகளையும் சேர்ந்த தமிழரிடம் பொதிந்து கிடக்கும் அறிவுச் செல்வத்தைச் சிறுகச் சிறுகச் சேகரித்துப் பெரும் அறிவுத் திரட்டாக உருவாக்குவதற்கான வழிமுறை இது.
70 கோடித் தமிழர்களில் சில நூறு பேர்களாவது, தமது நேரத்தின் ஒரு சிறு பகுதியைத் தமிழ்ச் சமூகத்தின் நன்மைக்காகச் செலவிட முன்வருவார்களேயானால் மிக விரைவிலேயே தமிழ் விக்கிப்பீடியா, தமிழரினதும், தமிழ் மொழியினதும் பல்துறை வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்யும் வாய்ப்புக்கள் உண்டு. இந்த வலையமைப்பு பல வருடங்களாக இயங்கி வருகிறது.
கூடுதல் தகவல்கள்
தொகுமாநாடுகளில் தமிழ் விக்கிப்பீடியா
தொகு- ஆர்சென்டீனாவில் நிகழ்ந்த விக்கிமேனியா மாநாட்டில் பயனர் சுந்தர் (ஆங்கில மொழியில்)
ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா
தொகு- சென்னை ஆன்லைனில் பயனர் மயூரநாதன் நேர்காணல், மே 30, 2009
- 'தினமணி' நாளிதழில் தமிழ் விக்கிப்பீடியா குறித்த கட்டுரை ஆகஸ்ட் 18, 2009 - மு. இளங்கோவன்
- விக்கிப்பீடியா- கூட்டுழைப்பு - திறந்த புலமைச்சொத்து மல்லிகை இதழில் பயனர் மு. மயூரனின் கட்டுரை
- பயனர் நற்கீரன் - நேர்காணல்! விக்கிப்பீடியா பற்றி...
- தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள்
வலைப் பதிவுகளில் தமிழ் விக்கிப்பீடியா
தொகு- கட்டறுக்கும் அறிவு - கட்டற்ற பகிர்வு (விக்கிபீடியா அறிமுக வலைப்பதிவுகள்) - மு.மயூரன்
- சிலது விட பலது பெரிதா? - விக்கி தத்துவம்!! - வெளி கண்ட நாதர் - 24/05/2006
- தமிழ் விக்கிபீடியா முன்னோடி இ. மயூரநாதன் - மின் அஞ்சல் சந்திப்பு - நற்கீரன் - 29/07/2005
- தமிழ் விக்கிபீடியா வில் உங்கள் பங்களிப்பு! - வா. மணிகண்டன் - 11/04/2005
- விக்கிபீடியா - சந்தோஷ் குரு - 10/04/2005